Published : 16 Dec 2023 05:49 AM
Last Updated : 16 Dec 2023 05:49 AM

அமலாக்கத் துறை அதிகாரியை கைது செய்து விசாரிக்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு அதிகாரம் உண்டு: சிபிஐக்கு மாற்றக் கோரிய மனு தள்ளுபடி

மதுரை/திண்டுக்கல்: லஞ்சம் வாங்கும் அமலாக்கத் துறை அதிகாரியை கைது செய்யவும், விசாரணை நடத்தவும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு முழு அதிகாரம் உண்டு என்று உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்டம், மேலூரைச் சேர்ந்த வழக்கறிஞர் விவேக் என்பவர், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

மத்திய அரசின் விசாரணை அமைப்பான அமலாக்கத் துறை, தமிழகத்தில் அமைச்சர்கள், அவர்களது உறவினர்கள், முக்கியப் பிரமுகர்களின் வீடுகளில் தொடர்ந்துசோதனை நடத்தி வருகிறது. இதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக, திண்டுக்கல் அரசு மருத்துவர் சுரேஷ்பாபுவிடம் லஞ்சம் வாங்கியதாக, மதுரை மண்டல அமலாக்கத்துறை அதிகாரி அன்கித் திவாரியை தமிழக லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கைது செய்தனர்.

மேலும், அதிகாரியின் வீடு மற்றும் அமலாக்கத் துறை அலுவலகத்தில் சோதனை நடத்தி,லேப்டாப், செல்போன் மற்றும்ஆவணங்களைக் கைப்பற்றி உள்ளனர். அமலாக்கத் துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அமைப்பாகும். அந்த துறையின் அதிகாரி மீது மாநில அரசு அமைப்புநடவடிக்கை எடுக்க முடியாது. மத்திய அரசு ஊழியர்கள் மீது,மாநில அரசு ஊழியர்கள் நடவடிக்கை எடுத்தால், அரசு இயந்திரத்தின் செயல்பாடுகள் பாதிக்கப்படும்.

அன்கித் திவாரி வழக்கை லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரித்தால் நியாயம் கிடைக்காது. எனவே, இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும். அதுவரை லஞ்ச ஒழிப்புபோலீஸ் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும். லஞ்ச ஒழிப்புத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எம்.சுந்தர், ஆர்.சக்திவேல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசுதலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் வாதிடும்போது, “மாநில அரசின் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பு லஞ்ச ஒழிப்புத் துறை. இந்த அமைப்புக்கு லஞ்சம் மற்றும் முறைகேட்டில் ஈடுபடும் மத்திய, மாநில அரசு ஊழியர்களை கைதுசெய்யவும், விசாரணைக்கு உட்படுத்தவும் அதிகாரம் உண்டு. இதற்காக தனி காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் அமலாக்கத் துறை அதிகாரி அன்கித் திவாரிசட்டப்படிதான் கைது செய்யப்பட்டுள்ளார். அவரைக் கைது செய்வதற்கு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு முழு அதிகாரம் உள்ளது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது” என்றார்.

தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா வாதிடும்போது, “அமலாக்கத் துறை அதிகாரி கைது நடவடிக்கையில் அரசியலமைப்புச் சட்டம் வகுத்துள்ள அனைத்துவிதிமுறைகளும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளன. அமலாக்கத் துறை அலுவலகம், அதிகாரியின் வீட்டில் சோதனையிடும்போது எந்த விதிமீறலும் நடைபெறவில்லை. எனவே,மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும்" என்றார். கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன் வாதிடும்போது, “இதேபோல, பல்வேறு மாநிலங்களிலும் மத்திய அரசு அதிகாரிகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன” என்றார்.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: மத்திய அரசு அதிகாரி தவறுசெய்தால், மாநில அரசின் லஞ்சஒழிப்பு போலீஸார் கைது செய்யக்கூடாது, விசாரணை நடத்தக் கூடாதுஎன்பதை ஏற்க முடியாது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றங்களும் பல உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளன.

அமலாக்கத் துறை அதிகாரியை கைது செய்த தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையின் நடவடிக்கை சட்டரீதியானதுதான். அதேபோல, மத்திய அரசு அதிகாரி கைது செய்யப்படும்போது, அந்த அதிகாரியின் அலுவலகம், குடியிருப்பில் சோதனை நடத்துவதும் விதிமுறைக்கு உட்பட்டதுதான். அதில் எந்த விதிமீறலும் இல்லை.

மத்திய அமலாக்கத் துறை அதிகாரியை கைது செய்யவும், விசாரணை நடத்தவும் மாநில அரசின் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு முழு அதிகாரம் உள்ளது. எனவே, இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டிய அவசியமில்லை. லஞ்ச ஒழிப்புத் துறையின் அதிகாரத்தை நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும் என்பது அவசியமற்றது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

சிறையில் முதல் வகுப்பு வழங்க உத்தரவு: மதுரை அமலாக்கத் துறை அதிகாரி அன்கித் திவாரிக்கு, சிறையில் முதல் வகுப்பு கேட்டு அவரது வழக்கறிஞர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு திண்டுக்கல் மாவட்ட முதன்மை நடுவர் நீதிமன்றத்தில், நீதிபதி மோகனா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அமலாக்கத் துறை அதிகாரி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் செல்வம், வருமான வரி தாக்கல் செய்பவர், அரசு அதிகாரி ஆகிய காரணங்களைக் கூறி, அன்கித் திவாரிக்கு சிறையில் முதல் வகுப்பு வழங்க வேண்டும் என்று வாதாடினார். இதற்கு அரசு வழக்கறிஞர் அனுராதா எதிர்ப்புத் தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மோகனா, அன்கித் திவாரிக்கு சிறையில் முதல் வகுப்பு வழங்குமாறு உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x