Published : 14 Dec 2023 04:31 AM
Last Updated : 14 Dec 2023 04:31 AM
சென்னை: ‘மிக்ஜாம்’ புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அறிவிக்கப்பட்ட ரூ.6,000 வெள்ள நிவாரணம் யாருக்கெல்லாம் கிடைக்கும் என்பது குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. வருமானவரி செலுத்துவோர், மத்திய, மாநில அரசு பணியாளர்கள் பாதிப்பைக் குறிப்பிட்டு நியாயவிலைக் கடைகள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வருவாய்த் துறை செயலர் வே.ராஜாராமன் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:
‘மிக்ஜாம்’ புயல் வெள்ளம் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவித்தொகையாக ரூ.6,000 ரொக்கமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 9-ம் தேதி அறிவித்தார். இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்குவது தொடர்பாக, வருவாய் நிர்வாக ஆணையர் உரிய முன்மொழிவுகளை அனுப்பினார். அதில், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, வெள்ள நிவாரணத் தொகையை சம்பந்தப்பட்ட நியாயவிலைக் கடைகள் மூலம் ரொக்கமாக வழங்கலாம். கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் டோக்கன்களை முன்னதாகவே கூட்டுறவுத் துறை மூலம் வழங்கலாம் என்று தெரிவித்திருந்தார்.
மேலும், 4 மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்கள் பரிந்துரைப்படி, சென்னை மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம், பல்லாவரம், வண்டலூர் வட்டங்கள் முழுமையாகவும், திருப்போரூர் வட்டத்தில் 3 வருவாய் கிராமங்களிலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் வட்டம் முழுவதுமாகவும், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் 3 வருவாய் கிராமங்களிலும் வழங்கலாம். திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஆவடி, பூந்தமல்லி, ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் ஆகிய 6 வட்டங்களிலும் நிவாரணம் வழங்கலாம் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், வருவாய் நிர்வாக ஆணையரின் கருத்துருவை கவனமாக பரிசீலித்து உத்தரவிடப்படுகிறது. அதன்படி, ‘மிக்ஜாம்’ புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட, 2 நாட்களுக்கு மேல் மழை வெள்ளம் சூழ்ந்து, துணி, பாத்திரங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் இழந்த குடும்பங்களுக்கு சம்பந்தப்பட்ட வருவாய் வட்டங்கள், கிராமங்களில் உள்ள நியாயவிலைக் கடைகள் மூலம் டோக்கன் வழங்கி, ரூ.6,000 நிவாரணம் வழங்கப்படும். இந்த மழை வெள்ளத்தால் மத்திய, மாநில அரசு மற்றும் மற்ற பொதுத்துறை நிறுவன உயர் அலுவலர்கள் மற்றும் வருமானவரி செலுத்துவோர், சர்க்கரை விருப்ப குடும்ப அட்டைதாரர்கள், தங்கள்வாழ்வாதாரம் பாதிப்பு, துணி, பாத்திரங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் இழப்பு ஏற்பட்டிருந்தால், பாதிப்பு விவரங்களை தங்கள் வங்கிக்கணக்கு விவரத்துடன் தங்கள் பகுதிக்குரிய நியாயவிலைக் கடைகளில் விண்ணப்பிக்கலாம்.
அந்த விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, அதன் அடிப்படையில் அவர்களுக்கும் உரிய நிவாரணம் அவர்களின் வங்கிக் கணக்குக்கு அனுப்பி வைக்கப்படும். நிவாரணத் தொகை வழங்குவது குறித்து, நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கு தேவையான பயிற்சி வழங்குதல், டோக்கன்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு முறையாக, முன்னதாக அளிக்கும் பணி ஆகியவற்றை, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், நுகர்பொருள் வாணிபக்கழக மேலாண் இயக்குநர், மாவட்ட ஆட்சியர்கள் கண்காணிப்பதுடன் படிவங்கள் நியாயவிலைக் கடைகளில் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
டோக்கன் வழங்கும்போது கூட்ட நெரிசலைத் தவிர்க்க காவல்துறையுடன் இணைந்து தக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும். நிவாரண உதவிகள் வழங்கும்போது மாவட்ட ஆட்சியர்கள், அரசு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். நிவாரணத்துக்கு தேவையான தொகை மாநில பேரிடர் நிவாரண நிதி கணக்கு தலைப்பில் வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
குடும்ப அட்டை இல்லாவிட்டால்.. சென்னையை பொருத்தவரை, வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். இவர்களில், பலருக்கும் குடும்ப அட்டை தங்களின் சொந்த ஊர்களில் இருக்கும். பலர் இங்கு வந்து புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்திருப்பார்கள். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கான பணிகள் நடைபெற்றபோது புதிய குடும்ப அட்டை வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. எனவே, குடும்ப அட்டை இல்லாத நிலையில் வெளிமாவட்டங்களில் இருந்துஇங்கு வந்து வசிப்போர் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்களும் புயல்,வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, வாழ்வாதாரம் இழந்துள்ள நிலையில், அவர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பான எந்த அறிவிப்பும் இல்லாதது பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வர் ஸ்டாலினுடன் மத்திய குழுவினர் இன்று சந்திப்பு: தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர் குணால் சத்யார்த்தி தலைமையில் 6 பேர் கொண்ட மத்திய குழுவினர் கடந்த 2 நாட்களாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டதுடன், பாதிப்புக்குள்ளான மக்களிடமும் பிரச்சினைகளை கேட்டறிந்தனர். பாதிப்புக்கான அளவீடுகளை கணக்கெடுத்தனர்.
நேற்றைய ஆய்வின்போது, தாம்பரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய குணால் சத்யார்த்தி, ‘‘சென்னை மாநகரத்துக்கு பெரிய அளவிலான துயர் தடுப்பு திட்டம் குறித்து யோசிக்க வேண்டும். அடுத்தமுறை இதேபோன்ற பிரச்சினைகள் ஏற்படாத வகையில் மாநில அரசு நீண்டகால நிலைத்திட்டத்தை உருவாக்க வேண்டும்’’ என்றார்.
இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை மத்திய குழுவினர் இன்று காலை 11 மணிக்கு சந்தித்து ஆலோசனை நடத்துகின்றனர். இந்த ஆலோசனையில், தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். பின்னர், இன்று பிற்பகல் மத்திய குழுவினர் டெல்லி புறப்பட்டு செல்கின்றனர். மத்திய உள்துறை அறிவுறுத்தலின்படி ஒரு வாரத்தில் அறிக்கையை மத்திய குழு சமர்ப்பிக்க வேண்டும். அதன்பிறகு மத்திய அரசு நிவாரணம் அறிவிக்கும் என தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT