Published : 16 Dec 2023 06:54 PM
Last Updated : 16 Dec 2023 06:54 PM
புதுடெல்லி: தொப்பூர் கணவாய் பகுதியில் விபத்தை தடுக்க ரூ.775 கோடியில் சாலைகளை சீரமைப்பு பணிக்காக டெண்டர் கோரப்பட்டு உள்ளது. மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் சார்பில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தருமபுரி எம்.பியான டி.என்.வி.செந்தில்குமார் இது குறித்து ‘இந்து தமிழ் திசை’யிடம் கூறியது: “நான் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு கடந்த 2019-ஆம் ஆண்டு தொப்பூர் கணவாய் பகுதியில் நடைபெறும் விபத்துகளை தடுக்க தீவிரமாக முயற்சித்தேன். இங்கு மாற்றுப் பாதை அமைத்து விபத்துகளை தடுக்க கோரிக்கை மனுவை மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரியிடம் வழங்கி இருந்தேன். அதன் தொடர் நடவடிக்கையாக 2020-ஆம் ஆண்டு நினைவூட்டல் கடிதமும், 2021-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் விதி 377-ல் கோரிக்கை வைத்திருந்தேன்.
2022-ஆம் ஆண்டு தொடக்கத்தில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. தொடர் வலியுறுத்தல் காரணமாக மத்திய அரசு ரூ.775 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்க மத்திய அரசு டெண்டர் கோரி உள்ளது. இச்சாலை அமைக்கப்பட்டால் விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புக்கள் பெருமளவு குறையும். இச்சாலையை பொதுமக்கள் பயன்படுத்தும் நேரமும் குறையும். இத்திட்டம் தருமபுரி மாவட்ட மக்களுக்கு கிடைத்த மிகப் பெரிய பலன். இந்தியாவிலேயே தொப்பூர் கணவாய் பகுதியில்தான் அதிக விபத்துக்கள் நடைபெறும் என்ற நிலை மாறும்.
தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் எங்கு சென்றாலும் நான்கு வழி சாலை உள்ளது. பெங்களூர் செல்ல இரண்டு புதிய வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. எனது தொகுதிக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளை விட அதிகமான போக்குவரத்துக்கு மற்றும் விவசாயத்துக்கு தண்ணீர் தேவைக்கு அதிக நிதியை பெற்று தந்திருக்கிறோம். ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் இரண்டாம் அலகு திட்டத்துக்கு ரூ.7,800 கோடி நிதியில் மத்திய அரசிடம் இருந்து ரூ.4,000 கோடியும் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தர்மபுரி தொகுதி மக்கள் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்கள் தருமபுரி செயலாக்கத்துக்கு வந்துள்ளன” என்று அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT