Published : 10 Dec 2023 05:08 AM
Last Updated : 10 Dec 2023 05:08 AM

தமிழகம் முழுவதும் நடைபெற்ற தேசிய லோக்-அதாலத்: 47,314 வழக்குகளில் பயனாளிகளுக்கு ரூ.334 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு

சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக்-அதாலத்தில் நீதிபதி சி.குமரப்பன் தலைமையில் வழக்குகள் விசாரிக்கப்பட்டன.

சென்னை: தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்ற தேசிய லோக்-அதாலத்தில் 47,314 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, பயனாளிகளுக்கு ரூ.334.49 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியும், மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமான எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் உயர் நீதிமன்ற மூத்த நீதிபதியும், மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு செயல் தலைவருமான எஸ்.வைத்தியநாதன் மற்றும் உயர் நீதிமன்ற சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மூத்த நீதிபதியுமான டி.கிருஷ்ணகுமார் ஆகியோரது அறிவுறுத்தலின்படி மாநிலம் முழுவதும் நேற்று 4-வது தேசிய லோக்-அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏ.ஏ.நக்கீரன், கே.ஜி.திலகவதி, சி.குமரப்பன், ஓய்வுபெற்ற நீதிபதிகள் ஏ.ராம மூர்த்தி,மலை சுப்ரமணியன், எம்.ஜெயபால், பி.கோகுல்தாஸ் ஆகியோரது தலைமையில் 7 அமர்வுகளும், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் பி.பி.பாலாஜி, ஆர்.கலைமதி மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதிகள் ஏ.ஆர்.ராமலிங்கம், ஜி.சொக்கலிங்கம் ஆகியோரது தலைமையில் 4 அமர்வுகளும் ஏற்படுத்தப்பட்டு வழக்குகள் விசாரிக்கப்பட்டன. இதேபோல மாநிலம் முழுவதும் உள்ள கீழமை நீதிமன்றங்களில் 480 அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டு நிலுவை வழக்குகள் விசாரிக்கப்பட்டன. இதில் 47,314 நிலுவை வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 334 கோடியே 49 லட்சத்து 46,953-ஐஇழப்பீடாக வழங்க உத்தரவிடப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் செயலர் மற்றும் மாவட்ட நீதிபதியுமான ஏ.நசீர் அகமது, உயர் நீதிமன்ற சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலர் மற்றும் மாவட்ட நீதிபதியுமான கே.சுதா உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x