Published : 16 Dec 2023 04:35 PM
Last Updated : 16 Dec 2023 04:35 PM

தலைமை செயலகத்தில் கோப்புகளை ஆய்வு செய்த மதுரை ஓட்டுநர்: சாமானியனுக்கும் அதிகாரம் வழங்கும் ஆர்.டி.ஐ. சட்டம்

தலைமை செயலகத்தில் ஆய்வு செய்யும் ஓட்டுநர் ஞானசேகர்.

மதுரை: தகவல் அறியும் உரிமைச் சட்டம் வருவதற்கு முன், அரசு அலுவலகங்களில் சாமானியரால் தகவல்களைப் பெற முடியாததாக இருந்தது. அதிகாரமிக்கோர், அரசியல் வாதிகள் மட்டுமே விவரங்களைப் பெற முடிந்தது. மக்கள் தங்கள் அடிப்படை வாழ்வாதாரத் துக்கான உரிமைகளுக்குக்கூட லஞ்சம் கொடுக்கக்கூடிய சூழல் இருந்தது. 2005-ம் ஆண்டு தகவல் அறியும் உரிமைச்சட்டம் வந்தபிறகு நிலைமை தலைகீழானது. சாமானியனும் அரசு அலுவலகங்களை எளிதாக அணுகி தகவல்களை பெற முடிகிறது. நவம்பர் 11-ம் தேதி மதுரையைச் சேர்ந்த அரசுப் பேருந்து ஓட்டுநர் எஸ்.ஞானசேகர், சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர் மற்றும் சீர்மரபினர் அலுவலகத்தில் நேரடி கள ஆய்வு செய்துள்ளார்.

மதுரை மாவட்டம் செக்கானூரணியைச் சேர்ந்தவரான ஞானசேகருக்கு திருமணம் முடிந்து 3 குழந்தைகள் உள்ளன. அரசுப் பேருந்து ஓட்டுநராக மதுரை கோ.புதூர் போக்குவரத்துக் கிளையில் பணிபுரிகிறார். விடுமுறைக் காலங்களிலும், கிடைக்கும் நேரங்களிலும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மக்களுக்கான உரிமைகள் சலுகைகளைப் பெற்றுக் கொடுக்கும் பணி களில் ஈடுபட்டு வருகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது: மதுரை நெல்பேட்டையைச் சேர்ந்த ஹக்கீம் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் பாதிக்கப்படுவோருக்கு ஆதரவாக இருந்து நியாயம் கிடைக்க துணை நிற்பதை அறிந்தேன். தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்கு இவ்வளவு அதிகாரம் இருக்கிறதா? என வியந்தேன்.

நானும், அதன் அடிப்படையில் எப்படி தகவல்களைப் பெறலாம், அதைக் கொண்டு சமூகத்துக்கு எப்படி பயனுள்ள வகையில் பயன்படுத்தலாம் என்பதை அறிந்தேன். 2009-ம் ஆண்டில் கோவை அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர் வேலை கிடைத்து, 2013-ல் நடந்த திருமணத்துக்குப் பின் கோவைக்கும் மதுரைக்குமாக என்னால் போய் வர முடியவில்லை. மதுரைக்கு பணிமாறுதல் கேட்டு விண்ணப்பித்தேன். ஆனால், எனது கோப்பு பரிசீலனைகூட செய்யாமல் கிடப்பில் போடப்பட்டது. தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் எனது பணி மாறுதல் கோப்புப் பற்றிய விவரங்களைக் கேட்டு அறிந்தேன்.

தொடர்ச்சியான கண்காணிப்பால் எனது கோப்புகளையும், பணிமாறுதலுக்கான வாய்ப்புகளையும் திரட்டியதால் அதிகாரிகள் பரிசீலனை செய்து உடனடியாக எனக்கு மதுரைக்கே பணிமாறுதல் வழங்கினர். 2018-ல் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் குழு ஒன்று விரிவான ஆய்வு மேற்கொண்டு சீர்மரபினருக்கு டி.என்.டி., அதாவது சீர்மரபு பழங்குடியினர் சான்றிதழ் வழங்க எந்தத் தடையும் இல்லை என அரசுக்குப் பரிந்துரைத்தது. ஆனால், மத்திய அரசு டி.என்.டி., சான்றிதழும், மாநில அரசு டி.என்.சி., சான்றிதழும் என இரட்டைச் சான்றிதழ் முறை வழங்கப்படுகிறது.

இந்தச் சான்றிதழ் வழங்குவதில் தற்போது வரை பல்வேறு குளறுபடிகள் உள்ளன. அதற்குத் தீர்வுகாண நண்பர் ஒருவர் மூலம் அவரது பெயரில் ஐஏஎஸ் அதிகாரிகள் குழு அரசுக்குப் பரிந்துரைத்த அறிக்கையின் முழு விவரத்தைக் கேட்டேன். ஆனால், முழு விவரங்களையும் தராமல் வெறும் 105 பக்கம் மட்டும் அளித்தனர். அதில் முக்கிய சாராம்சங்கள் இல்லை. ஒரே சான்றிதழ் வழங்கும் நடைமுறைதான் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதிகாரிகள் அதை மறைத்து, அறிக்கையின் முழு விவரத்தையும் வழங்கவில்லை.

அதை அறிய நான், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள பிற் பட்டோர் மற்றும் மிகவும் பிற்பட்டோர் சீர்மரபினர் அலுவலகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் வழங்கிய அறிக்கையையும், அவர்களின் பரிந்துரை அடிப்படையில் வழங்கப்படும் இரண்டு விதமான சாதிச் சான்றிதழ் விவரங்களையும் ஆய்வு செய்வதற்காக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் பிரிவு 2 (j)-ன் கீழ் விண்ணப்பித்தேன். அதன் அடிப்படையில் பிற்பட்டோர் மற்றும் மிகவும் பிற்பட்டோர், சீர் மரபினர் அலுவலகத்தில் ஆய்வு செய்தேன். அதில், ஐஏஎஸ் அதிகாரிகள் வழங்கிய அறிக்கை 505 பக்கம் இருந்ததை அறிந்தேன்.

இது குறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது முரண்பாடான தகவல்களைத் தெரிவித்தனர். முழு விவரத்தையும் அறிய அறிக்கையின் 505 பக்கத்தையும் கேட்டுள்ளேன். அதற்கு அவர்கள், சிடியில் அறிக்கை இருப்பதாகவும், அதை நக லெடுத்து தங்கள் முகவரிக்கு அனுப்பி வைப்பதாகவும் தெரிவித்தனர். இப்படி அரசின் விசாரணை அறிக்கை, அரசு உத்தரவுகள், விண்ணப்பங்கள் நிலை, கோப்புகள் விவரங்களை என்னைப் போன்ற சாமானியனும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தால் பெற முடிகிறது. தற்போது நான் பெற்ற இந்த அனுபவங்களை மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுத்து வருகிறேன். என்னைப் போல் அரசின் எந்த அலுவலகத்தையும் நேரடி யாக கள ஆய்வு செய்யலாம். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x