Last Updated : 27 Jan, 2018 08:45 AM

 

Published : 27 Jan 2018 08:45 AM
Last Updated : 27 Jan 2018 08:45 AM

இந்தியா முழுவதும் ஆதார் பிளாஸ்டிக் கார்டு வழங்கும் பணி நிறுத்தம்: பொது மக்கள் கடும் அவதி

தமிழ்நாட்டில் இ-சேவை மையங்களில் ஆதார் பிளாஸ்டிக் கார்டு வழங்குவது கடந்த 3 வாரங்களாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

தமிழகத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனம் நடத்தும் 694 இ-சேவை மையங்களில் 997 கவுன்ட்டர்கள் மூலம் ஆதார் அட்டை பதிவு செய்யப்பட்டு, ரூ.10-க்கு ஆதார் எண் கொண்ட கலர் பிரிண்ட் அவுட் வழங்கப்படுகிறது. மேலும், ரூ.30 செலுத்தினால் ஆதார் பிளாஸ்டிக் கார்டும் கிடைக்கும்.

தமிழகத்தில் இதுவரை 6 கோடி பேருக்கு ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ளோருக்கு ஆதார் அட்டை வழங்கும் பணி மும்முரமாக நடக்கிறது. அதனால், இ-சேவை மையங்களில் கூட்டம் குறையாமல் இருக்கிறது. மேலும் ஆதார் அட்டையில் பெயர், முகவரி போன்றவற்றில் திருத்தம் செய்யவும் இ-சேவை மையங்களில் மக்கள் குவிகின்றனர்.

இந்நிலையில், இ-சேவை மையங்களில் ரூ.30-க்கு வழங்கப்பட்டு வந்த ஆதார் பிளாஸ்டிக் கார்டுகள் கடந்த 3 வாரங்களாக வழங்கப்படவில்லை. இதனால், ஆதார் எண் கிடைத்தாலும் பிளாஸ்டிக் கார்டு கிடைக்காமல் மக்கள் சிரமப்படுகின்றனர்.

இ-சேவை மையங்களில் பிளாஸ்டிக் கார்டு கிடைக்காததால், பிரவுசிங் சென்டருக்கு சென்று ஆதார் கலர் பிரிண்ட் அவுட் எடுத்து, அதிலிருந்து பிளாஸ்டிக் கார்டு போன்ற வடிவத்தில் லேமினேஷன் செய்து கொள்கின்றனர். இதற்கு ரூ.50 வசூலிக்கப்படுகிறது. பல இடங்களில் இதற்கு அதிகமாவும் கட்டணம் வசூலிக்கிறார்கள்.

இதுகுறித்து அரசு கேபிள் டிவி நிறுவன அதிகாரி ஒருவர் கூறிய தாவது:

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் நடத்தும் இ-சேவை மையங்களில் மத்திய அரசின் போர்ட்டலான ‘அப்னா சிஎஸ்சி’யின் இணைப்பு மூலம் ஆதார் பிளாஸ்டிக் கார்டுகள் வழங்கப்பட்டன. இப்போது இந்த போர்ட்டல் பாதுகாப்பு தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதால் இந்தியா முழுவதும் ஆதார் பிளாஸ்டிக் கார்டுகள் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதனால் தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் கார்டுகள் வழங்க முடியவில்லை. ஆதார் பிளாஸ் டிக் கார்டுகள் வழங்கப்படாத தால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாவதாகவும், அதனால் மத்திய அரசின் போர்ட்டல் சேவையை விரைவில் தொடர வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு அரசு கேபிள் டிவி நிறுவனம் சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

ஆதார் பிளாஸ்டிக் கார்டுகள் வழங்கப்படாவிட்டாலும், ஆதார் பதிவு தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆதார் பதிவு முடிந்து, எண் வந்தவர்களுக்கு `ஏ4’ அளவில் பிரிண்ட் அவுட் எடுத்துத் தருகிறோம். அதனைக் கொண்டு ஆதார் தேவைப்படும் இடங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x