Published : 09 Dec 2023 04:41 PM
Last Updated : 09 Dec 2023 04:41 PM
சென்னை: வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையம் அருகில் அருந்ததி நகர் எனப்படும் பகுதி உள்ளது. இப்பகுதியில் இருந்து வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையத்துக்கு பெரம்பூர் கணேசபுரம் சுரங்கப்பாலம் அருகில் உள்ள பாதை வழியாகவும், ஏஏ சாலை வழியாகவும் செல்ல முடியும். ஆனால் அருந்ததி நகர் மக்கள் பயன்படுத்தும் வகையில் போலெரி அம்மன் கோயில் தெருவின் ஆரம்ப பகுதியில் இருந்து ரயில் தண்டவாளத்தை ஒட்டிச் செல்லும் பாதை பயன்பாட்டில் இருந்து வந்தது. கடந்த சில ஆண்டுகளாகவே போதிய பராமரிப்பின்றி, பாதை முழுவதும் குப்பைகள் நிறைந்து காணப்படுகின்றன.
மேலும், பாதை தெரியாத அளவுக்கு முட்புதர்கள் மண்டி ஆக்கிரமித்து உள்ளதால் ஏதோ காட்டுக்குள் செல்லும் ஒத்தையடி பாதைபோல் காட்சியளிக்கிறது. குறிப்பாக கட்டிடக் கழிவு உள்ளிட்டவற்றை மாநகராட்சியே கொட்டுவதாகவும் கூறப்படுகிறது. தற்போது குப்பை கொட்டும் இடமாகவே இப்பாதை மாறியுள்ளது இதனால் அருந்ததி நகர் மக்கள் மிகவும் சிரமம் அடைந்துள்ளனர். குப்பைகளாலும், முட்புதர்களாலும் சூழப்பட்ட இந்த ஆபத்தான வழியில் செல்ல பயந்து அப்பகுதி மக்கள் வியாசர்பாடி, கணேசபுரம் வழியாக சுற்றி வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையம் செல்கின்றனர்.
இது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சி.பி.பரந்தாமன் கூறியதாவது: வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையத்தை எளிதில் அணுகும் வகையில் அருந்ததி நகர் அருகே உள்ள பாதை போதிய பராமரிப்பின்றி கடந்த சில ஆண்டுகளாகவே புதர் மண்டி கிடக்கிறது. அப்பகுதி மக்கள் மட்டுமின்றி சுற்றுப்புறத்தில் இருப்பவர்களும் குப்பை கொட்டும் இடமாகவே மாற்றுகின்றனர். இதனால் விஷபூச்சிகள் உலவுவதால் குடியிருப்புவாசிகள் அச்சத்தில் உள்ளனர். இங்கு கொட்டப்படும் குப்பைகளை பல முறை கோரிக்கை விடுத்து அகற்றி வருகிறோம். அப்பகுதியாக செல்வோர் கூட இயற்கை உபாதைகளை கழிக்கும் இடமாக பயன்படுத்துவது வேதனையளிக்கிறது.
அதேநேரம், இப்பாதையை சீரமைக்காமல் ரயில் நிலையத்தில் நடைமேம்பாலத்துக்கான பாதை அமைக்கப்படுகிறது. இது முற்றிலும் பயனளிக்காத நடவடிக்கையாகும். இதுதொடர்பாக தொகுதி எம்எல்ஏ, எம்.பி. முதல் ரயில்வே அமைச்சர் வரை கோரிக்கை கடிதங்களை அனுப்பியும் பயனில்லை. மழையின்போது அருந்ததி நகரில் இருந்து ரயில் நிலையம் செல்லும் வழியில் இருக்கும் சுரங்கப்பாதையிலும் நீர் தேங்கிவிடுகிறது. இவையனைத்துக்கும் மேலாக, இப்பகுதி மக்கள் அதிக தூரம் சுற்றிச் செல்வதை தவிர்க்க, ஆபத்தான முறையில் தண்டவாளங்களைக் கடந்து ரயில் நிலையத்தை அணுகுகின்றனர்.
இதனால் விபத்துகள் நேரிடுகின்றன. இங்கு சாலை, மின்விளக்குகள் போன்றவற்றை அமைத்து பாதையை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையை ரயில்வே நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இது தொடர்பாக ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, "நடைமேம்பால பணிகள் முடிவடைந்த பிறகு, பாதையை சீரமைப்பதற்கான நடவடிக்கை குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT