Last Updated : 15 Dec, 2023 02:52 PM

2  

Published : 15 Dec 2023 02:52 PM
Last Updated : 15 Dec 2023 02:52 PM

‘புதுச்சேரி பள்ளி மாணவர்களுக்கு ரூ.5 கோடியில் தரமற்ற சைக்கிள்கள்’ - முதல்வரிடம் அதிமுக புகார்

புதுச்சேரி: ‘புதுச்சேரியில் பள்ளி மாணவர்களுக்கு ரூ.5 கோடியில் தரமற்ற சைக்கிள்கள் விநியோகம் நடந்துள்ளது. இம்முறைகேடு தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என்று அம்மாநில முதல்வர் ரங்கசாமியிடம் அதிமுக புகார் அளித்துள்ளது.

புதுவை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்படுகிறது. நடப்பு ஆண்டுக்கான சைக்கிள் கடந்த அக்டோபர் மாதம் வழங்கப்பட்டது. தரமற்ற சைக்கிள்களை அரசு வழங்கியிருப்பதாக இன்று அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் புகார் அளித்தார். முன்னதாக, புதுவை சட்டப்பேரவைக்கு தள்ளுவண்டியில் 3 சைக்கிள்களை அவர் எடுத்து வந்தார். அப்போது சட்டப்பேரவைக்கு வந்த பேரவைத் தலைவர் செல்வத்திடம் சைக்கிள்களை காண்பித்து புகார் தெரிவித்தார். தொடர்ந்து சட்டப்பேரவையில் இருந்த முதல்வர் ரங்கசாமியை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் மனு அளித்தனர்.

அந்த மனுவில், “புதுவை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9-ம் வகுப்பு படிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கும் இலவச சைக்கிள் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு மொத்தம் 9,390 மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக சுமார் ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இந்த நிதியில் ரூ.5 ஆயிரம் அளவில் தரமான சைக்கிள் வழங்கியிருக்கலாம். ஆனால், ரூ.12 ஆயிரத்துக்கு தரமற்ற சைக்கிள்கள் வாங்கப்பட்டுள்ளன.

சைக்கிள் வழங்கும்போதே துருப்பிடித்தும், உடைந்தும் உள்ளன. இந்த சைக்கிள்களை மாணவர்களுக்கு வழங்க மாட்டோம் என காரைக்காலில் எம்.எல்.ஏ-க்கள் நிகழ்ச்சியை புறக்கணித்துள்ளனர். பஞ்சாப்பை சேர்ந்த நிறுவனம் இந்த தரமற்ற சைக்கிளை வழங்கியுள்ளது. இவற்றை மாணவர்கள் ரூபாய் ஆயிரம், ரூபாய் ஆயிரத்து 500 என பழைய இரும்பு கடைகளில் வேறு வழியின்றி விற்றுள்ளனர்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சைக்கிள் தரமுள்ளதா என்பதை எந்த அரசு அதிகாரியாவது ஆய்வு செய்தார்களா? தற்போது பள்ளி மாணவர்களுக்கு ரூ.5 கோடி செலவில் வழங்கப்பட்டுள்ள சைக்கிள்கள் உபயோகப் படுத்த முடியாமல் உள்ளதற்கு பொறுப்பேற்கும் அதிகாரி யார்? அரசு துறைகளில் இதுபோன்ற தவறுகள் நடக்கும்போது உரிய நடவடிக்கை எடுக்காததால் முறைகேடு என்பதே அரசின் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாக உள்ளது. இந்த விலையில்லா சைக்கிள் வழங்கப்படும் இத்திட்டத்தில் நடைபெற்ற முறைகேடு சம்பந்தமாக துறை ரீதியான நேர்மையான அதிகாரிகள் தலைமையில் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x