Published : 16 Dec 2023 05:45 AM
Last Updated : 16 Dec 2023 05:45 AM

களஆய்வு, கட்டுமான நிறுவனங்கள் விளம்பரம் அடிப்படையில் அடுக்குமாடி குடியிருப்புக்கான கூட்டு மதிப்பு நிர்ணயம்: பதிவுத்துறை செயலர் உத்தரவு

சென்னை: அடுக்குமாடி குடியிருப்பு பதிவில் கூட்டு மதிப்பு என்பது பொதுமக்களிடம் களஆய்வு விசாரணை, கட்டுமான நிறுவனங்களின் விளம்பரம் மூலம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று மண்டல துணை பதிவுத் துறை தலைவர்களுக்கு பதிவுத்துறை செயலர் ஜோதி நிர்மலாசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அரசாணை:அடுக்குமாடி குடியிருப்புகள் பதிவில் பிரிக்கப்படாத பகுதி மற்றும் கட்டிடத்தின் விலை அடிப்படையில் கூட்டு மதிப்பு நிர்ணயம் செய்து கடந்த டிச.1-ம் தேதி வெளியிடப்பட்டது. இதன்மீது திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, தற்போது புதிய நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதன்படி, அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான கூட்டு மதிப்பு அந்தந்த மண்டலத்தின் துணை பதிவுத்துறை தலைவர்களால் நிர்ணயம் செய்யப்பட வேண்டும். அவ்வாறு நிர்ணயிக்கும்போது, பொதுமக்களிடம் மேற்கொள்ளப்படும் களஆய்வு விசாரணையில், கட்டுமான நிறுவனங்கள் செய்யும் விளம்பரம் மூலமாகவும் கண்டறியப்பட்டு நிர்ணயிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு கிராமத்தைப் பொறுத்தும், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான கூட்டு மதிப்பு, ஒவ்வொரு தெரு, சர்வே எண்களின் அடிப்படையில் நிர்ணயிக்க வேண்டும்.

அவ்வாறு நிர்ணயிக்கும்போது, புல எண் அல்லது தெருக்களுக்கு அவற்றின் சாதக, பாதக அம்சங்கள், வளர்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் புல எண் அல்லது தெருவாரியாக கூட்டு மதிப்பு நிர்ணயிக்க வேண்டும். அடுக்குமாடி குடியிருப்பின் ‘கார்பெட் ஏரியா’ உள்ளிட்ட அனைத்து ‘சேலபிள் ஏரியா’வைக் கருத்தில்கொண்டு சூப்பர் பில்ட்அப் ஏரியாவுக்கு கூட்டு மதிப்பு கணக்கிட வேண்டும்.

கூட்டு மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டபின் அதனை கட்டிட பரப்பின் மொத்த விஸ்தீரணத்துடன் பெருக்க வேண்டும். அப்படி பெருக்கி வரும் தொகை அல்லது ஆவணத்தில் குறிப்பிட்டுள்ள ஃப்ளாட்டின் மதிப்பு இவற்றில் எது அதிகமோ அதற்கு உரிய முத்திரை தீர்வை மற்றும் பதிவுக்கட்டணம் வசூலிக்க வேண்டும்.

ஒரு தெருவுக்கு ஒரேயொரு கூட்டு மதிப்பு நிர்ணயிக்க வேண்டும். ஒரு தெரு அல்லது புல எண்ணில் வரும் அனைத்து அடுக்குமாடி குடியிருப்புக்கும் இந்த மதிப்பு கடைபிடிக்க வேண்டும். தெரு இல்லாமல் சர்வே எண் மதிப்புள்ள பகுதிகளில் ஓர் அடுக்குமாடி குடியிருப்பு இருந்தால், துணை பதிவுத்துறை தலைவர் அதற்கென தனி மதிப்பு நிர்ணயிக்க வேண்டும்.

இவ்வாறு நிர்ணயிக்கப்பட்ட கூட்டு மதிப்பு, அதிகமாக அல்லது குறைவாக உள்ளது என்று அறியப்பட்டால் அதை பரிசீலித்து 10 சதவீதம் அதிகரித்தோ, குறைத்தோ நிர்ணயிக்கலாம். குறைத்து நிர்ணயித்தால் குடியிருப்புகளின் பட்டியலை அடுத்த மைய மதிப்பீட்டு குழுவின் முன்பாக தகவலுக்காக வைக்க வேண்டும். 10 சதவீதத்துக்கு மேல் குறைக்க வேண்டியிருந்தால் மைய வழிகாட்டி குழுவுக்கு அனுப்ப வேண்டும்.

சில அடுக்குமாடி குடியிருப்பில் வணிகம் மற்றும் குடியிருப்பு பயன்பாட்டுக்கு இணைத்து கட்டிடம் கட்டப்படலாம். வணிக முக்கியத்துவம் வாய்ந்த தெருக்களில் குறிப்பிட்ட சில தளங்கள் மட்டும் வணிக நிறுவனங்கள் அமைப்பதற்காக கட்டப்படலாம். அப்படியிருந்தால் வணிக பயன்பாட்டுக்கான பகுதிக்கு மட்டும் அந்த தெருவில் நிர்ணயிக்கப்படும் கூட்டு மதிப்பைவிட 50 சதவீதம் உயர்த்தி கணக்கிட வேண்டும். சில இடங்களில் அடுக்குமாடி குடியிருப்பு முழுவதும் வணிக பயன்பாட்டுக்கு கட்டப்பட்டால் அதற்கு துணை பதிவுத்துறை தலைவர் தனியாக கூட்டு மதிப்பு நி்ர்ணயிக்க வேண்டும்.

எந்தவொரு பகுதிக்குமான எந்தவொரு மதிப்பும், எந்த காலத்திலும் பதிவுத்துறை தலைவரால் தன்னிச்சையாக ஆய்வுக்கு உட்படுத்தி மாற்றப்படலாம். கூட்டு மதிப்பு நிர்ணயிக்கப்பட்ட பின், அதற்கு அதிகமான மதிப்பு கடைபிடிக்கப்பட்டால் அதனை அடுத்த ஆவணங்களுக்கு எடுக்கத் தேவையில்லை.

வீட்டுவசதி வாரியம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளுக்கு தற்போது அந்தந்த வாரியங்களால் பின்பற்றப்படும் நடைமுறையையே பின்பற்ற வேண்டும். இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

டிச.14-ம் தேதி ஒரே நாளில் ரூ.192 கோடி வருவாய்: கடந்த 14-ம் தேதி (நேற்று முன்தினம்) கார்த்திகை மாதத்தின் கடைசி சுபமுகூர்த்த நாள் என்பதால், அதிக அளவில் பத்திரப் பதிவுகள் நடைபெறும் என்று கணிக்கப்பட்டது. இதையடுத்து, ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 டோக்கன்களும், இரண்டு சார்பதிவாளர் அலுவலர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 டோக்கன்களும், தத்கால் டோக்கன் வழங்கப்படும் இடங்களில் கூடுதலாக 4 டோக்கன்களும் வழங்க உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், எதிர்பார்த்தபடி நேற்று முன்தினம் அதிக அளவில் பத்திரப் பதிவுகள் நடைபெற்றன. அந்த வகையில், கடந்த 14-ம் தேதி பதிவு செய்யப்பட்ட 22,060 ஆவணங்கள் மூலம் அரசுக்கு வருவாயாக ரூ.192 கோடி கிடைத்துள்ளது.

இந்த நிதி ஆண்டில் இதுவே மிகவும் அதிகமானது என்று பதிவுத் துறை செயலர் ஜோதி நிர்மலா சாமி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x