Published : 09 Dec 2023 08:54 AM
Last Updated : 09 Dec 2023 08:54 AM
சென்னை: தொழிற்பேட்டைகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் ஏற்பட்டுள்ள இழப்பை ஈடு செய்யவும், இனி வருங்காலங்களில் இதுபோன்ற நிலைமை ஏற்படாமல் இருக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று முதல்வர் ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக ஓபிஎஸ் இன்று (டிச.9) வெளியிட்ட அறிக்கையில், ”நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதிலும், நிலைத்த வேலை வாய்ப்புகளை அளிப்பதிலும், தொழில் முனைவோர் மேம்பாடு அடைவதற்கு நாற்றங்காலாக விளங்குவதிலும் முக்கியப் பங்கு வகிப்பது குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. இப்படிப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் இருப்பிடமாக விளங்குவது தொழிற்பேட்டைகள். சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள இந்தத் தொழிற்பேட்டைகள் தற்போது தண்ணீரில் மிதக்கின்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயல் காரணமாக கிண்டி, அம்பத்தூர், பெருங்குடி, திருமழிசை, திருமுடிவாக்கம், குன்றத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள தொழிற்பேட்டைகள் தண்ணீரில் மூழ்கி போயுள்ளன. இவற்றில் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது அம்பத்தூர் தொழிற்பேட்டைதான் என்றும், கடந்த 2015 ஆம் ஆண்டு பெய்த கனமழையின்போதுகூட நிறுவனங்கள் பாதிக்கும் அளவுக்கு மழை நீர் வரவில்லை என்றும், ஆனால் தற்போது வரலாறு காணாத அளவுக்கு அம்பத்தூர் தொழிற்பேட்டைக்குள் மழைநீர் புகுந்து விலையுயர்ந்த இயந்திரங்கள் எல்லாம் பழுதாகிவிட்டன. இதன் காரணமாக உற்பத்தி பாதிப்பு மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
காப்பீட்டின் மூலம் எந்த அளவுக்கு இழப்பீடு ஈடுசெய்யப்படும் என்பது தெரியவில்லை என்றும், அம்பத்தூர் தொழிற்பேட்டையில் மட்டும் 2000 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டு இருக்கிறது என்றும், தொழில் வளர்ச்சி மற்றும் தொழிலாளர் நலன் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, தொழில் நிறுவனங்களுக்கு உதவி செய்ய அரசு முன்வர வேண்டுமென்றும் அங்குள்ள தொழிலதிபர்கள் தெரிவிக்கின்றனர்.
ஏரிகளிலிருந்து நீர் திறக்கப்பட்டதுதான் தொழிற்பேட்டைகளுக்குள் தண்ணீர் புகுந்ததற்கு காரணம் என்று உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். சில தொழிற்பேட்டைகளில் பாதிப்பின் தன்மை குறைந்து இருந்தாலும், தொழிற்பேட்டைக்கு வெளியே உள்ள நிறுவனங்களுக்குள் தண்ணீர் புகுந்ததன் காரணமாக பெரிய அளவுக்கு இழப்பு ஏற்பட்டு, உற்பத்தி பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்த நிலைமை நீடித்தால், ஒவ்வொரு ஆண்டும் பெரு வெள்ளத்தினால் இழப்பு ஏற்படும் என்ற மன நிலைக்கும், வேறு மாநிலங்களுக்கு நிறுவனங்களை மாற்றி விடலாமா என்ற சிந்தனைக்கும் தொழிலதிபர்கள் தள்ளப்படுவார்கள்.
புதிய நிறுவனங்களும் தமிழ்நாட்டை நோக்கி வராத சூழ்நிலை ஏற்படும். மொத்தத்தில், தொழிற்பேட்டைகளுக்குள் தண்ணீர் ஆறு போல ஓடுவது என்பது தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு மிகப் பெரிய ஆபத்தினை ஏற்படுத்தும். இந்த சூழ்நிலை ஏற்பட்டால், உற்பத்தி பாதிக்கப்பட்டு, அரசின் வருவாய் குறைந்து, வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிக்கும்.
தொழில் வளர்ச்சி என்பது சங்கிலித் தொடர் போல பல காரணிகளுடன் பின்னிப் பிணைந்தது என்பதைக் கருத்தில் கொண்டு, தொழிற்பேட்டைகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் ஏற்பட்டுள்ள இழப்பை ஈடு செய்யவும், இனி வருங்காலங்களில் இதுபோன்ற நிலைமை ஏற்படாமல் இருக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று முதல்வர் ஸ்டாலினைக் கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT