Published : 09 Dec 2023 04:35 PM
Last Updated : 09 Dec 2023 04:35 PM
சென்னை: சிந்தாதிரிப்பேட்டை- கடற்கரை இடையே மின்சார ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அலுவலகம் செல்லும் பயணிகள் வசதிக்காக, சேப்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து தலைமைச் செயலகம் இடையே காலை, மாலை வேளையில் சிற்றுந்து சேவை இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், நேரிடையாக பேருந்துகளை இயக்க வாய்ப்பு இல்லை என போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துவிட்டனர்.
சென்னை எழும்பூர் - கடற்கரை இடையேயான 4-வது பாதை அமைக்கும் பணி கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி தொடங்கியது. தற்போது, இப்பணிகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்தப்பணி தொடங்கியபோது, கடற்கரை - வேளச்சேரி பறக்கும் ரயில் வழித்தடத்தில், சிந்தாதிரிப்பேட்டை - கடற்கரை இடையே ரயில் சேவை நிறுத்தப்பட்டது. அதேநேரத்தில், போக்குவரத்து இணைப்பை ஏற்படும் வகையில், சிந்தாதிரிப்பேட்டை - கடற்கரை இடையே பேருந்து சேவை தொடங்கப்பட்டது. சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து சென்ட்ரல், கோட்டை, சென்னை கடற்கரை ரயில் நிலையத்தை இணைக்கும் தினசரி 140 பேருந்து சேவைகள் கடந்த ஆக.27-ம் தேதி முதல் தொடங்கின.
இதன்பிறகு, 220 பேருந்து சேவைகளாக அதிகரிக்கப்பட்டன. தற்போது, நாள்தோறும் சுமார் 200-க்கும் மேற்பட்ட சேவைகள் வழங்கப்படுகின்றன. இருப்பினும், சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து தலைமைச்செயலகம் சென்று திரும்பும் ஊழியர்களுக்கு இந்த பேருந்து சேவை வசதியாக இல்லை. இந்த பேருந்துகள் சுற்றிச்செல்வதால், சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து தலைமைச்செயலகம் செல்ல தாமதம் ஏற்படுகிறது. இதனால், பலரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். மேலும் பலர் இந்த பேருந்து சேவைகளை தவிர்க்கின்றனர். இந்நிலையில், சேப்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து தலைமைச் செயலகத்துக்கு பேருந்து அல்லது சிற்றஉந்து சேவைகளை இயக்க வேண்டும்என்று கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து தலைமைச்செயலக ஊழியர்கள் சாந்தி மற்றும் ஹரிஹரன் ஆகியோர் கூறியதாவது: நாங்கள் வேளச்சேரியில் இருந்து கடற்கரை வழித்தடத்தில் இயக்கப்பட்ட மின்சார ரயிலில் ஏறி, கோட்டை ரயில் நிலையத்தில் இறங்கி தலைமைச் செயலகம் சென்று திரும்புவோம். சுமார் 2,000 பேர் இந்த வழித்தடத்தில் இயக்கப்பட்ட ரயில்களில் தலைமைச்செயலகம் சென்று திரும்பி வந்தோம். தற்போது, கடற்கரை-எழும்பூர் 4-வது பாதை பணி காரணமாக, கடற்கரை-சிந்தாதிரிப்பேட்டை இடையே ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக, வேளச்சேரி - சிந்தாதிரிப்பேட்டை இடையே மின்சார ரயில் இயக்கப்படுகிறது.
கூடுதல் கட்டணம்: மக்களுக்கு போக்குவரத்து இணைப்பை ஏற்படுத்த சிந்தாதிரிப்பேட்டை - கடற்கரை இடையே பேருந்து சேவை இயக்கப்படுகிறது. சிந்தாதிரிப் பேட்டையில் ரயிலில் இருந்து இறங்கி, பேருந்தை பிடித்து தலைமைச்செயலகம் செல்வது மிகவும் சிரமமாக உள்ளது, மேலும், தாமதம் ஏற்படுகிறது. எனவே, ஆட்டோ, கார் பிடித்து செல்கிறோம். இதற்காக கூடுதல் கட்டணம் செலுத்தி வருகிறோம். எனவே, சேப்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து தலைமைச் செயலகத்துக்கு தினசரி பேருந்து அல்லது சிற்றுந்துகளை இயக்க வேண்டும்.
இந்த பேருந்து நேரிடையாக சென்றால் நேரம் குறையும். சேப்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து தினசரி காலை 9.45, 10.10, 10.35 ஆகிய நேரங்களிலும், அதோபன்று, தலைமைச் செயலகத்தில் இருந்து சேப்பாக்கத்துக்கு மாலை 5.45, 6.15, 6.35 ஆகிய நேரங்களிலும் சிற்றுந்து சேவையை இயக்க வேண்டும். இது தலைமைச்செயலக ஊழியர்களுக்கும், அந்த வழியாக செல்லும் பொது மக்களுக்கும் உதவியாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
போக்குவரத்து அதிகாரிகள் விளக்கம்: இது குறித்து மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, "சேப்பாக்கம் ரயில் நிலையத்தில் பேருந்துகளையோ அல்லது சிற்றுந்துகளையோ திருப்ப வசதியில்லை. எனவே, சேப்பாக்கம் ரயில் நிலையம்-தலைமைச் செயலகத்துக்கு நேரிடையாக பேருந்து இயக்க வாய்ப்பில்லை. அதேநேரத்தில், சென்ட்ரலில்இருந்து சேப்பாக்கம் வழியாக 32 சி கட் என்னும் பேருந்து இயக்கப்படுகிறது. இதை விட மிகவும் எளிதாக அருகில் உள்ள திருவல்லிக்கேணி ரயில் நிலையத்தில் இறங்கினால், ஏராளமான பேருந்துகள் தலைமைச் செயலகம் வழியாக இயக்கப்படுகின்றன" என்று தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT