Published : 09 Jan 2018 09:07 AM
Last Updated : 09 Jan 2018 09:07 AM

பிடித்தம் செய்த ரூ.7,000 கோடியை செலவு செய்த நிர்வாகம்: பஸ் ஊழியரின் வேதனை தீருமா? - ஓய்வூதியத்தை பார்க்காமலே இறக்கும் பரிதாபம்; குடும்பங்கள் வறுமையில் வாடும் அவலம்

ரசுப் பணி மீது ஓர் ஈர்ப்பு, நாட்டம் வருவதற்கு முதல் காரணம் பணிப் பாதுகாப்பு. அடுத்ததாக, ஓய்வூதியம். ஆனால், இந்த இரண்டுக்குமே உத்தரவாதம் இல்லாத நிலை, போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. ஊதிய உயர்வு மற்றும் ஓய்வுகாலப் பலன்களை பெறுவதற்காக போக்குவரத்து ஊழியர்கள் அடிக்கடி போராட்டம் நடத்தி வருகின்றனர். மக்களை நேரடியாக பாதிப்புக்கு உள்ளாக்குகிற அத்தியாவசிய சேவை என்பதால், தொடங்கியதுமே மாபெரும் போராக விஸ்வரூபம் எடுத்து விடுகின்றன இப்போராட்டங்கள்.

தமிழக முதல்வராக அண்ணா பொறுப்பு ஏற்றதும் 1967-ல் போக்குவரத்தை நாட்டுடமை ஆக்கினார். அதன்படி, தனியார் பேருந்துகள் படிப்படியாக நாட்டுடமை ஆக்கப்பட்டன. இந்த விதையானது தொழிலாளர்களின் உழைப்பினால் நல்ல லாபத்துடன் வளர்ந்து, தொழில்நுட்பக் கல்லூரி, மருத்துவக் கல்லூரி, ஆராய்ச்சி மையங்கள் என வளர்ச்சி பெற்று கிளை பரப்பி, ஆல்போல் தழைத்து நிற்கத் தொடங்கியது. 2001-ம் ஆண்டுக்கு பிறகு சற்றே சறுக்க ஆரம்பித்து, தற்போது தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்கக்கூட பணம் இல்லாமல் போக்குவரத்துக் கழகங்கள் தடுமாறுகின்றன.

டீசல் விலை, சுங்கச்சாவடிகள் கட்டணம், உதிரிபாகங்கள் அனைத்தும் விலை உயர்ந்திருப்பது, மோசமான நிர்வாகம், ஊழல் முறைகேடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ரூ.35 ஆயிரம் கோடி கடனில் தத்தளிக்கின்றன அரசு போக்குவரத்துக் கழகங்கள். இதற்கு மேலாக, தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த ரூ.7 ஆயிரம் கோடியை நிர்வாகப் பணிகளுக்காக செலவு செய்துவிட்ட கொடுமையும் நடந்தது.

ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதிலும், ஓய்வு பெறுவோருக்கு பணப்பலன்களை வழங்குவதிலும் வருடக் கணக்கில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஆவேசம் அடைந்துள்ள தொழிலாளர்கள் சமீபத்தில் தொழிற்சங்கத் தலைவர்களைக் கண்டித்து போராட்டம் நடத்தினர். என்ன செய்தும் நிலைமை மாறாததால், தற்போது காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கி, தீவிரப்படுத்தி வருகின்றனர்.

தொழிலாளருக்கு என்ன பிரச்சினை?

தமிழகத்தில் கல்வி, சுகாதாரம், மின்வாரியம், பொதுப்பணி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஓட்டுநர்களாக (டி பிரிவு) அரசு பணியில் சுமார் 2.5 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு இணையான சம்பளம் தங்களுக்கு வழங்கப்படாதது ஏன்? என்பதுதான் போக்குவரத்து ஊழியர்களின் முக்கிய கேள்வி.

இதுதொடர்பாக ‘தி இந்து’விடம் ஏஐடியுசி பொதுச் செயலாளர் ஜெ.லட்சுமணன் கூறியதாவது:

செலவு ரூ.7 ஆயிரம் கோடி

2001-ம் ஆண்டு முதலே, போக்குவரத்துக் கழகங்களில் தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்படும் பணத்தை சம்பந்தப்பட்ட பிரிவுகளில் செலுத்தாமல், நிர்வாக செலவுக்கு பயன்படுத்தியுள்ளனர். ஆரம்பத்தில் கணிசமான தொகையை மட்டுமே எடுத்தனர். அப்போதே தொழிற்சங்கங்கள் கண்டனம் தெரிவித்தன. இந்த பணத்தை தமிழக அரசு உடனுக்குடன் செலுத்தி விடுவதாக நிர்வாகம் உத்தரவாதம் அளித்தது. ஆனால், தமிழக அரசு வழங்கவில்லை. இது பல ஆண்டுகளாக நீடித்ததால், தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்து, நிர்வாகத்துக்கு செலவிட்ட தொகை தற்போது ரூ.7 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது. நிதி நெருக்கடி அதிகரித்து வருவதால், இந்த நிதியை மொத்தமாக தரமுடியாது என்று அரசு கைவிரித்துவிட்டது. போக்குவரத்துக் கழகங்களே இந்த நிதியை திரட்டிக்கொள்ள வேண்டும் என்று கூறியிருப்பது, தொழிலாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அதிக வேலை, குறைந்த சம்பளம்

போக்குவரத்துக் கழக ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.5,200, தர ஊதியம் ரூ.1,600 என கணக்கிட்டு ரூ.20,000 வரை மாத ஊதியம் கிடைக்கிறது. ஆனால், கல்வி, சுகாதாரம், மின்வாரியம், பொதுப்பணி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றும் ஓட்டுநர்களுக்கு தர ஊதியத்தை ரூ.2,400 என்று கணக்கிட்டு ரூ.24,000 வரை ஊதியம் வழங்கப்படுகிறது. தற்போது அவர்களுக்கு 2.57 மடங்கு ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், எங்களுக்கு 2.44 மடங்கு ஊதிய உயர்வு வழங்குவதாக நிர்வாகம் கூறுகிறது. அவர்களைவிட, அதிக நேரம் பணியாற்றும் போக்குவரத்து ஊழியர்களுக்கு குறைந்த சம்பளம் நிர்ணயிப்பதை எப்படி ஏற்றுக்கொள்வது?

இவ்வாறு அவர் கூறினார்.

ஓய்வூதியம் வாங்காமலேயே மறைவு

தமிழக அரசு போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்ற ஊழியர்கள் நலச் சங்க பொதுச் செயலாளர் கே.கர்சன் கூறும்போது, ‘‘போக்குவரத்து துறையில் 70 ஆயிரம் பேர் ஓய்வூதியம் பெறுகின்றனர். கடைசியாக வாங்கிய ஊதியத்தில் பாதியை ஓய்வூதியமாக பெறுகிறோம். மின்சாரம், பொதுப்பணி, ஆவின் போன்ற துறைகளில் ஓய்வுபெற்ற அடுத்த 30 நாட்களில் ஓய்வுகாலப் பலன்கள் வழங்கப்படுகின்றன. போக்குவரத்துக் கழகத்தைப் பொறுத்தவரை, ஓய்வுகாலப் பலன்களைப் பெற குறைந்தபட்சம் ஓராண்டு ஆகிவிடுகிறது. ‘இந்த மாதம் கிடைக்குமா, அடுத்த மாதம் கிடைக்குமா?’ என்று, ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் மாதந்தோறும் போக்குவரத்துக் கழக அலுவலகங்களுக்கு நடையாய் நடக்கிறார்கள்.

கடந்த ஆண்டு ஜூலைக்கு பிறகு டிசம்பர் வரை ஓய்வுபெற்ற 10 ஆயிரம் பேருக்கு ரூ.800 கோடி அளவுக்கு நிலுவையில் இருக்கிறது. வயதான காலத்தில், மருத்துவச் செலவுக்குகூட பணம் இல்லாமல் அவர்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்படுகிற அவர்களது பணத்தை எடுத்து நிர்வாகச் செலவுக்கு அனுமதிக்கிறது தமிழக அரசு. ஆனால், எங்கள் பணத்தைக் கேட்டும் கொடுக்கத் தயங்குவது ஏன்? வயதான காலத்தில் ஓய்வுகாலப் பலன்களை அனுபவிக்காமலேயே கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 1,000 பேர் இறந்துள்ளனர். இதுபோன்ற அவலநிலை போக்குவரத்து துறையில்தான் நடக்கிறது. நாங்கள் எங்கே சென்று முறையிடுவது?

இவ்வாறு அவர் கூறினார்.

தீர்ப்பால் ரூ.1,133 கோடி

போக்குவரத்து ஊழியர்கள் இதே கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 2017 மே மாதம் போராட்டம் நடத்தினர். பொதுமக்கள் பாதிக்கப்படுவதால், வேலைநிறுத்தத்தை உடனே கைவிட்டு பணிக்கு திரும்புமாறும், இல்லாவிட்டால் எஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதற்கிடையில், அரசு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு ஊழியர்கள் பணிக்கு திரும்பினர்.

இந்த சூழலில், மதுரை செக்கானூரணியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளி மாயாண்டி சேர்வை (82) என்பவர் உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு அஞ்சல் அட்டையில் ஒரு கடிதம் எழுதினார். ஓய்வூதியம் கிடைக்காமல் போக்குவரத்து ஊழியர்கள் எவ்வளவு கஷ்டத்தில் உள்ளனர் என்பதை மிகுந்த வருத்தத்தோடும், வேதனையோடும் அவர் அதில் எழுதியிருந்தார்.

அஞ்சல் அட்டையில் வந்த இந்த கடிதத்தை தாமாக முன்வந்து பொதுநல வழக்காக எடுத்து உயர் நீதிமன்றம் விசாரித்தது.

‘‘அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற 82 வயது முதியவர், ‘உண்மை நிலை தெரியாமல் எஸ்மா சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டது நியாயமா?’ என்று கேட்டு, நீதிபதிகளாகிய எங்களை குற்றவாளியாக்கி உள்ளார்’’ என்று தங்களது கருத்தை பதிவு செய்த நீதிபதிகள், போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டிய தொகை ரூ.1,133 கோடியை படிப்படியாக வழங்க உத்தரவிட்டனர். அந்தத் தொகை பல்வேறு தவணையாக வழங்கப்பட்டு வருகிறது. 2-வது தவணையாக ரூ.175 கோடி வழங்கப்பட்டுள்ளது. 3-வது தவணையாக வரும் 15-ம் தேதிக்குள் ரூ.204 கோடியும், அடுத்த தவணையாக ரூ.380 கோடியும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஓய்வூதியர்களின் வேதனைக் குரல்

govtempjpg100 

ஓய்வு பெற்ற தொழிலாளர்ஜே.ரபேல்: போக்குவரத்துக் கழகத்தில் (திருநெல்வேலி) எலெக்ட்ரீஷியனாக பணியாற்றி கடந்த ஆண்டு ஜூலையில் ஓய்வு பெற்றேன். எனக்கு ஓய்வுகால பலன், பி.எஃப் என மொத்தம் ரூ.15 லட்சம் கிடைக்க வேண்டும். எதுவுமே வரவில்லை. ஓய்வூதியமும் குடும்பம் மற்றும் மருத்துவ செலவுக்கே சரியாகிவிடுகிறது. பணம் இல்லாததால், மகன் திருமணத்தைக்கூட நடத்த முடியாமல் என் குடும்பமே மன உளைச்சலில் இருக்கிறது.

விஜயலட்சுமி (சைதாப்பேட்டை): சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் 25 ஆண்டுகளாக ஓட்டுநராக பணியாற்றிய என் கணவர் எம்.சுரேஷ்குமார் 2015 ஏப்ரலில் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார். இறுதிச்சடங்குக்காக நிர்வாகம் ரூ.7 ஆயிரம் கொடுத்தது. பி.எஃப், ஓய்வுகால பலன்கள் உள்ளிட்டவற்றைப் பெற இரண்டரை ஆண்டுகளாக பல்லவன் இல்லத்துக்கு மாதந்தோறும் சென்று வருகிறேன். இன்னும் ஒரு ரூபாய்கூட தரவில்லை. நிதிப் பற்றாக்குறை என்று காரணம் கூறுகின்றனர். வாடகை வீட்டில் வசிக்கும் நான், குடும்பச் செலவுக்குகூட பணம் இல்லாமல் கஷ்டப்படுகிறேன். 50 வயதுக்குப் பிறகு, வேறு வழியின்றி தினமும் சமையல் வேலைக்குப் போகிறேன். வட்டிக்கு கடன் வாங்கி 2 பிள்ளைகளையும் படிக்க வைக்கிறேன். குறைந்தபட்சம் குடும்ப ஓய்வூதியமாவது தந்தால் நிலைமையை ஓரளவு சமாளிப்பேன்.

சகாயமேரி (கரூர்): அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராகப் பணியாற்றிய என் கணவர் ராஜு, 2011 மார்ச்சில் ஓய்வுபெற்றார். அடுத்த 3 மாதங்களில் சாலை விபத்தில் இறந்துவிட்டார். 3 பிள்ளைகள் உள்ளனர். வேறு வருமானம் இல்லாததால், பிள்ளைகளைக் காப்பாற்ற கூலி வேலைக்கு செல்கிறேன். உறவினர்களிடம் கைமாத்து வாங்க சங்கடமாக இருக்கிறது. மதுரையில் தொழிற்சங்கம் சார்பில் தொடர்ந்த வழக்கில், 6 சதவீத வட்டியுடன் பணம் தருமாறு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு போக்குவரத்துக் கழக நிர்வாகத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுவரை ஒரு ரூபாய்கூட வழங்கவில்லை. என் கணவர் இரவு பகல் பாராமல் உழைத்து, அவரது மாத சம்பளத்தில் பிடித்த செய்த பணத்தை திருப்பிக் கொடுக்க இப்படி அலைய விடுவது வேதனையாக இருக்கிறது. பொதுமக்களை பாதுகாப்பாக ஓட்டிச் சென்ற ஓட்டுநர்களின் குடும்பங்கள் தற்போது கஷ்டத்தில் இருக்கின்றன. இந்த நிலை எப்போது மாறும்.. என்று கண்ணீருடன் தெரிவித்தார். இந்தக் கண்ணீரைத் துடைக்க போக்குவரத்துக் கழக நிர்வாகமும், அரசும் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?

கிடப்பில் போடப்பட்ட அறிக்கை

நெருக்கடியில் போக்குவரத்துக் கழகங்களும், வேதனையில் ஊழியர்களும் இருப்பதற்கு என்ன காரணம்? இதுபற்றி அங்கு பணியாற்றி ஓய்வுபெற்ற அதிகாரிகள் கூறியதாவது:

போக்குவரத்து துறையில் ஏற்படும் நிதி நெருக்கடியைத் தவிர்க்கவும், வருவாயைப் பெருக்குவதற்குமான ஆலோசனைகளுடன் ஓர் அறிக்கை தயாரித்து கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே அரசிடம் வழங்கினோம். அதில், கணிசமான கட்டண உயர்வு அல்லது அதற்கான பணத்தை தமிழக அரசே தருவது, சென்னையில் பிராட்வே, தி.நகர், மயிலாப்பூர், திருவான்மியூர், மந்தைவெளி உள்ளிட்ட இடங்களில் உள்ள போக்குவரத்துக் கழகங்களுக்கு சொந்தமான இடத்தில் வணிக வளாகங்கள் அமைத்து வருவாயைப் பெருக்குவது, பெரிய நகரங்களில் நெடுஞ்சாலைகளை ஒட்டியுள்ள இடங்களில் ஹோட்டல்கள் அமைப்பது, சிக்கனத்தை கடைபிடிக்கும் நோக்கில், தேவையற்ற பதவிகளை நீக்குவது, பணிக்கு வராத தொழிற்சங்கத்தினர் மீது நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட ஆலோசனைகளுடன் கூடிய அறிக்கையை வழங்கினோம். இதில் எந்த திட்டத்தையும் ஆளும் அரசும், ஏற்கெனவே ஆண்ட அரசும் செய்யவில்லை என்பதுதான் உண்மை. குறிப்பாக, கடந்த 5 ஆண்டுகளில் 1,000 புதிய பேருந்துகள்கூட வாங்கப்படவில்லை என்பதுஉச்சகட்ட வேதனை’’ என்றனர்.

நிலுவையில் ரூ.80 கோடி

ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு கடந்த 24 மாதங்களுக்கானஅகவிலைப்படி (டி.ஏ) நிலுவையில் இருக்கிறது. தற்போதைய நிலவரப்படி, ஓய்வுபெற்ற தொழிலாளர் ஒவ்வொருவருக்கும் 20 சதவீத அகவிலைப்படி நிலுவையில் இருக்கிறது. அதன்படி, தற்போது மொத்த நிலுவை தொகை ரூ.80 கோடி என்பது குறிப்பிடத்தக்கது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x