Published : 24 Jul 2014 09:53 AM
Last Updated : 24 Jul 2014 09:53 AM
மருத்துவக் கல்வியை தரம் தாழ்த்தும் செயலில் ஈடுபடும் மருத்துவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
புதுச்சேரி அறுபடைவீடு மருத்துவக் கல்லூரியில் பணிபுரிவதாக போலியாக கணக்கு காட்டியது தொடர்பாக 29 மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு சிபிஐ பரிந்துரை செய்தது. இதையடுத்து அந்த 29 மருத்துவர்களுக்கும் இந்திய மருத்துவ கவுன்சில் ஒழுங்கு நடவடிக்கை குழு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. அந்த நோட்டீஸை ரத்து செய்யக்கோரி மதுரை கே.கே.நகரைச் சேர்ந்த மருத்துவர் எஸ்.சுந்தராஜன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
மருத்துவர்கள் மீது மாநில மருத்துவ கவுன்சிலுக்குத்தான் அதிகாரம் உண்டு. இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு அந்த அதிகாரம் கிடையாது என மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்து நீதிபதி கே.கே.சசிதரன் புதன்கிழமை பிறப்பித்த உத்தரவு:
மருத்துவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு அதிகாரம் உண்டா, இல்லையா என்ற கேள்வி எழுப்பட்டுள்ளது. இந்திய மருத்துவ கவுன்சில் ஒரு சட்டரீதியான அமைப்பு. அதற்கென தனி பொறுப்புகள் உள்ளன. மருத்துவ கல்வியின் தரத்தை மேம்படுத்துவது அந்த பொறுப்புகளில் ஒன்று. அதை நிறைவேற்ற ஒவ்வொரு மருத்துவக் கல்லூரியிலும் ஆய்வு நடத்துவதற்கு இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு அதிகாரம் உண்டு. கல்லூரியில் போதிய எண்ணிக்கையில் ஆசிரியர்கள் இருப்பது, கட்டமைப்பு வசதிகள் குறித்தும் ஆய்வு செய்யப்படுகிறது.
மருத்துவர்கள் ஒரு இடத்தில் பணிபுரிந்துவிட்டு, மற்றொரு இடத்தில் பணிபுரிவதாக போலியாக கணக்கு காட்டுகின்றனர். இதற்காக அவர்கள் தனி ஊதியமும் பெறுகின்றனர். இந்த முறைகேட்டில் தொடர்புடையவர்களுக்கு இந்திய மருத்துவ கவுன்சில் நோட்டீஸ் அனுப்பியதில் தவறில்லை. எனவே மனுதாரின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
மருத்துவ கல்லூரிகள் தொடர்பாக சிபிஐ அனுப்பிய பரிந்துரையை பார்க்கும்போது மருத்துவக் கல்வி வருந்தத்தக்க சூழலில் இருப்பது தெரிகிறது. ஆசிரியர் எண்ணிக்கையில் மோசடி செய்தால் செய்முறை பயிற்சி மற்றும் கற்பித்தலில் குறைபாடு ஏற்படும். அப்படி நடைபெற்றால் அரைவேக்காடு மருத்துவர்கள் தான் உருவாக முடியும். இந்தியாவில் மருத்துவக் கல்லூரிகள் பெருகிவிட்டன. மக்கள் உயிருடன் விளையாடும் சூழல் ஏற்பட்டுள்ளது.
மருத்துவ மாணவர்கள் முறையாகப் படிக்க முடியாத நிலை ஏற்பட்டால், தகுதியான மருத்துவர்கள் உருவாகாமல் போவார்கள். இதனால் சமுதாயம் பாதிக்கப்படும். மருத்துவக் கல்வியின் தரம் தாழ்வதற்குக் காரணமாக இருக்கும் மருத்துவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியிருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT