Published : 10 Dec 2023 12:43 PM
Last Updated : 10 Dec 2023 12:43 PM

''வங்கக்கடலில் தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பது சட்டப்பூர்வ உரிமையாக்கப்பட வேண்டும்'': அன்புமணி ராமதாஸ்

சென்னை: "வங்கக்கடலில் பாரம்பரியமாக தமிழக மீனவர்கள் மீன்பிடித்து வரும் பகுதிகளில் தொடர்ந்து தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பது சட்டப்பூர்வ உரிமையாக்கப்பட வேண்டும். இது தொடர்பாக இலங்கை அரசுடன் மத்திய அரசு பேச்சு நடத்த வேண்டும். இப்போது கைது செய்யப்பட்ட 25 மீனவர்கள் உட்பட இலங்கை சிறைகளில் வாடும் அனைத்து மீனவர்களையும், இலங்கை அரசிடம் உள்ள அனைத்து படகுகளையும் மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக தனது எக்ஸ் வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ''நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து வங்கக்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற நாகப்பட்டினம் மற்றும் புதுவை காரைக்கால் மாவட்டங்களைச் சேர்ந்த 25 மீனவர்களை கைது செய்துள்ள இலங்கைக் கடற்படை அவர்களின் இரு படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது. தனுஷ்கோடி அருகே ராமேஸ்வரம் மீனவர்களின் விசைப்படகு மீது தங்களின் படகை மோதி சேதப்படுத்தியுள்ளது சிங்களக் கடற்படை. இத்தாக்குதலில் சேதமடைந்த படகில் இருந்த 5 மீனவர்கள் நல்வாய்ப்பாக உயிர் பிழைத்துள்ளனர். சிங்களக் கடற்படையினரின் இத்தகைய அத்துமீறல்கள் கண்டிக்கத்தக்கவை.

கடந்த 7-ம் தேதி தான் ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை மீன்வர்கள் 21 பேரை சிங்களக் கடற்படை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது. அவர்களை விடுதலை செய்வதற்கான முயற்சிகள் வெற்றி பெறாத நிலையில் மேலும் 25 பேரை சிங்களக் கடற்படை கைது செய்துள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கடலுக்கு செல்லாத மீனவர்கள் கடந்த சில நாட்களாகத் தான் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். அதற்குள்ளாகவே அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது தமிழக மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்துடன் தான் அவர்களை சிங்களக் கடற்படை கைது செய்து வருகிறது என்பதை பலமுறை சுட்டிக்காட்டியிருக்கிறேன். இதை உணர்ந்து இந்த சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் கடிதங்களை மட்டும் எழுதிக் கொண்டிருப்பது போதாது. அதனால் எந்த பயனும் ஏற்படாது.

வங்கக்கடலில் பாரம்பரியமாக தமிழக மீனவர்கள் மீன்பிடித்து வரும் பகுதிகளில் தொடர்ந்து தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பது சட்டப்பூர்வ உரிமையாக்கப்பட வேண்டும். இது தொடர்பாக இலங்கை அரசுடன் மத்திய அரசு பேச்சு நடத்த வேண்டும். இப்போது கைது செய்யப்பட்ட 25 மீனவர்கள் உட்பட இலங்கை சிறைகளில் வாடும் அனைத்து மீனவர்களையும், இலங்கை அரசிடம் உள்ள அனைத்து படகுகளையும் மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x