Published : 09 Dec 2023 04:50 PM
Last Updated : 09 Dec 2023 04:50 PM
புதுச்சேரி: புதுச்சேரி யூனியன் பிரதேசமானது நீண்டகாலமாக நிலுவையில் உள்ள நிதி சிக்கல்களால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. இது, புதுச்சேரி வளர்ச்சியின் வேகத்தை, குறிப்பிடத்தக்க வகையில் தொடர்ந்து மெதுவாக்குகிறது. மத்திய நிதிக் கமிஷனில், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து நிலுவையில் உள்ளது. நிதிக் கமிஷனில் புதுச்சேரியைச் சேர்க்க வேண்டும். அவ்வாறு சேர்க்க, அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்து தர வேண்டும். புதுச்சேரி யூனியன் பிரதேசம், நிதி விஷயத்தில் முன்னேற்றம் பெற மத்திய அரசின் ஆதரவு மிகவும் முக்கியமானது என்று அனைத்து தரப்பினராலும் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.
இதற்காக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 280-வது பிரிவின் அரசியலமைப்புத் திருத்தம் செய்ய வேண்டியது அவசியமாகிறது. ஒரே மாநிலமாக இருந்த ஜம்மு - காஷ்மீர் நிர்வாக காரணங்களுக்காக மத்திய அரசால் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. பிரிக்கப்பட்ட இரண்டு யூனியன் பிரதேசங்களும் 15-வது மத்திய நிதிக் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால், சட்டப்பேரவையுடன் இயங்கும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை இதுவரை மத்திய நிதிக் குழுவில் சேர்க்கவில்லை. புதுச்சேரியின் மிக முக்கிய நிதி ஆதார பிரச்சினை இது என்பதால், புதுச்சேரியை 16-வது நிதிக்குழுவின் பரிந்துரை எல்லைக்குள் கொண்டு வருவதற்கு வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் துணைநிலை ஆளுநரும், முதல்வரும் எடுத்து மத்திய அரசிடம், மத்திய நிதி அமைச்சரிடம் கோரிக்கைவைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் அதுபோல் ஏதும் நடக்கவில்லை.
இந்தியாவின் 16-வது நிதிக்குழு நவம்பர் இறுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு மத்திய அரசின் நிதியை மாநிலங்களுக்கு எந்த விகிதத்தில் பிரித்தளிக்க வேண்டும் என்ற கோட்பாடுகளை தயாரித்து கொடுக்க உள்ளது. இக்குழு அளிக்கும் பரிந்துரையின் பேரில் 2026-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து 5 ஆண்டுகளுக்கு அதாவது 2030 வரை மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் நிதியுதவி அளிக்க உள்ளது. இதுபற்றி புதுவை மக்கள் முன்னேற்றக்கழக நிறுவனரும் முன்னாள் எம்.பியுமான பேராசிரியர் ராமதாஸ் கூறுகையில், “சமீபத்தில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் 16-வது நிதிக் குழுவின் பணிகள் பற்றியவிதிமுறைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதில் நிதி பற்றிய 2 விதிமுறைகள் புதுவை பிரதேச மக்களுக்கு மீண்டும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. இந்த விதிகளால் புதுவைக்கு தேவையான நிதியை பெற முடியாது. புதுவை மாநிலமாக இல்லாவிட்டாலும் 16-வது நிதிக்குழுவில் சேர்க்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பிரதமர், நிதித்துறை அமைச்சரை சந்தித்து இதை வலியுறுத்தியிருந்தால் 16-வது நிதிக்குழுவில் புதுவை சேர்க்கப்பட்டிருக்கும். இதைச் செய்ய தவறியதால் புதுவை மாநிலமாகும் வரை நிதிக்குழுவின் வரையறைக்குள் செல்ல முடியாது. இதனால் மத்திய அரசின் வரி வருவாயில் புதுவைக்கு பங்கு கிடைக்காது. அரசியல் சட்ட விதி எண் 275-ன் கீழ் வழங்கப்படும் மானிய உதவி வழங்கப்படாது.
உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதி, கடன் நிவாரணம், இயற்கை சீற்ற நிதி, புனரமைப்பு மானியங்கள், கல்வி மானியம் மாநில சிறப்பு தேவைகளுக்கான நிதி, திட்ட உதவி எதுவும் கிடைக்காது. இந்தச் சிக்கல் புதுவைக்கு பெரிய நிதிஇழப்பை ஏற்படுத்தும். இதனால் புதுச்சேரி பொருளாதார வளர்ச்சியையும் வேலை வாய்ப்பையும் இழந்து நிற்கப் போகிறது. இதற்கு ஆளுநர் தமிழிசையும், முதல்வர் ரங்கசாமியும்தான் பொறுபேற்க வேண்டும். புதுச்சேரி மக்களின் முன்னேற்றதுக்கு உதவும் வகையில் நிதியை பெருக்க இருவரும் தவறியுள்ளனர்” என்று தெரிவிக் கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT