Published : 16 Dec 2023 09:35 PM
Last Updated : 16 Dec 2023 09:35 PM
மதுரை: நீதிமன்றம் உத்தரவிட்டும் கோயில் கொடை விழா நடத்தப்படாதது தொடர்பான அவமதிப்பு வழக்கில் அறநிலையத் துறை இணை ஆணையர், காவல் ஆய்வாளர் ஆகியோர் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் இட்டேரி தாமரைச்செல்வி நடுத்தெருவைச் சேர்ந்த இ.சங்கரன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு மனு: எங்கள் ஊரில் செல்வவிநாயகர் கோயில், நல்லாச்சியம்மன் கோயில், தளவாய் மாடசாமி கோயில், உச்சிமகாளியம்மன் கோயில்கள் உள்ளன. இந்த கோயில்கள் சைவ பிள்ளைமார் சமூக மக்களின் நலனுக்காக எங்கள் மூதாதையர்களால் கட்டப்பட்டவை. கோயில் நிர்வாகத்தை 40 மனை சைவ பிள்ளைமார் நலச்சங்கம் நிர்வாகித்து வருகிறது. இந்தக் கோயில் கொடை விழாவில் சாமிகளுக்கு சைவ படையல் வைப்பது வழக்கம். இந்த பழக்கம் 70 ஆண்டுகளுக்கு மேலாக வழக்கத்தில் உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக மற்றொரு சமூகத்தினர் கோயில் அருகே ஆடு, கோழிகளை பலியிட்டு வருகின்றனர். இது பாரம்பரிய வழிபாட்டு முறைக்கு எதிரானது.
இந்த ஆண்டு திருவிழா செப்.12, 13 ஆகிய தேதிகளில் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்த திருவிழாவில் சாமிக்கு அசைவ படையல் போட வேண்டும் என மற்றொரு சமூகத்தினர் வலியுறுத்தி வருகின்றனர். கோயில் திருவிழாவில் கால்நடைகளை பலியிட அனுமதிக்கக் கூடாது. இது தொடர்பாக உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தோம்.
அந்த வழக்கில், ஏற்கெனவே திட்டமிட்டபடி சிறப்பு அதிகாரியை நியமித்து அனைத்து சமூகத்தினர் பங்கேற்புடன் திருவிழாவை நடத்த வேண்டும். திருவிழாவுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். அசைவ படையல் போட வேண்டும் என்றால் அறநிலையத்துறை இணை ஆணையரிடம் மனு அளிக்கலாம். அவ்வாறு மனு அளிக்கப்பட்டால் அந்த மனு மீது இணை ஆணையர் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவி்டப்பட்டது. இருப்பினும் திட்டமிட்டபடி கோயில் கொடை விழா நடத்தப்படவில்லை. நீதிமன்ற உத்தரவை அறநிலையத்துறை இணை ஆணையரும், மு்ன்னீர்பள்ளம் காவல் ஆய்வாளரும் நிறைவேற்றவில்லை. இதனால் இருவர் மீதும் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. முன்னீர்பள்ளம் காவல் ஆய்வாளர் இன்னோஸ்குமார் ஆஜராகி, கோயில் கொடை விழா எளிமையாக நடத்தப்பட்டதாக தெரிவித்தார். அறநிலையத் தறை சார்பிலும் கொடை விழா நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் வழக்கறிஞர் கே.பி.நாராயணகுமார் வாதிடுகையில், அறநிலையத் துறை இணை ஆணையர் வழக்கறிஞர் நோட்டீஸுக்கு பதிலளித்து அனுப்பிய நோட்டீஸில் கோயிலில் கொடை விழா நடைபெறவில்லை எனக் கூறியுள்ளார்.
இதையடுத்து, நீதிமன்ற அவமதிப்பு மனுவுக்கு அறநிலையத் துறை இணை ஆணையர், முன்னீர்பள்ளம் காவல் ஆய்வாளர் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT