Published : 14 Dec 2023 04:39 AM
Last Updated : 14 Dec 2023 04:39 AM
சென்னை: எண்ணூர் முகத்துவாரப் பகுதியில் நவீன தொழில்நுட்பங்களை புகுத்தாமல் குவளையில் (MUG) எண்ணெய் கழிவுகள் அகற்றப்பட்டு வருகிறது. மீன்பிடி உபகரணங்கள் பாழானதால் மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.
சென்னை மணலி பகுதியில் இருந்து கடந்த வாரம் பக்கிங்ஹாம் கால்வாய் வழியாக கொசஸ்தலைஆறு, எண்ணூர் முகத்துவாரம் மற்றும் கடல் பரப்பில் எண்ணெய் படலம் பரவியது. கடலோரப் பகுதிகளில் மீனவர்கள் நிறுத்தி வைத்துள்ள பல நூறு படகுகள் மற்றும் மீன்பிடி வலைகள் மீது எண்ணெய் கசிவு படிந்ததால், அவை பயன்படுத்த உகந்த நிலையில் தற்போது இல்லை. ஆற்றங்கரையோரப் பகுதிகளில் வீடுகளுக்குள்ளும் வெள்ள நீர் புகுந்ததால் அதோடு வந்த எண்ணெய் படலமும் வீடுகளின் சுவர்கள் மற்றும் உடைமைகளில் படிந்தது. எண்ணெய் படிந்த பகுதிகளில் எல்லாம் கடந்த ஒரு வாரமாக பெட்ரோலிய நாற்றம் வீசி வருகிறது. மீன்கள் செத்து மிதக்கின்றன.
இதுதொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்து வருகிறது. எண்ணெய் கசிவு தொடர்பாக ஆய்வு செய்ய வருவாய் நிர்வாக ஆணையர் தலைமையில் உயர்நிலை குழுவும் அமைத்துள்ளது. தமிழக அரசு சார்பில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் கண்ணன் தலைமையில் தொழில்நுட்ப குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு நடத்திய ஆய்வில் மணலி சிபிசிஎல் நிறுவனத்தில் இருந்து எண்ணெய் வெளியேறியது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, வெளியேறிய எண்ணெயை அகற்ற சிபிசிஎல் நிறுவனத்துக்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது. நேற்றைய நிலவரப்படி, மீனவர்களின் அனைத்து மீன்பிடி உபகரணங்களும் பாழானதாலும், முகத்துவாரப்பகுதியில் எண்ணெய் கழிவு மிதப்பதாலும், முகத்துவாரக்குப்பம், நெட்டுக்குப்பம், எண்ணூர் குப்பம், காட்டுக்குப்பம், தாழங்குப்பம், சிவன்படை வீதி, மேட்டுக்குப்பம் ஆகிய அனைத்து பகுதிகளிலும் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல முடியாமல், வலை உலர்த்தும் மண்டபங்களில் அமர்ந்திருந்தனர்.
இதுதொடர்பாக மீனவர் விஜி கூறியதாவது: நாங்கள் தினமும் அதிகாலை 4 மணிக்கு சுமார் 5 பேர் பைபர் படகில் சுமார் 30 லிட்டர் டீசலுடன் புறப்பட்டு செல்வோம். எல்லா நாட்களும் ஒன்றுபோல் இருக்காது. சில நாட்களில் மீனே கிடைக்காமல் திரும்பி வந்ததுண்டு. வழக்கமாக ஆளுக்கு ரூ.500 முதல் ரூ.1000 வருவாய் கிடைக்கும். ஆனால் மிக்ஜாம் புயலால் கடந்த 2-ம் தேதி முதலே நாங்கள் கடலுக்கு செல்லவில்லை. மழை முடிந்த பிறகு, எண்ணெய் கசிவு ஏற்பட்டுவிட்டது. எண்ணெய் கழிவுகள் மீன்பிடி வலைகளில் படிந்ததால் ஒவ்வொரு மீனவருக்கும் குறைந்தது தலா ரூ.50 ஆயிரத்துக்கு மேல் மீன்பிடி வலைகள் சேதமடைந்துள்ளன. நாங்கள் செல்லும் குறைந்த தூர பகுதியில் பெட்ரோல் வாடையால் மீன்கள் இறந்து மிதப்பதாகவும், மீன்கள் வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்திருப்பதாகவும் தகவல் வருகிறது. இங்கு இயல்புநிலை திரும்பி, நாங்கள்மீண்டும் கடலுக்கு செல்ல ஒருமாதத்துக்கு மேல் ஆகும். அதுவரைநாங்கள் வருவாய் மற்றும் வாழ்வாதாரத்தை இழந்து கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.
நேற்று எண்ணூர் முகத்துவாரப் பகுதியில் 120-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் குவளையை கொண்டு நீரில் மிதந்த எண்ணெய் கழிவுகளை அள்ளி, டிரம்களில் ஊற்றி, சிபிசிஎல் நிறுவனத்திடம் ஒப்படைத்தனர். அவர்கள் அவற்றை தங்கள் நிறுவனத்துக்கு கொண்டு சென்றனர். ஜேசிபி இயந்திரங்கள் மூலம், கடற்கரையில் எண்ணெய் கழிவுகள் படிந்த கடல் மணலை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. உறிஞ்சும் இயந்திரங்களை கொண்டு அகற்றும் பணிகள் எதுவும் நேற்று அங்கு நடைபெறவில்லை. நிவாரணப் பணிகளை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், மீன் வளம், வன உயிரின பிரிவு அதிகாரிகள் கண்காணிக்கின்றனர்.
சிவன்படை வீதி பகுதியிலும் வீடுகளுக்குள் படிந்த எண்ணெய் கழிவுகளை பொதுமக்களே சுத்தம் செய்துகொண்டனர். அப்பகுதி மக்கள் கூறும்போது, வீட்டில் சுத்தம் செய்தாலும், பெட்ரோலிய நாற்றம் போகவில்லை. அதனுடனேயே வாழ வேண்டியுள்ளது. உணவு சமைத்து சாப்பிட்டாலும், பெட்ரோலை சாப்பிடுவது போன்றே உள்ளது. இது மட்டுமல்லாது இப்பகுதிகளை சுற்றியுள்ள செடிகள், மரங்கள் போன்றவற்றில் படிந்துள்ள எண்ணெய் கழிவுகள் அப்படியே உள்ளன. அதனால் இங்கு வீசும் காற்றும் பெட்ரோல் நாற்றமாகவே உள்ளது. கருவாட்டு குழம்பு வைத்தாலும், பெட்ரோல் நாற்றம்தான் வருகிறது" என்றனர்.
இந்நிலையில் எண்ணெய் கழிவு நீக்க நடவடிக்கை குறித்து சிபிசிஎல் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: எண்ணூர் கழிமுக பகுதியில் எண்ணெய் படலம் மேலும் பரவாமல் இருக்க பூம் தடுப்பான்கள் 750 மீட்டர் நீளத்துக்கு அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 12-ம் தேதி நிலவரப்படி 325 மீட்டர் நீளத்துக்கு அமைக்கப்பட்டுள்ளது. இயந்திரங்கள் மூலமாக எண்ணெய் உறிஞ்சி அகற்றப்படுகிறது. எண்ணெய் கழிவை உயிரிகள் மூலம் சிதைவடைய செய்யும் பணியும் நடந்து வருகிறது. எண்ணெய் கழிவை அகற்றும் பணியில் 60 படகுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
முகத்துவாரத்தை தூய்மைப்படுத்த தனியார் முகமையும் அழைக்கப்பட்டுள்ளது. பல்வேறு இயந்திரங்களை கொண்டு கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணி நடந்து வருகிறது. 11-ம் தேதி முதல் பாதிக்கப்பட்ட வீடுகளை தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 11-ம் தேதி மட்டும் 3 ஆயிரம் குடும்பங்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன. மருத்துவ முகாம் நடத்தப்பட்டு 900 பேருக்குசிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT