Published : 11 Dec 2023 05:36 AM
Last Updated : 11 Dec 2023 05:36 AM
சென்னை: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தற்போது தலா 1,000 மெகாவாட் திறனில் 2 அணு உலைகளில் மின்னுற்பத்தி செய்யப்படுகிறது. அதில் தமிழகத்துக்கு தினமும் 1,152 மெகாவாட் மின்சாரம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு யூனிட் மின்சாரம் கொள்முதல் விலை ரூ.3.50 முதல் ரூ.4 வரை உள்ளது.
அங்கு தலா 1,000 மெகாவாட் திறனில், மேலும் 4 அணு உலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதில், 3 மற்றும் 4-வது உலை களில் உற்பத்தி செய்யப்பட உள்ள மின்சாரம் முழுவதையும் தமிழகத்துக்கு வழங்குமாறு மத்திய மின்வாரியத்துக்கு தமிழக மின்வாரியம் கடந்த ஆண்டு கடிதம்எழுதியது. அதற்கு, 2 உலைகளில் இருந்து தமிழகத்துக்கு 50சதவீத மின்சாரம் வழங்க உள்ளதாகவும், மற்ற மாநிலங்களுக்கு ஒதுக்கியது போக எஞ்சியுள்ள மின்சாரத்தையும் சேர்த்து வழங்குவதாக மத்திய அரசு தெரிவித்தது.
3-வது உலையில் 2025 டிசம்பரிலும், 4-வது உலையில் 2026 ஆகஸ்டிலும் வணிக மின்னுற்பத்தி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட உள்ள மின்சாரத்தை விநியோகம் செய்ய கூடுதல் மின்வழித்தட கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.
எனவே, கூடங்குளம் 3, 4, 5, 6ஆகிய அணு உலைகளில் இருந்துதமிழகத்துக்கு எவ்வளவு மின்சாரம் ஒதுக்கப்படும், மின்கொள்முதல் விலை ஆகிய விவரங்களை தெரிவிக்குமாறு, மத்திய மின்துறை செயலருக்கு தமிழக மின்வாரியம் கடிதம் அனுப்பியுள்ளது.
கூடங்குளம் 3, 4-வது உலைகளில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை விநியோகிக்க திருநெல்வேலி மாவட்டம் சமூகரங்கபுரத்திலும், 5, 6-வது உலைகளில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை விநியோகிக்க விருதுநகரிலும் தலா400 கிலோவோல்ட் திறனில் துணைமின் நிலையம் அமைக்க மின்வாரியம் முடிவு செய்துள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT