Last Updated : 09 Dec, 2023 04:43 PM

 

Published : 09 Dec 2023 04:43 PM
Last Updated : 09 Dec 2023 04:43 PM

குழந்தை மாயமான வழக்குகளில் பெற்றோரின் டிஎன்ஏ விவரம் சேகரித்து டேட்டா வங்கியில் பாதுகாக்க ஐகோர்ட் உத்தரவு

மதுரை உயர் நீதிமன்ற கிளை

மதுரை: குழந்தை மாயமானது தொடர்பான புகார்கள் வரும்போது உடனடியாக பெற்றோர்களின் மரபணு (டிஎன்ஏ) விவரங்களைச் சேகரித்து டேட்டா வங்கியில் பாதுகாக்க வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

நெல்லையைச் சேர்ந்த கணவன், மனைவி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனுத் தாக்கல் செய்திருக்கின்றனர். அவர்கள் தாக்கல் செய்த மனு: "எங்களுக்குக் குழந்தை இல்லை. ஒரு குழந்தையைத் தத்தெடுக்க முடிவு செய்து அதற்காக 1.8.2022-ல் பதிவு செய்தோம். இந்நிலையில் திருமணமாகாத பெண் ஒருவருக்குப் பிறந்த ஆண் குழந்தை எங்களுக்குக் கிடைத்தது. அந்த குழந்தைக்குப் பிறப்பு சான்றிதழ் பெற முயன்றபோது சட்டப்படி தத்தெடுக்காமல் குழந்தையை வளர்த்து வருவதாக வி.கே.புரம் போலீஸார் எங்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர்.பின்னர் குழந்தையை மாவட்ட சமூகப்பணிகள் இயக்குநர் வசம் ஒப்படைத்தனர். அந்த குழந்தையை சட்டப்படி தத்தெடுக்க அனுமதி கோரி 3.3.2023-ல் மனு அனுப்பினேன். அந்த மனு அடிப்படையில் குழந்தையை சட்டப்படி தத்தெடுக்க அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு: "சிறார் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தில் குழந்தை தத்தெடுப்பு குறித்துக் கூறப்பட்டுள்ளது. மனுதாரர்கள் சட்டப்படியான குழந்தை தத்தெடுப்பு முறைகளைப் பின்பற்றவில்லை. இருப்பினும் அந்த குழந்தை 6 மாதமாக மனுதாரர்களின் பராமரிப்பிலிருந்துள்ளது. குழந்தைகள் மாயமானது தொடர்பாக ஏராளமான புகார்கள் பதிவாகி வருகின்றன. குழந்தை மாயமானது என்பது தொடர்பான புகார்கள் வரும் போது உடனடியாக பெற்றோர்களின் மரபணு (டிஎன்ஏ) விபரங்களைச் சேகரித்து டேட்டா வங்கியில் பாதுகாக்க வேண்டும். குழந்தை மீட்கப்படும் போது குழந்தையின் டிஎன்ஏவுடன் டேட்டா வங்கியில் இருக்கும் பெற்றோரின் டிஎன்ஏ விபரங்களை ஒப்பிட்டுப் பார்த்து முடிவெடுக்க முடியும்.

இது தொடர்பாக உள்துறை செயலாளரும், ஏடிஜிபி (பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு)-ம் அதிகாரிகளுக்கு உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும். இந்த உத்தரவு நிறைவேற்றப்பட்டது தொடர்பாக உயர் நீதிமன்ற பதிவுத்துறையில் 3 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கில் குழந்தை கடத்தப்படாவிட்டால் மனுதாரர்கள் குழந்தையை சட்டப்படி தத்தெடுக்க அனுமதிக்க வேண்டும். இந்த வழக்கில் வி.கே.புரம் காவல் ஆய்வாளர் எதிரிகளுக்குச் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி உண்மையைக் கண்டுபிடிக்க வேண்டும். விசாரணையை முடித்து 3 மாதத்தில் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மனுதாரர் குழந்தையைத் தத்தெடுக்கும் வகையில் மத்திய தத்தெடுப்பு வள ஆணையத்தின் விதிகளில் தளர்த்த வேண்டும்” என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x