Published : 12 Dec 2023 04:36 PM
Last Updated : 12 Dec 2023 04:36 PM
திருச்சி: மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தை செயல்படுத்துவதில், 95.46 சதவீத குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கி மத்திய மண்டலத்தில் தஞ்சாவூர் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. நாடு முழுவதும் உள்ள வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் வகையில், ஜல் ஜீவன் திட்டத்தை 2019 முதல் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள 12,525 கிராம பகுதிகளைச் சேர்ந்த 1.25 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 2024-க்குள் அனைத்து வீடுகளுக்கும் நபர் ஒருவருக்கு நாளொன்றுக்கு 55 லிட்டர்குடிநீர் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் டிச.9-ம் தேதி வரை 97,01,565 வீடுகளுக்கு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதையொட்டி, இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியமைக்காக தமிழக அரசுக்கு, மத்திய அரசு கடந்த அக்டோபர் மாதம் விருது வழங்கி கவுரவப்படுத்தியுள்ளது. இதில், 100 சதவீத குடிநீர் இணைப்பு வழங்கிய மாவட்டமாக காஞ்சிபுரம், கன்னியாகுமரி, ராணிபேட்டை, வேலூர் ஆகிய 4 மாவட்டங்கள் உள்ளன. அடுத்தடுத்த நிலையில், மற்ற மாவட்டங்கள் உள்ளன. அந்தவகையில், மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட டெல்டா மாவட்டங்களில் அதிகபட்சமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 4,21,955 குடியிருப்புகளில் 4,02,796 குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இது 95.46 சதவீதமாகும்.
இதேபோல, மயிலாடுதுறை மாவட்டத்தில் 2,02,629 குடியிருப்புகளில், 1,84,531-க்கும்(91.07%), திருச்சி மாவட்டத்தில் 4,73,330 குடியிருப்புகளில், 4,20,882-க்கும் (88.92%), அரியலூர் மாவட்டத்தில் 2,07,503 குடியிருப்புகளில் 1,73,960-க்கும்(83.84%), கரூர் மாவட்டத்தில் 2,04,464 குடியிருப்புகளில் 1,69,123-க்கும்(82.72%), திருவாரூர் மாவட்டத்தில் 3,05,169 குடியிருப்புகளில் 2,29,806-க்கும்(75.3%), பெரம்பலூர் மாவட்டத்தில் 1,48,348 குடியிருப்புகளில் 99,345-க்கும்(67.02%), புதுக்கோட்டை மாவட்டத்தில் 3,70,681 குடியிருப்புகளில் 1,87,811 க்கும்(50.67%) குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
குறைந்த அளவாக நாகை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 1,57, 427 குடியிருப்புகளில் 34,030 குடியிருப்புகளுக்கு மட்டுமே குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இது 21.62 சதவீதமாகும். கடலோர மாவட்டமான நாகையில் நிலத்தடி நீர்மட்டம் குறைவாக இருப்பதால், இத்திட்டத்தை செயல்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக நாகை மாவட்ட அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘கடலோர மாவட்டமான நாகையில்குடிநீர் பயன்பாட்டுக்கான நிலத்தடி நீர் கிடைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. இதனால், குடிநீர் வடிகால் வாரியம் மூலம் தஞ்சாவூர் மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் இருந்து ரூ.1,700 கோடி மதிப்பிலான கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்த தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT