Published : 14 Dec 2023 04:11 PM
Last Updated : 14 Dec 2023 04:11 PM

“கேரள அரசின் மெத்தனம், அலட்சியத்தால் சபரிமலையில் பக்தர்கள் பரிதவிப்பு” - இந்து முன்னணி ஆவேசம்

கோப்புப்படம்

சென்னை: தமிழகத்தில் திராவிட மாடல் அரசின் அலட்சியத்தால் திருக்கோயில்களில் பக்தர்கள் தாக்கபடுவதும், அலைகழிக்கபடுவதும் நடக்கும் நிலையில் அதற்கு சற்றும் சளைத்ததல்ல பினராயி விஜயனின் காம்ரேட் மாடல் என்பதை நிரூபிக்கிறது கேரள அரசின் செயல்பாடுகள். பக்தர்களின் பக்தியை மதிக்க தெரியாத தேவசம் போர்டும் கேரள மாநில அரசும் உடனடியாக சன்னிதானத்தை விட்டு வெளியேறி பொறுப்பை மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மண்டல பூஜை மற்றும் ஜோதி தரிசனத்துக்காக சபரிமலை நடை திறந்தது முதலாகவே மிக அதிகமான பக்தர்கள் தரிசனத்துக்காக சென்று கொண்டிருக்கிறார்கள். தரிசன சீட்டுகள் ஆன்லைன் முறையிலும் நேரடியாகவும் என ஒரு நாளைக்கு ஒரு லட்சம் தரிசன டிக்கட்டுகள் வழங்கபடுகிறது. ஆனால் ஒரு நாளைக்கு 65 முதல் 75 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்யமுடியும் என்று அனுபவம் வாய்ந்த காவல்துறை அதிகாரிகள் கூறுகிறார்கள். ஆனால் கேரள அரசும் தேவசம் போர்டும் எவ்வித முன் ஏற்பாடும் திட்டமிடலும் இன்றி பக்தர்களை வெறும் வருவாயை ஆதாரமாக கருதி கணக்கின்றி அனுமதி சீட்டை விநியோகிக்கிறார்கள்.

அனைத்து பகுதிகளில் இருந்தும் வரும் பக்தர்களின் வாகனங்கள் நிலக்கல் பகுதியில் நிறுத்தபட்டு அங்கிருந்து கேரள மாநில அரசு பேருந்துகள் மூலமாக பம்பை வரை கொண்டு செல்லப்படுகிறார்கள். நிலக்கல் வாகன நிறுத்த பகுதியில் எவ்வித அடிப்படை வசதிகளும் செய்யபடவில்லை, சுகாதார மையங்கள் இல்லை. தினமும் லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வரும் நிலையில் அதற்கேற்ப கழிவறை மற்றும் குளியல் அறை வசதிகள் இல்லை. குறைந்தபட்சம் தார் சாலை கூட இல்லை, நடந்து செல்ல முடியாத அளவுக்கு கற்களும் முள்ளுமாக சாலைகள் இருக்கிறது. மேலும் போக்குவரத்து விதிகளின் படி ஒரு பேருந்தில் 45 நபர்களே பயணிக்க அனுமதிக்கபட்டுள்ள நிலையில் காவல்துறையும் போக்குவரத்து துறையும் அனுமதிக்கபட்டதைவிட மும்மடங்காக 150 நபர்களை ஏற்றிசெல்லுமாறு நடத்துனர் ஓட்டுநர்களை கட்டாயப் படுத்துவதாக செய்தி வெளியாகியுள்ளது.

நிலக்கல் முதல் பம்பா வரையிலான மலை பாதையில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட மும்மடங்கு பக்தர்களை பயணிக்க அனுமதிப்பது பக்தர்களின் பாதுகாப்பை அலட்சியபடுத்துவதாகும். தேவைக்கேற்ப அதிக எண்ணிக்கையில் பேருந்துகளை இயக்க வேண்டும். ஏற்கெனவே, தேவசம் போர்டு மற்றும் மாநில அரசின் அஜாக்கிரதையால் விபத்து ஏற்பட்டு பல பக்தர்கள் பலியாகியுள்ள நிலையில், அரசும் போக்குவரத்து துறையும் விபரீத செயல்களில் ஈடுபடுவது கடும் கண்டத்துகுறியது. மலைப்பாதையில் வாகன போக்குவரத்தை சீர் செய்ய போதிய போக்குவரத்து காவலர்கள் இல்லாத நிலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பல மணி நேரம் பக்தர்கள் பம்பா செல்ல முடியாமலும் பம்பாவில் இருந்து நிலக்கல் வரமுடியாமலும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

பம்பாவில் இருந்து மலையேறவே 12 மணி நேரம் மலைப்பாதையில் காத்திருக்க வேண்டிய நிலையில் சபரிமலை சன்னிதானத்துக்கு 2 கி.மீ முன்னதாக மரக்கூட்டம் பகுதியில் அவசர கோலத்தில் ஏற்படுத்தபட்ட தகர கொட்டாய் தங்குமிடத்தில் உணவு, குடிநீர் கழிவறை போன்ற எவ்வித அடிப்படை வசதியும் இல்லாமல் 5 முதல் 6 மணி நேரம் பக்தர்கள் அடைத்து வைக்கபடுகிறார்கள். அங்கிருந்து தரிசனத்துக்கு அனுப்பபட்டாலும் மீண்டும் 5 முதல் 6 மணி நேரம் வரிசையில் நிற்கவேண்டியிருப்பதால் பக்தர்களை பெரும் சிரமத்துக்கு ஆளாகுகின்றனர். கேரள மாநில அரசும் தேவசம் போர்டும் சிறு திட்டமிடல் கூட இல்லாமல் பக்தர்களை அலைகழிப்பதை சிறிதும் சகித்துகொள்ள முடியாது.

நிலக்கல், பம்பா, மரக்கூட்டம் காத்திருப்பு தகர கொட்டகைகள் மற்றும் சன்னிதானம் ஆகிய இடங்களில் பக்தர்கள் உணவுக்கும் குடிநீருக்கும் அல்லல்பட வேண்டியுள்ளது. அதிக விலை கொடுக்க வேண்டியுள்ளது. அப்படி கொடுத்தாலும்கூட பக்தர்களுக்கு உணவு குடிநீர் போன்ற அத்யாவசிய தேவைகளிலவ் கடும் பற்றாகுறை ஏற்பட்டுள்ளது. இது கேரள கம்யூனிஸ்ட் அரசின் தோல்வியை அலட்சியத்தை எடுத்துகாட்டுகிறது. சபரிமலை மண்டல பூஜை காலத்தில் வாகன நுழைவு வரி, வாகன நிறுத்த கட்டணம், இதர வரி கட்டண வருவாய் என பல வகையிலும் மாநில அரசு ஏராளமான வருவாய் பெறுகிறது. மேலும் பக்தர்களிடம் காணிக்கை வசூலிக்க நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கியூஆர் கோடு முறையை அறிமுகபடுத்த தெரிந்த தேவசம் போர்டுக்கு, பக்தர்களூக்கு வசதி செய்து தர தொழில்நுட்பத்தை பயன்படுத்த தெரியவில்லையா?

வருடம் முழுவதும் லட்சக்கணக்கில் பக்தர்கள் குவியும் திருப்பதி திருமலையில் பக்தர்களுக்கு உணவு, பால், குடிநீர் என அனைத்தும் இலவசமாக நிறைவாக தரமுடிகிறது. ஆனால், வெறும் 60 நாட்கள் மட்டுமே சீசன் கொண்ட மண்டல பூஜை காலத்தில் எவ்வித திட்டமிடலும் ஏற்பாடும் செய்யாமல் பக்தர்களை வெறும் வருவாய் ஆதாரமாக கருதுவது பினராயி விஜயனின் கம்யூனிஸ்ட் அரசு இந்து விரோத அரசே என்பதை தெளிவாக எடுத்து காட்டுகிறது.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதித்து கோயிலின் புனிதம் கெடுக்க மும்முரம் காட்டி பல ஆயிரம் காவல் துறையினரை, ஆயுதபடை காவலர்களை குவித்த கம்யூனிஸ்ட் அரசு தற்போது தினமும் லட்சம் பக்தர்கள் வரும் நிலையில் வெறும் 800 காவல் துறையினரை மட்டுமே பணியில் ஈடுபடுத்தியுள்ளது. ஆனால் பினராயி விஜயன் நடத்தும் நவ கேரளா யாத்திரைக்கு 3 ஆயிரம் போலீஸார் பயன்படுத்தபடுகிறார்கள். அந்த வகையில் பினராயி விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்ட் அரசு பக்தர்கள் விஷயத்தில் எவ்வளவு மெத்தனமாகவும் அலட்சியமாகவும் செயல்படுகிறது என்பதை எடுத்து காட்டுகிறது.

மேலும், தமிழகத்தில் திராவிட மாடல் அரசின் அலட்சியத்தால் திருக்கோயில்களில் பக்தர்கள் தாக்கபடுவதும், அலைகழிக்கபடுவதும் நடக்கும் நிலையில் அதற்கு சற்றும் சளைத்ததல்ல பினராயி விஜயனின் காம்ரேட் மாடல் என்பதை நிரூபிக்கிறது கேரள அரசின் செயல்பாடுகள். ஆகவே கேரள மாநில கம்யூனிஸ்ட் அரசு இந்து விரோத போக்கை கைவிட்டு அரசும் தேவசம் போர்டும் உடனடியாக செயல்பட்டு பக்தர்களின் சிரமத்தை களையவேண்டும். உரிய பாதுகாப்பும் அடிப்படை வசதிகளும் போர்க்கால அடிப்படையில் செயல்படுத்தி தரவேண்டும். பல மணி நேரம் காத்திருக்கும் பக்தர்களை கூட்டத்தை காரணம் காட்டி கண் சிமிட்டும் நேரம் கூட ஐயப்பனை காண விடாமல் தள்ளிவிடுகிறது. பக்தர்களின் பக்தியை மதிக்க தெரியாத தேவசம் போர்டும் கேரள மாநில அரசும் உடனடியாக சன்னிதானத்தை விட்டு வெளியேறி பொறுப்பை மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும்", என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x