Published : 16 Dec 2023 06:31 AM
Last Updated : 16 Dec 2023 06:31 AM

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தேர்தல்: 7 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்தது

சென்னை உயர் நீதிமன்றத் தில் உள்ள எம்எச்ஏஏ வழக்கறிஞர்கள் சங்கத் தேர்தல் 7 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று சிஐஎஸ்எப், தமிழக போலீஸாரின் பாதுகாப்புடன் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

சென்னை: வழக்கறிஞர்களின் விசில் சத்தம் மற்றும் பலத்த கைதட்டலுடன் 7 ஆண்டுகளுக்குப் பிறகு ஆரவாரமாக சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் (எம்எச்ஏஏ) தேர்தல் நேற்று நடந்தேறியது. சென்னை உயர் நீதிமன்றத்தில் நூற்றாண்டு கண்ட பழமையான வழக்கறிஞர்கள் சங்கமான சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்துக்கு (எம்எச்ஏஏ) 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். கடந்த 2016-ம் ஆண்டு இந்த சங்கத்துக்கு தேர்தல் நடைபெற்றது. அதன்பிறகு பல்வேறு வழக்குகள் காரணமாக இந்த தேர்தல் தள்ளிப்போனது.

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் இந்த தேர்தல் நடந்தபோது பிரச்சினை ஏற்பட்டதால் தேர்தல் பாதியில் ரத்து செய்யப்பட்டது. அதன்பிறகு இந்த சங்கத் தேர்தலை பலத்த பாதுகாப்புடன் நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி தேர்தல் நடத்தும் அலுவலராக மூத்த வழக்கறிஞர் கபீர் நியமிக்கப்பட்டு 7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த தேர்தல் நேற்று நடைபெற்றது. எம்எச்ஏஏ வழக்கறிஞர் சங்கத்தில் பதிவு செய்துள்ள வழக்கறிஞர்களில் வாக்களிக்க தகுதியான 4,752 வழக்கறிஞர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டது.

இந்தத் தேர்தலில் தலைவர், துணைத் தலைவர், செயலாளர், பொருளாளர், நூலகர், 6 மூத்த செயற்குழு உறுப்பினர்கள், 5 இளநிலை செயற்குழு உறுப்பினர்கள் என மொத்தம் 16 பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. தலைவர் பதவிக்கு 9 பேரும், துணைத் தலைவர் பதவிக்கு 8 பேரும், செயலாளர் பதவிக்கு 10 பேரும், பொருளாளர் பதவிக்கு 9 பேரும், நூலகர் பதவிக்கு 11 பேரும், மூத்த செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு 42 பேரும், இளைய செயற்குழு உறுப்பினர் பதவிக்கு 35 பேரும் போட்டியிட்டனர்.

உயர் நீதிமன்றத்தி்ல் உள்ள எம்எச்ஏஏ சங்க கட்டிடத்தில் சிஐஎஸ்எப் மற்றும் தமிழக போலீஸாரின் ஐந்தடுக்கு பாதுகாப்புடன் காலை 10 மணி்க்கு தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. தேர்தல் நடைமுறைகள் அனைத்தும் கட்டிடத்துக்கு வெளியே 2 பெரிய திரைகளில் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. வாக்களிக்க சென்ற வழக்கறிஞர்களை இருபுறமும் வரிசையின் நின்ற வழக்கறிஞர்கள் விசி்ல் சத்தத்துடன், கைதட்டி ஆரவாரம் செய்து உற்சாகப்படுத்தினர். நேற்றிரவு தலைவர் மற்றும் செயலாளர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. மற்ற பதவிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x