Published : 09 Dec 2023 04:52 PM
Last Updated : 09 Dec 2023 04:52 PM
கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் அரசு ஒப்பந்தப் பணிகள் முடித்து அதன் திறப்பு விழாவின்போது வைக்கப்படும் கல்வெட்டுகளில் பெயர்கள் பதிவதில் சிலரது பெயர்கள் திட்டமிட்டு தவிர்க்கப்படுவதால், மக்கள் பிரதிநிதிகளுக்கும், கட்சியினருக்கும் இடையே சர்ச்சைகள் நிலவி வருகின்றன. குறிப்பாக, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமீப காலமாக இது தொடர்பாக புகார்கள் அதிகமாக வருகின்றன. ஊரக வளர்ச்சித் துறை மூலம், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பரிந்துரையின் பேரில், எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் மேற்கொள்ளப்படும் பள்ளிக் கட்டிடத் திறப்பு விழா, நியாய விலைக் கடை திறப்பு விழா, அரசு அலுவலகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் உள்ளாட்சிப் பொறுப்புகளில் உள்ளவர்களின் பெயர்களை சில நேரங்களில் நீக்கி விடுவதாக வருத்தம் தெரிவிக்கின்றனர்.
கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில் நீலமங்கலம், சிறுவங்கூர், ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்தில் ஈருடையப்பட்டு ஊராட்சி, திம்மலை உள்ளிட்ட ஊராட்சிகளில் திமுகவினரிடையே நிலவும் கோஷ்டி பூசலால் ஊராட்சி மன்றத் தலைவர் பெயரைப் தவிர்ப்பது, துணைத் தலைவர் பெயரை தவிர்ப்பது, பட்டியலின கவுன்சிலர் பெயரை தவிர்ப்பது போன்ற நிகழ்வுகளால் அவர்களுக்கிடையே மனவருத்தங்கள் அதிகரித்து வருகின்றன. இதுதொடர்பாக தொடர்ச்சியாக வரும் புகார்களால் ஊரக வளரச்சித்துறையினரும், நகராட்சி ஆணையர்களும் திண்டாடத்துக்கு ஆளாகியுள்ளனர்.
இதுதொடர்பாக பெயர் கூற விரும்பாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஒருவர் கூறுகையில், “அந்த காலத்தில் செயற்கரிய மக்கள் நலப்பணிகளை செய்தது ஆகியவை அந்த கல்வெட்டுகளின் மூலம் முன்நிறுத்தப்பட்டது. தற்கால கல்வெட்டுகளில் தங்கள் பெயர்களை முன்நிறுத்த விரும்புவோர் அதன் மூலமும் தாங்கள் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என்று விரும்புகின்றனர். கல்வெட்டில் யார் யார் பெயர்கள் இடம்பெற வேண்டும் என்பதை ஆட்சியரின் ஆலோசனையோடு மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர்கள் தான் முடிவு செய்வர். அதன்படிதான் கல்வெட்டு தயார் செய்ய வேண்டும். இதில் முறையாக அவர்கள் கேட்டு ஒரு முடிவு எடுத்தாலும், திமுக நிர்வாகளுக்கிடையே இருக்கும் கோஷ்டிப் பூசல், இதில் தீராத சிக்கலை ஏற்படுத்தி விடுகிறது. கடந்த இரண்டரை ஆண்டுகளாக இந்தப் போக்கு அதிகமாக உள்ளது” என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT