Published : 14 Dec 2023 04:10 AM
Last Updated : 14 Dec 2023 04:10 AM
திருச்சி / பெரம்பலூர் / புதுக்கோட்டை: அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் ( ஏஐஜிடியுஎஸ் ), தேசிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம்(என்யுஜிடிஎஸ்) இணைந்த கூட்டமைப்பினர், காலவரையறையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், கிராமப் புறங்களில் அஞ்சல் உட்பட பல்வேறு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் டிச.12-ம்தேதி முதல் இவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், நாளை (டிச.14) முதல் தேசியஅஞ்சல் ஊழியர்கள் கூட்டமைப்பும் இப்போராட்டத்தில் பங்கேற்கஉள்ளது. இதனால், கிராமப் புறங்களில் அஞ்சல் சேவை முழுமையாக முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திருச்சி மத்திய மண்டல அஞ்சல் துறையில் 11 அஞ்சல் கோட்டங்கள், 24 தலைமை அஞ்சல் அலுவலகங்கள், 485 துணை அஞ்சல் நிலையங்கள், 2,800-க்கும் அதிகமான கிராமப்புற கிளை அஞ்சல் நிலையங்கள் உள்ளன.
கிராமப் புற கிளை அஞ்சல் நிலையங்களில் போஸ்ட் மாஸ்டர், உதவி அஞ்சல் ஊழியர் என 2 பேர் பணியில் இருப்பர். இதன்படி, காலி பணியிடங்கள் போக, 6,450 பேர் கிராமப் புற அஞ்சல் நிலையங்களில் தற்போது பணியாற்றி வருகின்றனர். இவர்கள் மூலமாகத்தான கிராமங்களுக்கு அனைத்து வகை அஞ்சல்களும் விநியோகிக்கப் படுகின்றன.
மேலும், 100 நாள் வேலை திட்டப் பயனாளிகளுக்கு பணம், முதியோர் ஓய்வூதியம், இந்தியா போஸ்டல் பேமன்ட் வங்கி மூலம் பணப் பரிமாற்றம் மற்றும் மத்திய-மாநில அரசுகளின் உதவித் தொகைகள் ஆகியவிநியோகங்கள் இவர்கள் மூலமாகவே வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்த காலவரையறையற்ற வேலை நிறுத்தத்தில் கிராமப் புறங்களில் 90 சதவீதம் பேர் பங்கேற்றுள்ளதால், கிராமப் புறங்களில் அஞ்சல் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால், அரசு மற்றும் தனியார் வேலைக்கு விண்ணப்பித்தோர் அழைப்பாணைகள் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நீதிமன்ற அஞ்சல்கள், வழக்கு தொடர்பான அஞ்சல்கள், கிராமப்புறங்களில் உள்ள மத்திய-மாநில அரசு அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டிய அலுவல் ரீதியான அஞ்சல்கள் எதுவும் செல்லவில்லை.
இது குறித்து அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்க திருச்சி கோட்டச் செயலாளர் மருதமுத்து கூறியது: கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு 8 மணி நேர வேலை மற்றும்ஓய்வூதியம் உட்பட அனைத்து பணப் பலன்களையும் வழங்க வேண்டும். கமலேஷ் சந்திரா கமிட்டியின் அனைத்து சாதகமான பரிந்துரைகளையும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும். கிராமப்புற அஞ்சல் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மருத்துவ வசதிகள் வழங்க வேண்டும்.
வேலைப் பளுவைக் காரணம் காட்டி நிலை 2ஊதியம் வழங்காமல், நிலை 1 ஊதியம் வழங்குவதை நிறுத்த வேண்டும். கிளை அஞ்சல் நிலையங்களுக்கு மடிக் கணினி, பிரிண்டர், அதிவேக இணைய சேவை உள்ளிட்ட வசதிகள் வழங்க வேண்டும்என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கால வரையறையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். எங்கள் போராட்டத்தில் தேசிய அஞ்சல் ஊழியர் கூட்டமைப்பு, இன்று (நேற்று) முதல்பங்கேற்கிறது என்றார்.
அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்க மத்திய மண்டலச் செயலாளர் சுவாமிநாதன் கூறியது: திருச்சி மத்திய மண்டல அஞ்சல் துறையில் சாதாரணமாக நாள்ஒன்றுக்கு 5 லட்சத்துக்கும் அதிகமான அஞ்சல்கள் விநியோகம் செய்யப்படும். வேலைநிறுத்த போராட்டத்தில் 90 சதவீதம் பேர் ஈடுபட்டுள்ளதால், அனைத்து வகையான 10 லட்சம் அஞ்சல்கள், அஞ்சல் நிலையங்களில் தேங்கியுள்ளன.
மாற்று ஏற்பாடாக தினக்கூலிகள் மூலம் சேவை வழங்க முயன்றும், அவர்களால் முழுமையாக சேவை வழங்க இயலவில்லை. அவர்களில், முதல் நாளில் வேலைக்கு வந்தவர்கள் நேற்று வேலைக்கு வரவில்லை. மத்திய அரசின் விவசாயிகள் உதவித் தொகை, மாநில அரசின் முதியோர் உதவித் தொகை, மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 ஆகியவை மாதந்தோறும் 13-ம் தேதிக்குள் வரும். இவை அனைத்தும் கிராமப் புறங்களுக்கு செல்லவில்லை என்றார்.
ஆர்ப்பாட்டம்: வேலை நிறுத்த போராட்டத்தின் 2-வது நாளான நேற்று மத்திய மண்டல அஞ்சல் துறை தலைவர் அலுவலகம் முன்பு கிராமிய அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்க கோட்டத் தலைவர் பரமசிவம் தலைமை வகித்தார். செயலாளர் மருத நாயகம், பொருளாளர் கோபால கிருஷ்ணன், துணைத் தலைவர் கலிய பெருமாள், செயல் தலைவர் சிவகுமார் உட்பட 100-க்கும் அதிகமானோர் இதில் பங்கேற்றனர்.
இதேபோல, ஸ்ரீரங்கம் அஞ்சல் கோட்டத்துக்கு உட்பட்ட பெரம்பலூர் தலைமை அஞ்சல் நிலையம் முன்பு, இரு சங்கங்கள் இணைந்த கூட்டமைப்பின் தலைவர் ரவீந்திரன் தலைமையில் செயலாளர் சரவணன், பொருளாளர் அய்யாசாமி உட்பட அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை தலைமை அஞ்சல் அலுவலகம் அருகே சங்கத்தின் கோட்டத் தலைவர் வி.அடைக்கலம் தலைமையில் செயலாளர் ஜி.வீரையா, பொருளாளர் எஸ்.சூரிய பிரகாசம் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT