Published : 02 Jan 2018 11:40 AM
Last Updated : 02 Jan 2018 11:40 AM
கடலூர், கோவை, குமரி மாவட்டங்களை அடுத்து தஞ்சாவூரில் இன்று ஆய்வுப் பணி மற்றும் பல விழாக்களில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திற்கு திமுகவினர் கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பு கோஷங்கள் எழுப்பினர். இதில் திமுகவின் முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், கட்சி உறுப்பினர்கள் முதலானோர் கலந்துகொண்டனர்.
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தை உருவாக்கிய எம்ஜிஆருக்கு பல்கலைக் கழக வளாகத்தில் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்தச் சிலையை திறந்துவைக்கும் விழா, தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வுப் பேரணியைத் தொடங்கி வைத்தல், சரஸ்வதி மஹாலைப் பார்வையிடுதல், திருவையாறு தியாகராஜரின் 171-வது ஆராதனை விழாவில் பங்கேற்றல் முதலான நிகழ்ச்சிகளில் ஆளுநர் கலந்து கொள்வதற்காக தஞ்சாவூர் வந்திருந்தார்.
இன்று காலை 9 மணிக்கு தஞ்சாவூர் புதிய பேருந்து நிலைய வளாகத்தில், தூய்மை இந்தியா திட்டத்தை விளக்கும் பொருட்டு, விழிப்புணர்வுப் பேரணி தொடங்கியது. இந்தப் பேரணியைத் தொடங்கி வைக்க, தஞ்சை பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகையில் தங்கியிருந்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், புறப்பட்டு பேருந்து நிலையத்துக்கு வந்தார்.
அப்போது பேருந்து நுழைவாயிலுக்கு அருகில் முன்னாள் அமைச்சர்கள் டிஆர். பாலு, எஸ்எஸ்.பழநிமாணிக்கம், மாவட்டச் செயலாளர் துரை சந்திரசேகரன், கல்யாணசுந்தரம் உள்ளிட்ட திமுகவினர் ஏராளமானோர் கருப்புக் கொடியேந்தி கோஷங்கள் எழுப்பினர். மாநில அரசின் நிர்வாகத்தில் தலையிடாதீர்கள் என்று கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பிறகு ஆளுநர் விழிப்புணர்வுப் பேரணியைத் தொடங்கி வைத்தார். இதையடுத்து தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டுள்ள எம்ஜிஆரின் மார்பளவுச் சிலையைத் திறந்து வைத்துப் பேசினார்.
பின்னர், மாலை 3.30 மணி முதல் 5 மணி வரை பொதுப்பணித் துறை சுற்றுலா மாளிகையில் மக்கள் பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், அரசியல் கட்சிப் பிரமுகர்கள் மற்றும் பொது நல அமைப்புகளின் பிரதிநிதிகளை நேரில் சந்தித்துப் பேசுகிறார்.
இந்த விழாவில் ஆளுநருடன் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ. அண்ணாதுரை, தஞ்சை மாநகராட்சி ஆணையர் வரதராஜூ முதலானோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT