Published : 09 Dec 2023 08:00 PM
Last Updated : 09 Dec 2023 08:00 PM

மிக்ஜாம் புயல் பாதிப்பால் சேதமடைந்த சான்றிதழ்களை கட்டணமின்றி பெற சிறப்பு முகாம்

சென்னை: மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்பினால் சேதமடைந்த அரசு மற்றும் பள்ளி - கல்லூரி சான்றிதழ்கள் கட்டணமில்லாமல் சிறப்பு முகாம்கள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பான தமிழக அரசின் செய்திக் குறிப்பு: தமிழ்நாட்டில் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மாவட்டத்திலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளிலும் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டு, கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு அரசால் பல்வேறு மீட்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மழை, வெள்ள பாதிப்பினால் குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, பிறப்புச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், வாரிசு சான்றிதழ், பள்ளி, கல்லூரிச் சான்றிதழ்கள் உள்ளிட்ட அரசு ஆவணங்களை இழந்தவர்கள், அவற்றை மீண்டும் பெறும் வகையில், அதற்கென சிறப்பு முகாம்களை நடத்தி, பொது மக்களுக்கு கட்டணமின்றி அதனை வழங்கிட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அதனடிப்படையில், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட வருவாய் வட்டங்களில், குறுவட்ட அளவிலான சிறப்பு முகாம்கள் வருகிற 11-12-2023 (திங்கட்கிழமை) அன்றும், சென்னை மாவட்டத்தில், சென்னை மாநகராட்சியின் கோட்ட அலுவலகங்களில் வருகிற 12-12-2023 (செவ்வாய்க்கிழமை) அன்றும் தொடங்கப்படும். சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடம் மற்றும் நேரம் குறித்த அறிவிப்பு தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்கள் மூலம் அறிவிக்கப்படும். மேற்படி சிறப்பு முகாம்களில், பொதுமக்களின் வசதிக்கென, இ-சேவை மையங்களும் செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x