Last Updated : 11 Dec, 2023 02:49 PM

 

Published : 11 Dec 2023 02:49 PM
Last Updated : 11 Dec 2023 02:49 PM

காலாவதியான குளுகோஸ் ஏற்றிய விவகாரம்: உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க ஐகோர்ட் உத்தரவு

மதுரை: சிவகங்கை அரசு மருத்துவமனையில் காலாவதியான குளுகோஸ் ஏற்பட்ட விவகாரத்தில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு அரசு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை முத்து நகரைச் சேர்ந்த ஆர்.ராஜேஸ்வரி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், "என் கணவர் ராமதாஸ். சிவகங்கை கோட்டாட்சியரின் தனி உதவியாளராக பணிபுரிந்து 31.5.2006-ல் ஓய்வு பெற்றார். எங்களுக்கு இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். கரோனா ஊரடங்கு காலத்தில் என் கணவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை 21.6.2021-ல் சிவகங்கை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தோம்.

மருத்துவமனையில் சேர்த்த போத என் கணவர் சுயநினைவுடன் இருந்தார். என் கணவருக்கு குளுகோஸ் ஏற்றப்பட்டது. பாதி குளுகோஸ் உடலுக்கு சென்ற நிலையில் அந்த குளுகோஸ் பாட்டில் 2021 மே மாதத்துடன் காலாவதியானது என்பதை என் மகன் கண்டுபிடித்தார். இதை மருத்துவர் மற்றும் செவிலியரிடம் தெரிவித்தார். அவர்கள் முறையாக பதிலளிக்காமல் காலாவதியான குளுகோஸ் பாட்டிலை அகற்றினர். காலாவதியான குளுகோஸ் உடலில் ஏற்றப்பட்டது தெரிந்து என் கணவர் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார்.

தொடர்ந்து அவர் உடல் நிலை மோசமானதால் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். 27.6.2021-ல் என் கணவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். என் கணவருக்கு மருத்துவமனையில் சேர்த்த நாளிலிருந்து மருத்துவர்கள், செவிலியர்கள் உரிய சிகிச்சை அளிக்கவில்லை. கவனக்குறைவாகவும், மெத்தமானமாகவும், சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையிலும் செயல்பட்டனர். இதனால் சிவகங்கை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை டீன் மற்றும் மருத்துவ அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கவும், காலாவதியான குளுகோஸ் ஏற்றியதால் என் கணவர் உயிரிழந்ததால் ரூபாய் ஒரு கோடி இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார். இவ்வழக்கில் மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் என்.சதீஷ் பாபு வாதிட்டார். வாதங்களை கேட்ட பின்னர் நீதிபதி, மனுதாரருக்கு தமிழக அரசு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x