Published : 17 Dec 2023 04:08 AM
Last Updated : 17 Dec 2023 04:08 AM

கனமழை எச்சரிக்கை எதிரொலி - நெல்லை மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

படம்: மு. லெட்சுமி அருண்.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கா.ப.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும், பிற இடங்களிலும் நேற்று லேசான மழை பெய்தது. காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியிலுள்ள நாலு முக்கில் 11 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. இதுபோல் ஊத்து பகுதியில் 9, காக்காச்சியில் 4, மாஞ்சோலையில் 2 மி.மீ. மழை பெய்திருந்தது.

பாபநாசம் அணை நீர்மட்டம் 124.80 அடியாக இருந்த நிலையில் அணைக்கு விநாடிக்கு 531 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 804 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது. மணி முத்தாறு அணை நீர்மட்டம் 84.05 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 174 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

அணையிலிருந்து 35 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது. இதனிடையே திருநெல்வேலி மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளதாக ஆட்சியர் கா.ப. கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பொழிவு இருக்கும் என்றும், ஒரு சில இடங்களில் கனமழை மற்றும் அதிக கன மழை பொழிய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும் மாஞ்சோலை, காரையாறு உள்ளிட்ட மலைகிராமங்களிலும், கடற்கரை பகுதிகளிலும், இவற்றை ஒட்டியுள்ள ஊர்களிலும், பிற பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் அதி கனமழை வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

படம்: என்.ராஜேஷ்

இதையொட்டி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மழை நேரங்களில் உரிய முன்னெச்சரிக்கையுடன் கவனமாக இருக்க வேண்டும். நீர் நிலைகளில் இறங்க வேண்டாம். மரங்கள், மின் கம்பங்கள் அருகில் செல்ல வேண்டாம். கால் நடைகளை பாதுகாப்பாக வைத்திட வேண்டும். சாலைகள், பாலங்களின் மீது வெள்ளம் சென்றால் எக்காரணம் கொண்டும் அதன் மீது செல்லக்கூடாது.

மேலும் அதி கனமழை பொழிவு உள்ள நேரங்களில் பாதுகாப்பு காரணங்களால் ஒரு சில இடங்களில் மின் தடை ஏற்படலாம். எனவே பொதுமக்கள் தகுந்த முன்னேற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும். மழை பாதிப்பு தொடர்பான தகவல்கள் மற்றும் புகார்களை 1077 என்ற எண்ணில் மாவட்ட கட்டுப் பாட்டு மையத்துக்கோ, 1070 என்ற எண்ணில் என்ற மாநில கட்டுப் பாட்டு மையத்துக்கோ தெரிவிக்கலாம்.

தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் தொடர்பான உதவிக்கு 101 மற்றும் 112; மழைக்கால நோய்கள் தொடர்பான சந்தேகங்களுக்கு 104; அவசர மருத்துவ உதவிக்கு 108; மின்சாரம் தொடர்பான புகார்களுக்கு 'மின்னகம்' உதவி மையத்தை 94987 94987 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x