Published : 10 Dec 2023 11:02 PM
Last Updated : 10 Dec 2023 11:02 PM
மதுரை: மதுரை நாகமலை புதுக்கோட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தென்மண்டல நிர்வாகிகள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் வருகின்ற டிச.29 ம் தேதி திருச்சியில் வெல்லும் ஜனநாயகம் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் தமிழக முதல்வர் ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட தேசிய தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த மாநாடு இண்டியா கூட்டணியின் தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு, எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு அச்சாரம் போடும் மாநாடு, தமிழக அரசியல் வரலாற்றில் முக்கியமானதொரு மாநாடாகும். மேலும் ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து சனாதன சக்திகளை வீழ்த்தும் மாநாடாக அமையும் என கூறினார்.
சென்னையில் தற்போது வீசிய புயல் மழை கடந்த 47 ஆண்டுகளுக்கு முன்பு பெய்தது போல கடுமையான புயல் மழை. இந்த மழையால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மக்களை காக்க முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் முதல் வார்டு உறுப்பினர்கள் வரை கட்சி பாகுபாடின்றி அனைவரும் மக்கள் பணி செய்து வருகின்றனர்.
இந்த பேரிடர் நிவாரண நிதியாக 5000 கோடி வழங்க ஒன்றிய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்திய நிலையில் ஒன்றிய அரசு 1000 கோடியை மட்டும் வழங்கியது அதிர்ச்சியளிக்கிறது.
இந்த நிலையில் மாநில அரசை விமர்சிப்பதை விடுத்து அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒன்றிய அரசிடம் நிவாரண நிதி வழங்க வலியுறுத்த வேண்டும் எனவும் மேலும் இது போன்ற பேரிடர் நேரத்தில் ஆளும்கட்சியை விமர்சிப்பதன் மூலமாக அரசியல் ஆதாயம் தேட நினைப்பது நேர்மறையான அணுகுமுறை அற்ற அற்பமான அரசியல் எனவும் கூறினார்.
மக்கள் துன்பத்தில் இருக்கும் நேரத்தில் எதிர்க்கட்சிகளின் இந்த விமர்சனம் பொறுப்பற்றது என கூறினார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழக அரசின் பொது நிவாரண நிதிக்கு 10 லட்சம் வழங்கியுள்ளது.
இதேபோல் அனைவரும் கட்சி பாகுபாடு இன்றி தமிழக அரசுக்கு நிவாரண நிதி வழங்க முன்வர வேண்டும்.
வரும் பாராளுமன்ற தேர்தலில் வாக்குச்சீட்டு முறை அரசியல் குறித்த கேள்விக்கு.. தேர்தலில் முன்பு இருந்தது போல் வாக்கு சீட்டு முறையை கொண்டு வருவதை வரவேற்பதாகவும் அதேபோல் உறுப்பினர்கள் எண்ணிக்கையில் அல்லாமல் வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் தேர்வு செய்யும் முறையை கொண்டுவர வேண்டும் இலங்கையில் இந்த நடைமுறை உள்ளது ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் வித்தியாசம் இரண்டு சதவீத வாக்குகள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் கட்சி எம்.பி வீட்டில் 290 கோடி பணம் மீட்பு குறித்த கேள்விக்கு.. காங்கிரஸ் கட்சி எம்.பி வீட்டில் கருப்பு பணம் கைப்பற்றபட்டதற்கு மோடி அது மக்கள் பணம் என கூறியது பற்றிய கேள்விக்கு வெளிநாட்டில் உள்ள கருப்பு பணத்தை கொண்டு வந்து சேர்ப்பதாக கூறிய மோடி அதை இதுவரை செய்யவில்லை அதேபோல் ஒன்றிய ஆளும்கட்சியினர் வீட்டிலோ அல்லது அவர்களுக்கு ஆதரவான தொழிலதிபர் வீட்டிலோ எந்த விதமான சோதனையும் நடைபெறவில்லை.
மாறாக பாஜகவுக்கு எதிரானவர்கள் இடத்தில் மட்டுமே இதுபோன்ற சோதனைகள் நடப்பது எதிர்கட்சிகளை முடக்க பாஜக செய்யும் வேலை.
மூன்று மாநில தேர்தல் குறித்த கேள்விக்கு.. மாநில தேர்தல்களை பொறுத்த அளவில் அந்தந்த மாநில சூழலை பொறுத்தே அதன் முடிவுகள் வெளிவரும். நடந்து முடிந்த தேர்தல் காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கோ அல்லது ராகுல்காந்தி மற்றும் மோடிக்கோ எதிராக நடைபெற்ற தேர்தல் அல்ல . இந்த வெற்றிகள் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்காது.
வன்கொடுமை குறித்த கேள்விக்கு.. வன்கொடுமை தடுப்பு சட்டத்தை முறையாகவும் தீவிரமாகவும் நடைமுறைப்படுத்த அதிகாரிகள் முன்வர வேண்டும். வன்கொடுமை தடுப்பு சட்டத்தை தமிழக அரசு உட்பட அனைத்து மாநில அரசுகளும் வன்கொடுமைக்கு எதிராக கடுமையாக பின்பற்ற வேண்டும் என திருமாவளவன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT