Published : 15 Dec 2023 05:12 AM
Last Updated : 15 Dec 2023 05:12 AM
சென்னை: டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் நாளையும், நாளை மறுநாளும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கிழக்கு திசைக் காற்றில்நிலவும் வேகமாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரியில் இன்று சில இடங்களிலும், நாளை (டிச. 16) பெரும்பாலான இடங்களிலும், வரும் 17-ம் தேதி தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், வட தமிழகத்தில் சில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல, வரும் 18-ம் தேதி சில இடங்களிலும், வரும் 19, 20-ம் தேதிகளில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைபெய்ய வாய்ப்புள்ளது. வரும் 17-ம் தேதி மேற்கூறிய மாவட்டங்கள் மற்றும் தென்காசி, விருதுநகர், சிவகங்கை மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT