Last Updated : 24 Jan, 2018 09:05 AM

 

Published : 24 Jan 2018 09:05 AM
Last Updated : 24 Jan 2018 09:05 AM

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நடந்த வன்முறை விசாரணை முடிய இன்னும் ஓராண்டு ஆகும்: ஆணையத் தலைவர் நீதிபதி ராஜேஸ்வரன் தகவல்

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வன்முறை சம்பவங்கள் நடந்து நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்த நிலையில், வன்முறை குறித்த விசாரணை முழுமையடைய இன்னும் ஓராண்டு ஆகும் என்று விசாரணை ஆணையத் தலைவர் எஸ்.ராஜேஸ்வரன் கூறினார்.

ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க வலியுறுத்தி சென்னை மெரினா கடற்கரை, கோவை, மதுரை உட்பட தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு ஜனவரி 14 முதல் 23-ம் தேதி வரை போராட்டம் நடைபெற்றது. சென்னையில் நடந்த போராட்டத்தின் முடிவில் வன்முறை வெடித்தது. இதுதொடர்பாக விசாரிக்க தனி நபர் ஆணையம் அமைக்கப்பட்டது. ஆணையத் தலைவராக உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் கடந்த ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி நியமிக்கப்பட்டார். விசாரணை அறிக்கையை ஆணையம் 3 மாதங்களில் அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

சென்னை டிஜிஎஸ் தினகரன் சாலையில் (கிரீன்வேஸ் சாலை) உள்ள பொதிகை வளாகத்தில் இந்த விசாரணை ஆணையம் செயல்படுகிறது. ஜல்லிக்கட்டு வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் ஆணையத்திடம் பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்யும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் 1,951 பேர் பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்துள்ளனர். இதில் அதிகபட்சமாக மதுரையில் 996 பேர், சென்னையில் 858 பேர் பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்தனர்.

வாக்குமூலங்கள் பெறப்பட்டதை தொடர்ந்து கடந்த ஜூன் 7-ம் தேதி விசாரணையை தொடங்கிய ராஜேஸ்வரன், வன்முறை தொடர்பாக சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட இடங்களுக்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தினார்.

இந்நிலையில், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வன்முறைச் சம்பவங்கள் நடந்து நேற்றுடன் ஓராண்டு முடிவடைந்துள்ளது. இருப்பினும், ஆணையத்தின் விசாரணை இன்னும் முடிவடையவில்லை.

இதுதொடர்பாக விசாரணை ஆணையத் தலைவர் எஸ்.ராஜேஸ்வரன், ‘தி இந்து’ விடம் நேற்று கூறியதாவது:

672 பேருக்கு சம்மன்

பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்தவர்களில் இதுவரை 672 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதில் 184 பேர் மட்டுமே விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர். 488 பேர் ஆஜராகவில்லை. இதுவரை 91 அமர்வுகள் விசாரணை நடந்துள்ளது.

பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்ட இடங்களில் சேலத்தில் விசாரணை முடிவடைந்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை பொதுமக்களிடம் விசாரணை முடிந்துள்ளது. போலீஸாரிடம் விசாரணை நடந்து வருகிறது. ஊடக நிறுவனங்களைச் சேர்ந்த சிலரிடம் விசாரணை நடத்த உள்ளோம்.

எப்போது நிறைவடையும்?

விசாரணைக்காக நான் வெளியூர் செல்லும் நாட்கள் தவிர, மற்ற அனைத்து நாட்களிலும் சென்னையில் விசாரணை நடந்துவருகிறது. கோவையில் வரும் 30, 31 தேதிகளில் விசாரணை நடத்தப்பட உள்ளது. மதுரையில் விசாரணை முடிய கூடுதல் அவகாசம் தேவைப்படும் என்று தெரிகிறது. அங்கு சராசரியாக ஒருவரிடம் விசாரணை நடத்தி முடிக்க 2 மணி நேரம் ஆகிறது.

எனவே, பிப்ரவரி முதல் மதுரைக்கு மாதம் 3 முறை செல்ல திட்டமிட்டுள்ளேன். அங்கு 3 நாட்கள் தங்கியிருந்தால்தான் அதிகபட்சம் 30 பேரிடம் விசாரணை நடத்த முடியும். எப்படியும், விசாரணை முழுமையடைய இன்னும் ஓராண்டு ஆகிவிடும். விசாரணைக்குப் பிறகு அரசிடம் அறிக்கை அளிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x