Published : 09 Dec 2023 11:41 AM
Last Updated : 09 Dec 2023 11:41 AM

“மனித உரிமை மீறல்களை தடுப்போம்; மண்ணில் மனிதம் கப்போம்” - முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை: மனித உரிமை மீறல் நிகழ்வுகள் எங்கும் நடைபெறாமல் முற்றிலும் தடுப்போம். அதற்கு உறுதுணையாக ஒவ்வொரு நொடியும் விழிப்புடன் செயல்படுவோம். மண்ணில் மனிதம் காப்போம் என அனைவரும் இந்நாளில் உறுதியேற்போமாக என்று உலக மனித உரிமை நாளில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மனிதனை மனிதனாக மதித்திட வேண்டும் எனும் மனிதநேய உணர்வை வளர்த்திடும் நோக்கில் ஆண்டு தோறும் டிசம்பர் திங்கள் 10-ஆம் நாள், உலக நாடுகளால், “உலக மனித உரிமை நாள்” என்பது கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு உலக மனித உரிமைகள் பிரகடனத்தின் 75-ஆவது ஆண்டு ஆகும். அவ்வகையில் “அனைவருக்கும் சுதந்திரம், சமத்துவம் மற்றும் நீதி” (Freedom, Equality and Justice for All) என்பதை இந்த ஆண்டிற்கான மனித உரிமைகள் நாள் கருப்பொருளாக (Theme) ஐக்கியநாடுகள் சபை அறிவித்துள்ளது.

1948-ஆம் ஆண்டு டிசம்பர் 10-ஆம் நாள் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை (United Nations General Assembly) மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தை ஏற்று வெளியிட்டது; அப்பிரகடனத்தை ஏற்றுக்கொள்வதில் முக்கியப் பங்காற்றிய நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அதனைத் தொடர்ந்து இந்தியாவில் மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் 28.9.1993 அன்று நிறைவேற்றப்பட்டது.

அச்சட்டப்படி, இந்தியாவிலேயே முதல் மாநிலமாகத் தமிழ்நாட்டில்தான் தி.மு.க. அரசு மனித உரிமை மீறல் நிகழ்வுகள் எங்கும் நிகழக்கூடாது எனும் எண்ணத்துடன் 17.4.1997 அன்று ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் ஒருவர் தலைமையில், “தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம்” எனும் புதிய அமைப்பை ஏற்படுத்தியது.

இந்த ஆணையம், இந்திய அரசியல் சட்டமும், நீதிமன்றங்களும் ஒவ்வொரு மனிதனுக்கும் அளித்திடும் வாழும் உரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை, சுதந்திரம் போன்றவைகளை நிலைநாட்டுவதற்காகப் பாடுபடுகிறது. இந்த ஆணையம் தொடங்கப்பட்ட 17.4.1997 முதல் 2023 செப்டம்பர் வரை இந்த ஆணையத்திற்கு வரப்பெற்ற 2 இலட்சத்து 60 ஆயிரத்து 55 முறையீடுகள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, 2 இலட்சத்து 17 ஆயிரத்து 918 முறையீடுகள் மீது தீர்வு கண்டு, ஆணை பிறப்பித்து நலிந்தவர்களின் நலன் காக்கும் திருப்பணிகளைச் சிறப்பாகச் செய்து வருகிறது.

எந்த இடத்தில், எவர், எதனால் பாதிக்கப்படுகிறார்களோ, அந்த இடத்திற்கு, உடனே விரைந்து சென்று அவருக்கு ஏற்பட்ட பாதிப்பிலிருந்து அவரை விடுவித்துக் காப்பாற்றும் இதயம் கொண்டது இந்த அரசு.

மாமல்லபுரம் அருகில் பூஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த ஒரு நரிக்குறவர் சமுதாயப் பெண்ணும், அவரது குழந்தையும் அப்பகுதியில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் பங்குகொள்ளச் சென்றபோது, சிலர் அவர்களைத் தடுத்துத் திருப்பி அனுப்பிய செய்திகேட்டு, அறநிலையத்துறை அமைச்சர் மூலம் அவர்கள் விருந்தில் பங்கு பெறச் செய்ததுடன். அடுத்து, பூஞ்சேரி சென்று, அந்தப் பெண்ணின் இல்லம் சென்று, அவருக்கு ஆறுதல் கூறியது இந்த அரசு. அத்துடன், அப்பகுதி வாழ் நரிக்குறவர் மற்றும் இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த 282 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் உட்பட பல நலத்திட்ட உதவிகள் வழங்கி அவர்களைப் பெருமைப்படுத்தியதும் இந்த அரசுதான்.

அதேபோல, மகளிர்க்கு நகரப் பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணச்சலுகை வழங்கியதுடன் 2023 செப்டம்பர் 15, பேரறிஞர் அண்ணா அவர்கள் பிறந்தநாளில் மாதம் தோறும் 1000 ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தைத் தொடங்கிவைத்து, இது உதவித் தொகையல்ல, உரிமைத்தொகை என்று கூறி மகளிர் சமுதாய உரிமையைப் போற்றி, நலிந்தவர் நலம் காக்கும் நல்ல அரசாகத் திகழ்கிறது இந்த அரசு என்பதை இவ்வேளையில் சுட்டிக் காட்டிட விரும்புகிறேன்.

இந்த உணர்வோடு, மனித உரிமை மீறல் நிகழ்வுகள் எங்கும் நடைபெறாமல் முற்றிலும் தடுப்போம்! அதற்கு உறுதுணையாக ஒவ்வொரு நொடியும் விழிப்புடன் செயல்படுவோம்! மண்ணில் மனிதம் காப்போம்! - என அனைவரும் இந்நாளில் உறுதியேற்போமாக!" என்று வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x