Published : 14 Dec 2023 07:37 PM
Last Updated : 14 Dec 2023 07:37 PM

“பாஜக அரசின் சகிப்புத்தன்மையற்ற போக்கு” - எம்பிக்கள் இடைநீக்கத்துக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

சென்னை: “மக்களாட்சியின் உயரிய கோயிலாகிய நாடாளுமன்ற அவையில் ஏற்பட்ட மிகப்பெரும் பாதுகாப்பு மீறல் குறித்துக் கேள்வி கேட்பதற்காக மக்கள் பிரதிநிதிகள் தண்டிக்கப்படுது ஏன்? பாஜக தலைமையிலான மத்திய அரசின் இந்த சகிப்புத்தன்மையற்ற போக்கு கண்டனத்துக்குரியது” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக முதல்வர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட 15 எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்திருப்பது மக்களாட்சிக்கு எதிரானதும், நாடாளுமன்ற ஜனநாயகத்தை மலினப்படுத்துவதும் ஆகும். பாஜக தலைமையிலான மத்திய அரசின் இந்த சகிப்புத்தன்மையற்ற போக்கு கண்டனத்துக்குரியது.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துரிமையை நசுக்குவதுதான் நாடாளுமன்றத்தின் புதிய நடைமுறையாகி வருகிறதா? மக்களாட்சியின் உயரிய கோயிலாகிய நாடாளுமன்ற அவையில் ஏற்பட்ட மிகப்பெரும் பாதுகாப்பு மீறல் குறித்துக் கேள்வி கேட்பதற்காக மக்கள் பிரதிநிதிகள் தண்டிக்கப்படுது ஏன்? 15 நாடாளுமன்ற உறுப்பினர்களின் இடைநீக்கத்தை உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும் என்று கோருகிறோம். நாடாளுமன்றம் என்பது விவாதத்துக்கான களமாக இருக்கவேண்டுமே ஒழிய, எதிர்க்கட்சிகளின் குரலை அடக்குவதற்காக இருப்பது அறவே கூடாது" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

இதனிடையே, “எதிர்க்கட்சிகளை இந்த அரசு பயமுறுத்த நினைக்கிறது. தனது தோல்வியை மறைக்கவே கேள்வி கேட்ட எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்” என்று மக்களவை அத்துமீறல் விவகாரத்தில் பாஜக அரசு மீது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x