Last Updated : 14 Dec, 2023 08:28 PM

1  

Published : 14 Dec 2023 08:28 PM
Last Updated : 14 Dec 2023 08:28 PM

பழநி குளத்தில் இருந்து பாசனத்துக்கு கழிவுநீர் கலந்த தண்ணீர்: விவசாயிகளுக்கு தோல் பிரச்சினை அபாயம்

பழநியில் கழிவுநீர் கலந்து கருப்பு நிறத்தில் வரும் தண்ணீர்

பழநி: பழநி வையாபுரி குளத்தில் இருந்து கழிவு நீர் கலந்து வரும் தண்ணீரையே பாசனத்துக்கு பயன்படுத்துவதால் நிலம் மாசுபடுவதோடு, கை மற்றும் கால்களில் அரிப்பு, தோல் வியாதி பாதிப்பு ஏற்படும் அபாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழநி நகரின் மையத்தில் அமைந்துள்ளது வையாபுரி குளம். முன்பு பழநி கோயிலுக்கு வரும் பக்தர்கள் புனித நீராடும் இடமாக இக்குளம் இருந்து வந்தது. 300 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இக்குளத்தின் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.குறிப்பாக, பழநி நகரின் நிலத்தடி நீர் ஆதாரமாகவும் விளங்கி வருகிறது. இருப்பினும் நகர் பகுதியில் உள்ள அனைத்து கழிவுகளும் இக்குளத்துக்குள் விடப்படுவதால் சில ஆண்டுகளாக புனித தன்மையை இழந்து கழிவுநீர் குளமாக மாறி வருகிறது.

தற்போது குளமே தெரியாத அளவுக்கு அமலைச் செடிகள் ஆக்கிரமித்து வளர்ந்துள்ளன. தற்போது பாசனத்துக்காக வையாபுரி குளத்தில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தண்ணீர் கழிவுகள் கலந்து கருப்பு வண்ணத்தில் சாக்கடையாக மாறி வருவதால் அதை பயன்படுத்தும் விவசாயிகள் உடல்களில் அரிப்பு, தோல் அழற்சி போன்றவையால் சிரமப்படுகின்றனர். துர்நாற்றம் வீசுவதோடு, நிலத்தின் தன்மையையே மாற்றும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலையுடன் தெரிவித்தனர்.

இது குறித்து பழநியை சேர்ந்த விவசாயி சந்தானத்துரை கூறியதாவது: "புனித நீராடும் குளமாக இருந்த வையாபுரி குளத்தில் அனைத்து கழிவுகளும் கலப்பதால் சாக்கடையாக மாறியுள்ளது. கழிவுநீர் கலப்பதால் குளம் முழுவதும் அமலைச் செடிகள் வளர்ந்துள்ளன. தற்போது நெல் சாகுபடிக்காக குளத்தில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தண்ணீருக்கு பதில் சாக்கடை தான் வருகிறது. வேறு வழியின்றி நிலத்துக்கு பாய்ச்சும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

அந்த தண்ணீரில் இறங்கி வேலை பார்ப்பதால் கை மற்றும் கால்களில் அரிப்பு, தோல் வியாதி ஏற்படுகிறது. அதற்கு அச்சமடைந்து வேலைக்கு வரவே தொழிலாளர்கள் தயங்குகின்றனர். கழிவுநீரால் பயிர் வளர்ச்சி பாதிப்பதோடு, விவசாய நிலமும் மாசுபடும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, வையாபுரி குளத்தில் கழிவு நீர் கலப்பதை தடுக்க மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x