Published : 09 Dec 2023 09:10 PM
Last Updated : 09 Dec 2023 09:10 PM
சென்னை: “இதுவரை 20 ஆயிரம் டன் குப்பைகள் அகற்றப்பட்டுவிட்டது. சென்னையில் 19 இடங்களில் மட்டும்தான் தண்ணீர் தேங்கியுள்ளது. திங்கள்கிழமைக்குள் அனைத்து பணிகளும் முடிந்துவிடும்” என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சென்னையில் 19 இடங்களில் மட்டும்தான் நீர் அகற்றப்படாமல் இருக்கிறது. தண்ணீர் அகற்றும் பணியை நாளை மாலைக்குள் முழுமையாக முடித்துவிடுவோம் என அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். இன்றைக்கு கூட கூடுதலாக மோட்டார்கள் கேட்டார்கள். கொடுத்துவிட்டோம். இதுவரை 20 ஆயிரம் டன் குப்பைகள் அகற்றப்பட்டு விட்டது. குப்பைகள் அகற்றும் பணி ஓரிரு நாட்களில் முடிவு பெற்றுவிடும். வீட்டிலிருக்கும் குப்பைகளை தெருவில் வீசுகின்றனர், இதனால் தாமதமாகிறது.
எனவே, முழுமையாக சென்னை நகரம் கிட்டத்தட்ட இயல்பு நிலைக்கு வந்துவிட்டது. ஒரு சில இடங்களைத் தவிர, மற்ற இடங்களுக்கும் தேவையான குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. பெரும்பாக்கம் போன்ற இடங்களில் நீர்தொட்டிகளுக்கு நேரடியாக தண்ணீர் கொடுத்திருக்கிறோம். 400 மேற்பட்ட மாநகராட்சிகளில் 6 பள்ளிகளில் மட்டுமே வகுப்பறைகள் சுத்தப்படுத்தபடவில்லை. காரணம், ஏரிக்கு அருகில் இருப்பதால் நீர் வந்துகொண்டேயிருக்கிறது. அந்த மாணவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்படும்.
புதிய கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். கழிவறைகள் சரிபார்க்கப்பட்டுள்ளது. அனைத்து அதிகாரிகளும் 6-7 நாட்களாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். வெளியிலிருந்து வந்த 2500 மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் சென்னையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். திங்கள்கிழமைக்குள் அனைத்து பணிகளும் முடிந்துவிடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT