Published : 10 Dec 2023 04:01 PM
Last Updated : 10 Dec 2023 04:01 PM

பொள்ளாச்சி அருகே பாலாற்றில் வெள்ளப்பெருக்கு: ஆஞ்சநேயர் கோயிலை சூழ்ந்த வெள்ளம்

கனமழை காரணமாக ஆனைமலை அருகே சோமந்துறை சித்தூர் கிராமத்தில் பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அடித்துச் செல்லப்பட்ட தரைப்பாலம்.

பொள்ளாச்சி: ஆனைமலை பகுதியில் பெய்த கன மழையால் பாலாற்றில் உள்ள தரைப்பாலம் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. இதனால் அவ்வழியாக போக்குவரத்து துண்டிக்கப் பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான மாவடப்பு, திருமூர்த்தி மலைப்பகுதிகளில் உற்பத்தியாகி மேற்கு நோக்கி பாய்கிறது பாலாறு. அர்த்த நாரிபாளையம், கம்பாலபட்டி, மஞ்ச நாயக்கனுார், துறையூர், கரியாஞ்செட்டிபாளையம் வழியாக பயணித்து, பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோயில் வழியாக ஆழியாறு ஆற்றில் கலக்கிறது.

அதன் பின், கேரள மாநிலம் நோக்கி பயணிக்கிறது. பாலாற்றின் நீர்ப் பிடிப்பு பகுதியான நல்லாறு பகுதியில் நேற்று முன்தினம் 153 மில்லி மீட்டர் மழை பெய்தது. இதனால் பாலாற்றில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சோமந்துறை சித்தூர் கிராமத்தில் பாலாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டும் பணி நடைபெற்று வருவதால், தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த தரைப்பாலம் காட்டாற்று வெள்ளத்தில் நேற்று அதிகாலை அடித்து செல்லப்பட்டது. இதனால் இவ்வழியாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

பொதுமக்கள் வேலைக்குச் செல்ல முடியாமலும், மாணவ, மாணவியர் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல முடியாமலும் தவித்தனர். சோமந்துறை, தென்சித்தூர் பகுதி மக்கள் 10 கி.மீ., சுற்றி வால்பாறை சாலை வழியாக பொள்ளாச்சிக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. நெகமம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகிறது.

வெள்ளம் சூழ்ந்துள்ள பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோயில்.

நேற்று முன்தினம் நெகமத்தில் 117 மில்லி மீட்டர் மழை பெய்தது. இதன் காரணமாக நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. மழைநீர் தென்னந்தோப்புக்குள் தேங்கி குளம் போல காட்சியளிக்கிறது. பொள்ளாச்சி அடுத்த சண்முகபுரத்தில் பாலாற்றங்கரையில் சுமார் 200 ஆண்டுகள் பழமையான ஆஞ்சநேயர் கோயில் உள்ளது.

கடந்த சில நாட்களாக அர்த்தநாரிப் பாளையம் வனப்பகுதியில் பெய்த கனமழையால் மாடேத்தி பள்ளம், ஆலாங்கண்டி பள்ளங்களில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் பாலாற்றின் கரையில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலை நேற்று வெள்ளம் சூழ்ந்தது. கோயிலுக்கான தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியது.

நேற்று சனிக்கிழமை என்பதால் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வந்தனர். பக்தர்களின் பாதுகாப்பு கருதி கோயிலின் நடை சாத்தப்பட்டு பக்தர்கள் கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப் படவில்லை. ஆற்றில் வெள்ளம் குறைந்த பின், நடைதிறந்து வழக்கமான பூஜைகள் நடைபெறும் என கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x