Published : 13 Dec 2023 12:53 PM
Last Updated : 13 Dec 2023 12:53 PM
சென்னை: எண்ணூர் கழிமுக பகுதியில் ஏற்பட்டுள்ள எண்ணெய் கழிவுகள் பரவுவதை தடுக்க (Boomer) தடுப்பான்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதுவரையிலும், திருவள்ளூர் மாவட்ட வரம்பிலுள்ள நீர்நிலைகளில் எண்ணெய் கழிவுகள் படரவில்லை. டிச.12 அன்று திருவள்ளூர் மாவட்ட நீர்நிலை பகுதியிலிருந்து நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பகுப்பாய்வு செய்ய அனுப்பப்பட்டுள்ளது என்று தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தகவல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் வலைதளத்தில் தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள பதிவில், "இந்நிகழ்வு 07.12.2023 அன்று சென்னை மாவட்டத்தில் ஒரு குழுவால் ஆய்வு செய்யப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. கழிவுகளை அகற்றும் பணி 11.12.2023 அன்று தொடங்கப்பட்டுள்ளது. எண்ணெய் கழிவுகள் பரவுவதை தடுக்க (Boomer) தடுப்பான்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதுவரையிலும், திருவள்ளூர் மாவட்ட வரம்பிலுள்ள நீர்நிலைகளில் எண்ணெய் கழிவுகள் படரவில்லை. 12.12.2023 அன்று திருவள்ளூர் மாவட்ட நீர்நிலை பகுதியிலிருந்து நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பகுப்பாய்வு செய்ய அனுப்பப்பட்டுள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.
சென்னை எண்ணூர் கழிமுக பகுதியில் சமீபத்தில் ஏற்பட்ட எண்ணெய் கசிவு தொடர்பாக ஆய்வு செய்ய தமிழக சுற்றுச்சூழல், வனத் துறை ஒரு குழு அமைத்தது. சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (சிபிசிஎல்) வளாகம் மற்றும் சம்பந்தப்பட்ட தொழிற்சாலை பகுதிகளில் அந்த குழு ஆய்வு செய்து, கடந்த 11-ம் தேதி அறிக்கை சமர்ப்பித்தது. அதன்படி, மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளத்துக்கு பிறகு, சிபிசிஎல் வளாகத்தில் எண்ணெய் கசிவு உருவாகி பக்கிங்ஹாம் கால்வாய் வழியாக, எண்ணூர் கழிமுக பகுதியை அடைந்தது கண்டறியப்பட்டது. சிபிசிஎல் வளாகத்தில் இருக்கும் வெள்ள நீர் மேலாண்மை சிக்கல்களையும் அந்த குழுவினர் குறிப்பிட்டுள்ளனர்.
இதையடுத்து, சிபிசிஎல் நிறுவனத்துக்கு வாரியம் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதன்படி, பக்கிங்ஹாம் கால்வாய், எண்ணூர் கழிமுக பகுதி மற்றும் அருகே உள்ள இடங்களில் எங்கெல்லாம் கசிந்த எண்ணெய் தேங்கியுள்ளது என்பதை உடனே கண்டறிந்து போர்க்கால அடிப்படையில் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட உத்தரவுகளை பிறப்பித்திருந்தது. எண்ணூர் கழிமுகப் பகுதியில் எண்ணெய் கசிவு அகற்றும் பணிகள் தொடர்பாக தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா தலைமையில், அமைக்கப்பட்ட மாநில எண்ணெய் கசிவு நெருக்கடி மேலாண்மை தொடர்பான உயர்நிலை குழு கூட்டம் கடந்த 11-ம் தேதி நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து, எண்ணெய் கசிவால் அப்பகுதிமக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை மதிப்பீடுசெய்ய, சென்னை மாவட்ட ஆட்சியருக்கும்,சென்னை மாநகராட்சிக்கும் தலைமைச் செயலர் உத்தரவிட்டுள்ளார். போர்க்கால அடிப்படையில் எண்ணெயை அகற்றும் பணிகளை விரைந்து மேற்கொள்ளுமாறு சிபிசிஎல் நிறுவனத்துக்கு அறிவுறுத்தப்பட்டது. தோல் நோய் மருத்துவர்களின் துணையோடு, தேவைப்படுவோருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர் குழுவை சுகாதாரத் துறை நியமித்துள்ளது. மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை மதிப்பீடு செய்யும் பணி மீன்வளத் துறையினால்மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க தமிழக அரசு ஏற்கெனவே நடவடிக்கை மேற்கொண்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT