Published : 14 Dec 2023 09:31 PM
Last Updated : 14 Dec 2023 09:31 PM

மதுரை கோரிப்பாளையம் மேம்பால பணிகளை 2025 டிசம்பரில் முடிக்க இலக்கு

மதுரை கோரிப்பாளையம் மேம்பால கட்டுமானப்பணிகளை மாநில நெடுஞ்சாலை மற்றும் காவல்துறை அதிகாரிகள் பார்வையிட்டனர் | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரை: மதுரை கோரிப்பாளையம் மேம்பாலம் கட்டுமானப்பணிகள் 2025-ம் ஆண்டு டிசம்பரில் நிறைவடை்நது 2026-ம் ஆண்டு தொடக்கத்தில் போக்குவரத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. கால் நூற்றாண்டு போக்குவரத்து நெரிசல் போராட்டத்துக்கு இந்த மேம்பாலத்தால் தீர்வு ஏற்பட உள்ளது.

மதுரை மாநகரின் கோரிப்பாளையம் பகுதியில் நீடிக்கும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் ரூ.190 கோடியில் மேம்பாலம் கட்டப்படுகிறது. இந்த மேம்பாலம் தமுக்கம் மைதானம் முன்பிருந்து தொடங்கி கோரிப்பாளையம் வழியாக ஏவி மேம்பாலத்துக்கு இணையாக மீனாட்சி கல்லூரி வழியாக சிம்மக்கல் வரை 2 கி.மீ., தொலைவுக்கு செல்கிறது. இந்த பாலத்தில் செல்லூரை நோக்கி செல்லும் பாலம் ஸ்டேஷன் சாலையில் மட்டும் ஒரு இணைப்பு பாலம் கட்டப்படுகிறது.

அதுபோல், அதன் இடதுபுறமான அரசு மருத்துவமனை முன் செல்லும் பனங்கல் சாலையில் மற்றொரு இணைப்பு பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்தது. ஆனால், இந்த சாலையில் இணைப்பு பாலம் அமைத்தால், மருத்துவமனைக்கு செல்லும் ஆம்புலன்ஸ்கள் உள்ளிட்ட மற்ற வாகனங்களால் நெரிசல் ஏற்படும். அதற்கு தீர்வாக, பனங்கல் சாலையில் அமெரிக்கன் கல்லூரியை ஓட்டி உள்ள நடைபாதையை அகற்றி சாலையை மேலும் அப்பகுதியில் 10 மீட்டருக்கு அகலப்படுத்தி விசாலமான சாலையாக பனங்கல் சாலையை மாற்ற நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டுள்ளது.

கோரிப்பாளையம் பகுதியில் தற்போது மேம்பாலம் கட்டுமானப்பணிகள் தொடங்கிய நிலையில் வியாழக்கிழமை பாலத்தில் தூன்கள் அமைக்கும் பகுதியில் பணிகள் நடந்தது. இப்பணிகளை மாநில நெடுஞ்சாலைத்துறை மதுரை கோட்டப்பொறியாளர் எஸ்.கே.சந்திரன், மதுரை காவல் துறை ஆணையாளர் லோகநாதன் மற்றும் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது தற்காலிகமாக பாலம் ஸ்டேஷன் சாலையில் மேம்பாலம் பணிகள் நடக்க உள்ள குறிப்பிட்ட பகுதி சாலை மூடப்பட்டது. இந்த சாலையில் வரும் வாகனங்கள், மற்ற சாலைகளில் தற்போது மேம்பாலம் பணிகளுக்காக திருப்பி விடப்பட்டுள்ளது.

பாலம் பணி நடக்கும்போதே பாலத்தின் இரு புறங்களிலும் சர்வீஸ் சாலை அமைக்கும் பணிகள் நடக்கும் என்றும், பாலம் பணிக்கு இடையூறு ஏற்படாமல் அந்த சர்வீஸ் சாலைகளில் வாகனங்களை அனுப்பும்போது போக்குவரத்து நெரிசல் கோரிப்பாளையம் பகுதியில் ஏற்பட போவதில்லை என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர். மாநில நெடுஞ்சாலைத்துறை மதுரை கோட்டப்பொறியாளர் எஸ்.கே.சந்திரன் கூறுகையில், ‘‘மேம்பாலம் பணிகள் 24 மாதங்களில் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில் 2025-ம் ஆண்டு டிசம்பரில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது, ’’ என்றார். அதிகாரிகள் கூறுவதை போல் இப்பணிகள் திட்டமிடப்படி முடிந்தால் 2026-ம் ஆண்டு தொடக்கத்தில் மேம்பாலம் போக்குவரத்து பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x