Published : 15 Dec 2023 10:59 AM
Last Updated : 15 Dec 2023 10:59 AM

“குரூப் 2 முடிவுகள் தாமதம்... மாணவர்கள் வாழ்க்கையுடன் அரசு விளையாடக் கூடாது” - அன்புமணி

சென்னை: தொகுதி 2, 2ஏ பணிகளில் சேர்ந்து விடலாம் என்று ஆவலுடன் காத்திருந்த போட்டித் தேர்வர்களை தமிழக அரசும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமும் ஏமாற்றியிருக்கின்றன என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசுத் துறைகளில் தொகுதி 2, 2 ஏ பணிகளில் சேர்ந்து விடலாம் என்று ஆவலுடன் காத்திருந்த போட்டித்தேர்வர்களை தமிழக அரசும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமும் மீண்டும் ஒரு முறை ஏமாற்றியிருக்கின்றன. தொகுதி 2, 2 ஏ தேர்வுகளுக்கான விடைத்தாள்கள் திருத்தும்பணி 80% நிறைவடைந்துவிட்டது, மீதமுள்ள பணிகளும் முடிக்கப்பட்டு டிசம்பர் முதல் வாரத்தில் 6000 பேருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலினின் கைகளால் பணி நியமன ஆணைகள் வழங்கப்படும் என்று மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் அறிவித்திருந்த நிலையில், டிசம்பர் இரண்டாவது வாரம் நிறைவடைந்தும் எதுவும் நடக்கவில்லை. போட்டித் தேர்வு எழுதியவர்களின் மன உளைச்சல் அதிகரித்ததுதான் மிச்சம்.

தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள இரண்டாம் தொகுதி பணியிடங்கள் 121, தொகுதி 2ஏ பணியிடங்கள் 5097 ஆகியவற்றை நிரப்புவதற்கான ஆள்தேர்வு அறிவிக்கை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 23-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அப்பணிகளுக்கான முதல் நிலைத் தேர்வு முடிவுகள் முடிந்து கடந்த பிப்ரவரி 25-ஆம் தேதி நடத்தப்பட்ட முதன்மைத் தேர்வுகளின் முடிவுகள் கடந்த ஏப்ரல் மாதமே வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நவம்பர் மாதம் வரை வெளியிடப்படாததை கடந்த நவம்பர் 6-ஆம் தேதி அறிக்கை மூலம் சுட்டிக்காட்டியிருந்தேன். ஆனால், தாமதமே இல்லை; டிசம்பரில் முடிவு வெளியிடப்படும் என்று அமைச்சர் அளித்த வாக்குறுதி காற்றுடன் கலந்து விட்டது. ஆமையிடமும் வீழும் வேகத்தில் தான் டிஎன்பிஎஸ்சி செயல்படுகிறது.

தொகுதி 2, 2ஏ பணிகளுக்கான முதன்மைத் தேர்வை எழுதியவர்கள் வெறும் 52,000 பேர் மட்டும்தான். முதன்மைத் தேர்வில் ஒவ்வொரு போட்டியாளரும் 2 தாள்களை எழுத வேண்டும்; அதன்படி மொத்தம் 1.04 லட்சம் விடைத்தாள்களை திருத்த வேண்டும். அவை அனைத்தும் இரண்டே வகைப்பட்டவை தான். அவற்றை மிக எளிதாக திருத்தி விட முடியும். ஆனால் அதைக்கூட 10 மாதங்களாக திருத்தி, முடிவுகளை வெளியிட முடியாத நிலையில் தான் டிஎன்பிஎஸ் சி இருக்கிறது என்றால், அதற்கு பொறுப்பானவர்களும், ஆட்சியாளர்களும் போட்டித் தேர்வர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

தொகுதி 2, 2ஏ பணிகளுக்கான போட்டித்தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டு இரு ஆண்டுகள் நிறைவடையப் போகின்றன. ஒரு தேர்வுக்காக விண்ணப்பம் செய்வதில் தொடங்கி, முடிவுகளை அறிவதற்காக இரு ஆண்டுகள் காத்திருப்பது போட்டித் தேர்வர்களின் மனநிலையை கடுமையாக பாதிக்கும். ஆனால், இதுகுறித்த அக்கறை எதுவும் அரசுக்கு இல்லை. அதனால் தான் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பதவியை ஒன்றரை ஆண்டுகளாக காலியாக வைத்துக் கொண்டு, வெறும் நான்கு உறுப்பினர்களுடன் ஆணையத்தை அரசு நடத்தி வருகிறது.

2023-ஆம் ஆண்டு நிறைவடையவிருக்கும் நிலையில், இதுவரை 19 ஆள்தேர்வு அறிவிக்கைகள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன. அவற்றின் மூலம் தேர்ந்தெடுக்கப்படவுள்ள அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் எண்ணிக்கை வெறும் 4217 மட்டுமே. தேர்வாணைய வரலாற்றில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர் தேர்வுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டது இந்த ஆண்டாகத் தான் இருக்கக்கூடும். இவ்வளவு மந்தமாக செயல்படுவதற்கு அரசுப் பணியாளர் தேர்வாணையம் என்ற அமைப்பே தேவையில்லை.

தேர்வர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தொகுதி 2, 2ஏ முதன்மைத் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒரு வாரத்தில் வெளியிட வேண்டும். அதுமட்டுமின்றி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு புதிய தலைவரையும், 10 உறுப்பினர்களையும் உடனடியாக நியமிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அன்புமணி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x