Published : 14 Dec 2023 11:44 AM
Last Updated : 14 Dec 2023 11:44 AM

“படிம எரிபொருளை மாற்ற துபாய் மாநாட்டில் தீர்மானம்” - அன்புமணி வரவேற்பு

படிம எரிபொருளை மாற்ற தீர்மானம்

சென்னை: புவிவெப்பமயமாதலின் தீயவிளைவுகளுக்கு முடிவு கட்டும் நோக்குடன் பெட்ரோல், டீசல், நிலக்கரி போன்ற படிம எரிபொருள்களிலிருந்து படிப்படியாக மாறுவதற்கு துபாயில் நடைபெற்ற 28-ஆம் காலநிலை மாற்ற மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இது நல்ல தொடக்கம் மேலும் நல்ல முடிவாகட்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இது குறித்து வெளியிட்டிருக்கும் அறைக்கையில், "புவிவெப்பமயமாதலின் தீயவிளைவுகளுக்கு முடிவு கட்டும் நோக்குடன் பெட்ரோல், டீசல், நிலக்கரி போன்ற படிம எரிபொருள்களிலிருந்து படிப்படியாக மாறுவதற்கு துபாயில் நடைபெற்ற 28-ஆம் காலநிலை மாற்ற மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அந்தத் தீர்மானத்தில் ஏராளமான குறைகள் உள்ளன என்றாலும் கூட, அது காலநிலை மாற்றத்திலிருந்து உலகைக் காப்பதற்கான நல்லத் தொடக்கம் ஆகும்.

துபாய் ஐக்கிய நாடுகள் காலநிலை மாநாடு கடந்த நவம்பர் 30-ஆம் நாள் தொடங்கியது. காலநிலை மாற்றத்தின் தீய விளைவுகளை தடுப்பதற்கான திட்டங்கள் பற்றி கருத்தொற்றுமை ஏற்படுத்துவதுதான் இம்மாநாட்டின் நோக்கம். மாநாடு தொடங்கியது முதல் சில நாட்களுக்கு நானும் அதில் பங்கேற்றிருந்தேன். 154 நாடுகளின் பிரதமர்கள், அதிபர்கள் மற்றும் மருத்துவர் அய்யாவால் உருவாக்கப்பட்ட பசுமைத்தாயகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் 85,000 பிரதிநிதிகளும் மாநாட்டில் பங்கேற்றனர்.

டிசம்பர் 12-ஆம் நாளுடன் நிறைவடைந்திருக்க வேண்டிய மாநாடு கருத்தொற்றுமை ஏற்படாததால், திசம்பர் 13-ஆம் நாளான நேற்றும் மாநாடுப் பிரதிநிதிகளிடையே பேச்சுகள் தொடர்ந்தன. பேச்சுகளின் முடிவில்,‘துபாய் கருத்தொற்றுமை உடன்பாடு’ என்ற பெயரிலான 196 பத்திகள் கொண்ட 21 பக்கத் தீர்மானம் நேற்று நிறைவேற்றப்பட்டது.

‘காலநிலை மாற்றத்தின் தீய விளைவுகளைத் தடுக்க நடப்பு நூற்றாண்டின் இறுதிக்குள் புவி வெப்ப அதிகரிப்பை 1.50 டிகிரி செல்சியசுக்குள் கட்டுப்படுத்த, 2050-ஆம் ஆண்டிற்குள் கரிமச் சமநிலையை (Zero Corban Emission) ஏற்படுத்தும் நோக்கத்துடன் எரிசக்தி அமைப்புகளில் இருந்து பெட்ரோல், டீசல், நிலக்கரி உள்ளிட்ட படிம எரிபொருட்களை விலக்குவதை முறையாகவும், சமமான அளவுகளிலும் மேற்கொள்ள வேண்டும்’ என்று அத்தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதன்படி, பசுமை இல்ல வாயுக்கள் வெளியாகும் அளவை, 2019-ஆம் ஆண்டின் அளவில் 43% ஆக 2030-ஆம் ஆண்டுக்குள்ளும், 60% ஆக 2035-ஆம் ஆண்டுக்குள்ளும் உலக நாடுகள் குறைத்தாக வேண்டும். இது வரலாற்று சிறப்பு மிக்க முடிவு ஆகும்.

ஐ.நா. காலநிலை மாற்ற மாநாடுகள் நடத்தப்பட்டு வரும் 29 ஆண்டுகளில், படிம எரிபொருள் என்ற சொல் தீர்மானத்தில் இடம்பெறுவது இதுவே முதல்முறையாகும். இதுதொடர்பான முந்தைய தீர்மான வரைவுகளில் படிம எரிபொருள்களின் பயன்பாட்டை படிப்படியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்ற வலிமையான வாசகம் இடம் பெற்றிருந்தது. அது இப்போது படிம எரிபொருள்களிலிருந்து மாற வேண்டும் என நீர்த்துப் போகச் செய்யப்பட்டிருக்கும் போதிலும் கூட இது வரவேற்கப்பட வேண்டிய மாற்றம் என்பதில் ஐயமில்லை.

இந்த இலக்கை அடைவதற்கான நடவடிக்கைகளுக்கு வலு சேர்க்கும் வகையில், படிம எரிபொருள்கள் பயன்பாடு குறைக்கப்படும் போது, அதை ஈடு செய்வதற்காக, 2030-ஆம் ஆண்டுக்குள் புதுப்பிக்கவல்ல எரிசக்தி உற்பத்தியை 3 மடங்காகவும், மின்சக்தியின் பயன்திறனை இரு மடங்காகவும் உயர்த்தப்படும்; காலநிலை மாற்றத்தின் காரணமாக நிகழும் இயற்கை பேரிடர்களால் ஏற்படும் இழப்புகளை சமாளிக்க இழப்பு மற்றும் சேத நிதியம் (Loss and Damage Fund) உருவாக்கப்படும் என்பன உள்ளிட்ட முடிவுகளும் வரவேற்கப்பட வேண்டியவை ஆகும். இவை தான் காலநிலை மாற்றத்தின் தீயவிளைவுகளை தடுப்பதற்கான நடவடிக்கைகளின் நல்ல தொடக்கமாக துபாய் காலநிலை மாற்ற மாநாட்டை உருவாக்கியிருக்கின்றன.

அதேநேரத்தில், காலநிலை மாற்றத்தின் தீய விளைவுகளுக்கு ஏற்ற வகையில் தகவமைத்துக் கொள்வதற்காக, பாரிஸ் உடன்படிக்கையின்படி, மாநாட்டில் உருவாக்கப்பட்ட உலக தகவமைப்பு இலக்குத் திட்டம் (Global Goal on Adaptation) வலிமையாக அமையாதது, இலக்கை அடையை வளரும் நாடுகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு போதிய நிதியை வழங்க வளர்ந்த நாடுகள் ஒப்புக்கொள்ளாதது, சாத்தியமே இல்லாத கரியமில வாயுவை உறிஞ்சும் திட்டம் போன்றவை பின்னடைவை ஏற்படுத்தக்கூடிய அம்சங்கள் ஆகும்.

துபாய் காலநிலை மாற்ற மாநாட்டில் எடுக்கப்பட்ட சாதகமான, பாதகமான முடிவுகள் அனைத்தையும் அலசி, ஆராய்ந்தால் சாதகமான அம்சங்களே அதிகமாக உள்ளன. காலநிலை மாற்றத்தின் தீயவிளைவுகளைக் கட்டுப்படுத்த இவை மட்டுமே போதுமானவையா? என்று கேட்டால் இல்லை என்பது தான் பதிலாக இருக்கும். ஆனால், துபாய் காலநிலை மாற்றத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை பிடிமானமாக வைத்துக் கொண்டு இலக்கை நோக்கி முன்னேற அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொழிற்புரட்சி காலத்துக்கு முன் 14 டிகிரி செல்சியஸாக இருந்த புவி மேற்பரப்பு சராசரி வெப்பநிலையின் உயர்வை 1.5 டிகிரி செல்சியசுக்குள், அதாவது 15.5 டிகிரி செல்சியசுக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்பது தான் கடந்த 2015ஆம் ஆண்டு பாரீஸ் காலநிலை மாநாட்டு தீர்மானம் ஆகும். ஆனால், வெப்பநிலை உயர்வு இப்போதே 1.2 டிகிரி செல்சியசை கடந்து விட்ட நிலையில், புவிவெப்ப நிலையின் தீய விளைவை கட்டுப்படுத்த போதிய காலக்கெடு இல்லை என்பதை அனைத்து உலக நாடுகளும் உணர வேண்டும். இந்தியாவும் அதன் பொறுப்பை உணர்ந்து புவிவெப்பமயமாதலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காலநிலை மாற்றத்துக்கு எந்த வகையிலும் காரணம் இல்லாமல், அதன் தீய விளைவுகளை மட்டுமே அனுபவித்து வரும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. சென்னையை அண்மையில் வெள்ளக்காடாக்கிய மழை மற்றும் வெள்ளத்திற்கும் காலநிலை மாற்றம் தான் காரணமாகும். இனி வரும் காலங்களில் இத்தகைய பேரிடர்கள் இன்னும் அதிகரிக்கும் ஆபத்து உள்ளது. இதை தமிழக அரசும் உணர்ந்து தமிழ்நாட்டிலுள்ள நிலக்கரியை எரிபொருளாகக் கொண்ட அனல் மின்நிலையங்களை மூடுவதற்கும், புதிய நிலக்கரி சுரங்கங்கள் அமைக்கப்படுவதைத் தடுக்கவும், என்.எல்.சியை வெளியேற்றவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், காலநிலை மாற்றத்தின் விளைவுகளை எதிர்கொள்வதற்கான தகவமைப்பு நடவடிக்கைகளை போர்க்கால வேகத்தில் முன்னெடுக்க வேண்டும் சுருக்கமாக கூற வேண்டுமானால், துபாய் கால நிலை மாற்ற மாநாட்டில் ஏற்படுத்தப்பட்ட நல்லத் தொடக்கம் விரைவில் நல்ல முடிவாக அமைவதை இந்தியா உள்ளிட்ட உலகின் அனைத்து நாடுகளும் உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x