Published : 15 Dec 2023 11:10 AM
Last Updated : 15 Dec 2023 11:10 AM

திண்டுக்கல் மாவட்ட காவல் துறையில் திடீர் மாற்றம் - பின்னணியில் சில சர்ச்சைகள்

திண்டுக்கல்லில் மறியல் செய்தவர்களுடன் நடுரோட்டில் மல்லுக்கட்டிய டி.எஸ்.பி. கோபாலகிருஷ்ணன். | கோப்புப் படம்.

திண்டுக்கல்: கட்சியினரின் தொடர் போராட்டங்கள், தொடர் கொலைகள் என நடந்து வந்த திண்டுக்கல் மாவட்டத்தில், எஸ்.பி., மாற்றப்பட்ட நிலையில், மேலும் ஒரு ஐ.பி.எஸ். அதிகாரி திண்டுக்கல் நகருக்கு ஏ.எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக மாவட்ட எஸ்.பி.யாக வீ.பாஸ்கரன் பணிபுரிந்து வந்தார். முன்னதாக இவர், தேனி, மதுரை மாவட்டங்களில் எஸ்.பி.யாக பணிபுரிந்தார். அதிரடி நடவடிக்கை காட்டாமல் தனக்குக் கீழ் உள்ள அதிகாரிகளை நம்பியே பணியை மேற்கொண்டதால் திண்டுக்கல் மாவட்டத்தில் பிரச்சினைகளுக்கு குறைவில்லாத நிலையே நீடித்தது.

மாவட்டத்தில் அடுத்தடுத்து கொலைகள், அரசியல் கட்சியினரின் தொடர் போராட்டங்கள், அதனை கட்டுப்படுத்துவதில் போலீஸாரின் செயல்பாடுகள் திருப்தி கரமானதாக இல்லை என்ற குற்றச்சாட்டு மாநிலத் தலைமைக்கு சென்றுள்ளது. திண்டுக்கல் டி.எஸ்.பி.யாக பணிபுரிந்த கோபாலகிருஷ்ணன் கடந்த வாரம் பெருந்துறைக்குப் பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இவர், போராட்டக்காரர்களிடம் நேரில் வாக்குவாதத்தில் ஈடுபடுவது, அவர்களுக்குச் சரிக்குச் சமமாக மல்லுக்கட்டுவது என்ற இவரது பாணி பொது மக்களிடையே சர்ச் சையை ஏற்படுத்தியது. திண்டுக்கல் ரயில் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கட்சியினர் நடத்திய ரயில் மறியல் போராட்டத்தில் அக்கட்சியின் ஒன்றியச் செயலாளரை தனிப்பட்ட முறையில் பிடித்து இழுக்க அவர் டி.எஸ்.பி., யுடன் மல்லுக்கட்ட, இருவரையும் போலீஸ்காரர்களும், கம்யூனிஸ்ட் கட்சியினரும் வந்து விலக்கி விட வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதேபோல் திண்டுக்கல் நகரில் மக்கள் நலப் பணியாளர்கள் நடத்திய போராட்டத்தின்போது நிர்வாகி ஒருவருடன் மல்லுக்கட்டிய நிகழ்வு நடந்தது. தொடர்ந்து பாஜக, காங்கிரஸ் கட்சியினர் நேரடியாக மோதிக் கொண்டது என விரும்பத்தகாத நிகழ்வுகள் அதிகம் திண்டுக்கல் நகரில் நடந்தன.

வீ.பாஸ்கரன்

இதனால் திண்டுக்கல் நகர் டி.எஸ்.பி., கோபால கிருஷ்ணன் ஈரோடு மாவட்டம் பெருந்துறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். மாவட்ட காவல்துறை நிர்வாகத்தில் சரியான திட்டமிடல் இல்லாததால் திண்டுக்கல் நகரில் அனுமதியின்றி திடீர் போராட்டங்கள் அதிகரிப்பது வாடிக்கையாகிவிட்டது.

சில கட்சியினர் போராட்டங்கள் குறித்து போலீஸாருக்கு முன்னதாகவே தகவல் தெரிவிப்பதில்லை, அனுமதியும் பெறுவதில்லை. தனக்கு கீழ் உள்ள அதிகாரிகள் பார்த்துக் கொள்வார்கள் என மாவட்ட எஸ்பி வீ.பாஸ்கரன், பிரச்சினைகள் வரும் போது தலையிடாமல் இருந்ததால் திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்த நிகழ்வுகள் போலீஸாருக்கு மட்டுமின்றி பொதுமக்களுக்கும் சலிப்பை ஏற்படுத்தியது.

மக்களுக்கு சரியான தகவல் களைக் கொண்டு சேர்க்க, எந்த நிகழ்வுகள் குறித்து செய்தியாளர்கள் கேட்டாலும் முறையாகப் பதில் சொல்லாமல் தட்டிக்கழிப்பதையே எஸ்பி வீ.பாஸ்கரன் வாடிக்கையாகக் கொண்டிருந்தார். கடந்த வாரமே திண்டுக்கல் எஸ்பி வீ.பாஸ்கரனுக்கு இடமாறுதல் வந்துவிடும் என பலரும் எதிர்பார்த்த நிலையில் தற்போது இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார்.

தற்போது புதிய எஸ்.பி.யாக பிரதீப் நியமிக்கப்பட்ட நிலையில், மேலும் ஒரு ஐ.பி.எஸ். அதிகாரியான பி.சிபின் திண்டுக்கல் நகர் ஏ.எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். இனி வரும் நாட்களில் திண்டுக்கல் நகர் மற்றும் மாவட்டத்தின் பிற பகுதிகளில் போராட்டங்கள் என்ற பெயரில் மக்களுக்குப் பாதிப்பு, போக்குவரத்து பாதிப்பு என்று இல்லாமலும், முன்விரோதக் கொலைகள் நடைபெறுவதைத் தடுக்க முறையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திண்டுக்கல் மாவட்டத்தில் புதிதாக பொறுப்பேற்க உள்ள மாவட்ட எஸ்.பி., மற்றும் ஏ.எஸ்.பி., இருவரும் அதிரடி நடவடிக்கையில் இறங்கி அமைதியான மாவட்டமாக மாற்ற வேண்டும் என்பதே திண் டுக்கல் மாவட்ட மக்களின் எதிர் பார்ப்பாக உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x