Published : 14 Dec 2023 03:40 PM
Last Updated : 14 Dec 2023 03:40 PM
கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் அனுமதி பெறாமல் கட்டுமானப் பணிகள் நடைபெறுவதாக கூறப்பட்டது குறித்து இந்து அறநிலையத் துறை அதிகாரிகள், தொல்லியல் துறையினர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
உலகப் பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் பிரதான சின்னங்களை அகற்றிவிட்டு புதிய கட்டுமான பணிகள் நடைபெறுவதாக பக்தர் எம்.என்.ராதா மற்றும் இந்து சமய அநிலையத் துறை சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு தலைமையிலான அமர்வு, இந்து சமய அறநிலைத் துறையை விசாரித்து அறிக்கை சமர்பிக்க உத்தவிட்டனர். இதனைத் தொடர்ந்து, இந்து அறநிலையத் துறை இது குறித்து குழு அமைத்து ஆய்வு செய்ய உத்தரவிட்டது.
இந்த நிலையில், இன்று (டிச.14) காலை சிதம்பரம் நடராஜர் கோயிலில் இந்து சமய அறநிலைத் துறை கூடுதல் ஆணையர் சங்கர் தலைமையில் கடலூர் மாவட்ட இந்து அறநிலையத் துறை இணை ஆணையர் பரணிதரன், திருவண்ணாமலை மாவட்ட இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் ஜோதி, தொல்லியல் துறை இணை ஆணையர் சிவானந்தம், ஆலோசகர் மணி உள்ளிட்ட 6 பேர் கொண்ட குழுவினர் வந்தனர்.
முன்னதாக, ஆய்வு குறித்து இந்து சமய அறநிலையத் துறை சார்பாக சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களிடம் கடிதம் அளிக்கப்பட்டது. அதனைப் பெற்றுக் கொண்ட தீட்சிதர்கள் ஆய்வு குறித்து தங்களிடம் முன்கூட்டியே எதுவும் தெரிவிக்கவில்லை எனவும், தங்கள் நிர்வாகத்தின் செயலர் ஊரில் இல்லாததாலும், தங்களது ஆட்சேபனையை தெரிவித்து கோயில் வழக்கறிஞர் சந்திரசேகரின் பதில் கடிதம் அளித்தனர்.
அதனைப் பெற்றுக்கொண்ட இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் குழுவினர் கோயில் வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட கோசாலை, யானை தங்குமிடம், நந்தி மண்டபம் மற்றும் 4 கோபுரங்கள், அம்மன்கோயில், நடராஜர் கோயிலின் உள் பிரகாரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆய்வு செய்தனர். மதியம் 2 மணிக்கு அதிகாரிகள் ஆய்வை நிறைவு செய்தனர்.
இதனிடைடையே, ஆய்வு குறித்து இந்து சமய அறநிலைத் துறை கூடுதல் ஆணையர் சங்கர் கூறுகையில், "கோயில் புதிய கட்டுமானங்களில் விதிமீறல்கள் உள்ளன" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT