Published : 14 Dec 2023 02:03 PM
Last Updated : 14 Dec 2023 02:03 PM

சிறு வணிகர்கள், வர்த்தக நிறுவனங்கள் கடனை செலுத்த கூடுதல் அவகாசம் கோரி முதல்வர் ஸ்டாலின் நிதியமைச்சருக்கு கடிதம்

மு.க. ஸ்டாலின்

சென்னை: ‘மிக்ஜாம்’ புயலினால் பாதிக்கப்பட்ட சிறு வணிகர்கள், வர்த்தகர்கள் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கடன் தொகையினைத் திருப்பிச் செலுத்தும் கால அட்டவணையை 3 மாதங்களுக்குத் தளர்த்திடக் கோரி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, “மிக்ஜாம்” புயலினால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் வசிக்கும் 37 லட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களது உடைமைகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களின் இயல்பு நிலையை மீட்டெடுக்க முடிந்த நிலையிலும், அவர்களின் வாழ்வாதாரத்தின் மீதான தாக்கம் இன்னும் தொடர்கிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறு வணிகர்கள், வர்த்தகர்கள் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இன்னும் தங்கள் வழக்கமான பொருளாதார நடவடிக்கைகளுக்கு திரும்பவில்லை.

புயல் பாதிப்பிற்குள்ளான பலர் / வணிக நிறுவனங்கள் பல்வேறு நோக்கங்களுக்காக வங்கிகளில் கடன்களைப் பெற்றுள்ள நிலையில், தங்களது நிலுவைத் தொகையைத் திருப்பிச் செலுத்த முடியாமல் தற்போது தவிக்கின்றனர். இந்த நெருக்கடியில் இருந்து அவர்கள் மீண்டு வரும் வரை கடனைத் திருப்பிச் செலுத்தும் கால அட்டவணைகளைத் தளர்த்திட வேண்டும். மேலும் அனைத்து வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், அகில இந்திய நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் வழங்கியுள்ள அனைத்து காலக் கடன்களுக்கும், 2023 டிசம்பர் 1 முதல் 2024 பிப்ரவரி 29 வரை தவணைத் தொகையைச் செலுத்துவதிலிருந்து விலக்கு அளித்து, கடன் தவணையையும், வட்டியையும் செலுத்துவதில் மூன்று மாதங்கள் ஒத்திவைக்க அனுமதிக்கப்படலாம்.

எனவே, பிரச்சினையின் அவசரத்தை கருத்தில் கொண்டு, இந்த விஷயத்தில் நிதியமைச்சர் தனிப்பட்ட முறையில் தலையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களின் திருப்பிச் செலுத்தும் சுமையைக் குறைக்கும் வகையில், தேவையான உத்தரவுகளை உடனடியாக பிறப்பிக்குமாறு கேட்டுக் கொண்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x