Published : 11 Dec 2023 06:50 AM
Last Updated : 11 Dec 2023 06:50 AM
சென்னை: வெள்ளத்தில் சிக்கிய வாகனங்களை பழுதுநீக்க சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக போக்குவரத்து ஆணையர் சண்முகசுந்தரம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வாகன தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனங்களின் சர்வீஸ் சென்டர்கள் அனைத்தும் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. நீரில் மூழ்கிய வாகனங்களை இயக்காமல் மீட்பு வாகனங்கள் மூலம் சர்வீஸ்சென்டர்களுக்கு எடுத்து வருமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் வாயிலாக வாடிக்கையாளர்களுக்கு 3 லட்சத்துக்கும் மேற்பட்ட குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளன.
வாகனத் தயாரிப்பு, காப்பீடு நிறுவனங்கள் சார்பில் முகாம்கள் நடத்தப்படுகின்றன. சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் வாகன பழுதுநீக்கம் செய்யும் பொருட்டு, பிற மாவட்டங்களில் இருந்து தொழில்நுட்பப் பணியாளர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர். உதிரி பாகங்களைக் கொண்டு வரவும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ரூ.20 ஆயிரத்துக்கு குறைவான பாதிப்புள்ள வாகனங்களுக்கு காப்பீட்டுத் தொகை உடனடியாக வழங்கப்படுகிறது. சர்வீஸ் சென்டர்களில் காப்பீட்டு நிறுவன ப்பிரதிநிதிகளும் இணைந்து செயலாற்றுகின்றனர். வாகனங்களை சர்வீஸ் சென்டர்களுக்கு கட்டணமின்றி மீட்பு வாகனங்கள் மூலம் எடுத்து வருவதற்கான நடவடிக்கையும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மூலம் மேற்கொள்ளப்படுகின்றது.
நேற்று முன்தினம் வரை 3,433 வாகனங்கள் பழுது நீக்கப்பட்டுள்ளன. ஆயிரத்துக்கும் மேற்பட்டவற்றுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் மீட்புப் பணிக்காக கூடுதல் வாகனங்களை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பழுதுநீக்கம் தொடர்பாக வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் வெளியிட்ட செய்திகள் tnsta என்ற போக்குவரத்துத் துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. பழுதுநீக்கம், காப்பீடு தொடர்பான முகாம் நடத்துவதற்கான இடங்களை வழங்கவும் அரசு தயாராக உள்ளது. இதற்கு கட்டணம் வசூலிக்கப்படாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT