Published : 11 Dec 2023 05:54 AM
Last Updated : 11 Dec 2023 05:54 AM
சென்னை: தமிழ் திசை பதிப்பகத்தின் ‘ராஜாஜி:ஒரு தேசிய சகாப்தம்’ என்ற நூலின் அட்டைப்பட முதல் தோற்றத்தை, டாக்டர் ஹெச்.வி.ஹண்டே மற்றும் தமிழருவி மணியன் இணைந்து வெளியிட்டனர்.
மூதறிஞர் ராஜாஜியின் பொது வாழ்க்கையை மிக விரிவாக ஆவணப்படுத்தும் நோக்குடன், தமிழ் திசை பதிப்பகம் ‘ராஜாஜி: ஒரு தேசிய சகாப்தம்’ என்ற தலைப்பில் 800 பக்கங்கள் கொண்ட பெரும் பதிப்பு நூலை தயாரித்துள்ளது. இந்நூலில், ராஜாஜியின் சமகாலத்தலைவர்கள், அவரது அமைச்சரவை சகாக்கள், அரசியல் ஆய்வறிஞர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் அதிகமானவர்களின் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
மேலும், இந்நூலில் ராஜாஜியின்அரசியல் வாழ்வின் இன்றியமையாத் தருணங்களை உயிரோட்டத்துடன் நினைவுகூரும் நூற்றுக்கணக்கான அரிய புகைப்படங்கள் ‘தி இந்து’ ஆவணக் காப்பகத்தின் பொக்கிஷ நூலகத்திலிருந்து பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், மூதறிஞர் ராஜாஜியின் 145-வது பிறந்த தினம்நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னையில் ‘ராஜாஜி:ஒரு தேசிய சகாப்தம்’ நூலின்அட்டைப்பட முதல் தோற்றத்தை,டாக்டர் ஹெச்.வி.ஹண்டே மற்றும்தமிழருவி மணியன் இணைந்து வெளியிட்டனர். இந்நிகழ்வில் தமிழருவி மணியன் பேசும்போது,“இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்’ என்ற குறளுடன், இந்நூலின் முதல் தோற்றத்தை ஹண்டே அவர்களுடன் இணைந்து வெளியிட்ட இத்தருணத்தை பொருத்திப் பார்க்கிறேன். யார்எதை வெளியிடுவது என்பதில்பொருத்தப்பாடு மிக முக்கியமானது. அதை ‘இந்து தமிழ் திசை’ மிகச் சரியாக செய்திருக்கிறது என்பதில் மகிழ்ச்சி. ஏனென்றால், ராஜாஜியை முழுமையாக அறிந்தவர் ஹண்டே. சுதந்திரா கட்சியின் சார்பாக ராஜாஜியால் சட்டப்பேரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டவர்.
இன்றைய இளைய தலைமுறைக்கு ராஜாஜியை தெரியவே தெரியாது. அவர்களுக்குத் தெரிந்தவர்கள் எல்லாம், அழுக்குப் படிந்தஅரசியல்வாதிகள், சினிமா நட்சத்திரங்கள் மட்டும்தான். இதுபோன்ற தலைமுறையில் வரலாற்றை ஆர்வமுடன் படிக்க முன்வரும் மாணவர்களிடம் ‘ராஜாஜி’யை கொண்டு சேர்க்க வேண்டும் என்று நினைப்பது காலத்தின் மிக முக்கியமான தேவையும் இதழியல் பணியும் ஆகும். அதை ‘இந்து தமிழ் திசை’நிறைவேற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.
ஹெச்.வி.ஹண்டே பேசும்போது, “காமராஜரால் தமிழருவி என்று புகழப்பட்ட தூய காந்தியரான தமிழருவி மணியனுடன் இணைந்து இந்நூலின் அட்டைப்பட முதல் தோற்றத்தை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்நூலில், ராஜாஜியை ஒரு சுதந்திரப் போராட்ட வீரராக, அவர் விஸ்வரூபம் எடுத்து நின்ற முதல் 30 ஆண்டுகளின் போராட்ட வாழ்வை விரிவான கட்டுரையாக தகுந்த ஆதாரங்களுடன் எழுதியிருக்கிறேன்.
‘சி.ஆர். ஃபார்முலா’
அதேபோல், தேசப் பிரிவினையின்போது ராஜாஜி அளித்த ‘சி.ஆர்.ஃபார்முலா’ இல்லாமல் போயிருந்தால் நமக்கு மேற்கு வங்காளமும் கிழக்கு பஞ்சாப் உள்ளிட்ட 4 மாநிலங்களும் கிடைத்திருக்காது.
‘ராஜாஜி: ஒரு தேசிய சகாப்தம்’ என்கிற இந்த நூல் ராஜாஜியை இதற்கு முன்பு இல்லாத வகையில் முழுமையாக ஆவணப்படுத்தி இருப்பது, ‘இந்து தமிழ் திசை’ ஆசிரியர் குழுவின் உழைப்புக்கு சிறந்த எடுத்துக்காட்டு” என்றார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ் திசைபதிப்பக தலைமைப் பிரதிநிதி எம்.ராம்குமார், நூலின் தொகுப்பாசிரியர் ஆர்.சி.ஜெயந்தன் ஆகியோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT