Published : 13 Dec 2023 09:15 PM
Last Updated : 13 Dec 2023 09:15 PM
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயில் அறங்காவலர்கள் நியமனத்துக்கு எதிரான மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் மகாராஜன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: “மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு நவ. 6-ல் அறங்காவலர்கள் நியமனம் செய்யப்பட்டனர். மதுரை அண்ணாநகரை சேர்ந்த பி.கே.எம்.செல்லையா, மதுரை காந்திநகர் சுப்புலட்சுமி, அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் தாயார் ருக்மணி பழனிவேல்ராஜன், கே.கே.நகர் மருத்துவர் சீனிவாசன், அரசரடியைச் சேர்ந்த மீனா அன்புநிதி ஆகியோர் அறங்காவலர்களாக நியமிக்கப்பட்டனர். இதையடுத்து இவர்கள் அறங்காவலர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இந்த 5 பேர் நியமனத்தில் அரசியல் பின்புலம் உள்ளது. அரசியல் தொடர்புடையவர்களை கோயில் அறங்காவலர்களாக நியமிக்கக் கூடாது என நீதிமன்ற உத்தரவு உள்ளது. இதனால் மீனாட்சியம்மன் கோயில் அறங்காவலர் நியமனம் சட்ட விரோதம். எனவே மீனாட்சியம்மன் கோயில் அறங்காவலர்களாக செல்லையா உள்பட 5 பேரை நியமனம் செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எம்.சுந்தர், ஆர்.சக்திவேல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வழக்கறிஞர் வாதிடுகையில், “திமுகவை சேர்ந்த 5 பேர் அறங்காவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ருக்மணி பழனிவேல் ராஜன் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாயார். இதனால் அறங்காவலர்கள் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும்” என்றார்.
கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன் வாதிடுகையில், “மீனாட்சியம்மன் கோயில் அறங்காவலர்கள் அரசின் விதிகளுக்கு உட்பட்டு நியமிக்கப்பட்டுள்ளனர். 5 பேரில் 3 பேர் பெண்கள். இந்த நியமனத்தில் எந்த விதிமீறலும் இல்லை. மனுவில் எந்த பொதுநலனும் இல்லை. மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், “பொதுநல வழக்கு என்றால் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வழக்காக இருக்க வேண்டும். இந்த வழக்கை மனுதாரர் எந்த அடிப்படையில் தாக்கல் செய்துள்ளார். குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இல்லாமல் அரசு நியமனத்தை குறை கூறுவதை ஏற்க முடியாது. அறங்காவலர் நியமனம் குறித்து உயர் நீதிமன்றம் பல்வேறு வழிகாட்டுதல்களை பிறப்பித்துள்ளது. இதை மனுதாரர் கவனத்தில் கொள்ளவில்லை. மனுதாரர் மீது பல குற்ற வழக்குகள் நிலுவைவில் உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனாட்சியம்மன் கோயில் அறங்காவலர் நியமனம் நீதிமன்றத்துக்கு முழு திருப்தியை தந்துள்ளது. அமைச்சரின் தாயார் அறங்காவலராக நியமனம் செய்யப்பட்டதில் என்ன தவறு உள்ளது? பெண்கள் 3 பேர் அறங்காவலர்களாக நியமிக்கப்பட்டு இருப்பது நீதிமன்றத்துக்கு கூடுதல் திருப்தி அளித்துள்ளது. அரசின் நியமனத்தில் சந்தேகம் கொள்ளவோ, குறைகூறவோ எந்த முகாந்திரமும் இல்லை. எனவே மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT