Published : 09 Dec 2023 05:26 AM
Last Updated : 09 Dec 2023 05:26 AM
சென்னை: ‘மிக்ஜாம்’ புயல் பாதிப்பு, மீட்புக்காக முதல்வர் பொது நிவாரண நிதிக்குஒரு மாத சம்பளத்தை முதல்வர்மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ள நிலையில், பொதுமக்கள், தன்னார்வலர்கள், தொழில் நிறுவனங்கள் நிதிவழங்குவதற்கான வங்கி கணக்குஉள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகத்தி்ல் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக ஏற்பட்ட வரலாறு காணாத பெருமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது. இந்த இயற்கைப்பேரிடரால் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தப் பேரிடர் பாதிப்பிலிருந்து மக்களை மீட்டெடுப்பதற்கு தனதுபங்களிப்பாக முதல்வர்ஸ்டாலின், ஒரு மாத சம்பளத்தை வழங்குவதாக அறிவித்துள்ளார். மேலும் அமைச்சர்கள், திமுக நாடாளுமன்ற சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்கள் ஒரு மாத சம்பளத்தை முதல்வர் பொது நிவாரண நிதிக்கு வழங்க முதல்வர் வேண்டுகோள் விடுத்ததை அடுத்து அவர்களும் வழங்க உள்ளனர்.
இந்நிலையில், நல்லுள்ளம் கொண்ட பல்வேறு தொழில் நிறுவனங்களும், தன்னார்வ அமைப்புகளும், பொதுமக்களும் இந்த மாபெரும் பணிக்கு தங்களது பங்களிப்பை வழங்கிட விருப்பம் தெரிவித்து, அரசைத் தொடர்பு கொண்டுவருகின்றனர்.
ஏற்கெனவே, தொழில் நிறுவனங்களைச் சார்ந்தவர்களும், தன்னார்வலர்களும், பொதுமக்களும் முதல்வர் பொது நிவாரண நிதி வாயிலாக, ‘மிக்ஜாம்’ மீட்புப் பணிகளுக்குத் தங்களின் பங்களிப்பை வழங்குமாறு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இவ்வாறு அளிக்கப்படும் நன்கொடைகளுக்கு 80 (G)-ன் கீழ் முழு வரிவிலக்கு உண்டு. வெளிநாடுவாழ் இந்தியர்கள் அல்லது வெளிநாட்டுமக்களிடமிருந்து பெறப்படும் நிவாரணத்துக்கும் விலக்களிக்கப்படும். இந்த நன்கொடைகளை மின்னணு முறை மூலம் வங்கி இணைய சேவைஅல்லது கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம், https://cmprf.tn.gov.in என்ற இணையதளம் வழியாக செலுத்தி பற்றுச்சீட்டு பெற்றுக் கொள்ளலாம்.
இதுதுவிர இசிஎஸ், ஆர்டிஜிஎஸ், என்இஎஃப்டி மூலம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தலைமைச்செயலக கிளைக்கு, 117201000000070 என்ற சேமிப்பு கணக்குக்கு அனுப்பலாம். இந்த வங்கியின் ஐஎஃப்எஸ்சி கோடு - IOBA0001172, எம்ஐசிஆர் கோடு - 600020061, CMPRF பான் எண் - AAAGC0038F ஆகும்.
இதுதவிர, யுபிஐ (‘tncmprf@iob’) மூலம் செலுத்தலாம். மேலும், போன்பே, கூகுள்பே, பேடிஎம், அமேசான்பே, மொபிக்விக் போன்றசெயலிகள் வாயிலாகவும் செலுத்தலாம். இவ்வாறு இசிஎஸ் மூலம் நிதி அனுப்புவோர், தங்கள் பெயர், செலுத்தும் தொகை, வங்கி மற்றும் கிளை, செலுத்தப்பட்ட தேதி, நிதிஅனுப்பியதற்கான எண், தங்கள் முழுமையான முகவரி, மின்னஞ்சல் விவரம், தொலைபேசி அல்லது கைபேசி எண்ணை தெரிவிக்க வேண்டும்.
நிவாரண நிதி வழங்கும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் ‘IOBAINBB001 Indian Overseas Bank,Central Office, Chennai’ என்ற ஸ்விப்ட் குறியீட்டை பயன்படுத்த வேண்டும். குறுக்குக் கோடிட்ட காசோலை அல்லது வங்கி வரைவோலை மூலமாக, “முதலமைச்சரின் பொது நிவாரண நிதி (Chief Minister’s Public Relief Fund)” என்ற பெயரில், ‘அரசு இணைச் செயலாளர் மற்றும் பொருளாளர், முதலமைச்சர் பொது நிவாரண நிதி, நிதித் துறை, தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகம், சென்னை - 600 009, தமிழ்நாடு, இந்தியா என்ற முகவரிக்கு அனுப்பலாம். மின்னஞ்சல் முகவரி jscmprf@tn.gov.in ஆகும்.
முதல்வர் பொது நிவாரண நிதிக்கு அளிக்கப்படும் நன்கொடைகள் தவிர, நிறுவனங்களின் சமூகப்பொறுப்பின் கீழ் பேரிடர் நிவாரணத்துக்காக நிதியுதவி வழங்கும் நிறுவனங்கள், மாநிலப் பேரிடர் மேலாண்மை அமைப்பின், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தலைமைச்செயலக கிளையில் உள்ள கணக்கான 117201000017908-ல் செலுத்தலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
டிவிஎஸ் குழுமம் ரூ.3 கோடி நிதி: ‘மிக்ஜாம்’ புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.3கோடியை, முதல்வர் ஸ்டாலினிடம், டிவிஎஸ் குழுமத்தின் தலைவர் வேணு சீனிவாசன் வழங்கினார். உடன் தலைமைச்செயலர் சிவ்தாஸ்மீனா மற்றும் டிவிஎஸ் குழும இயக்குநரும் முன்னாள் டிஜிபியுமான சேகர் ஆகியோர் இருந்தனர்.
காங். எம்எல்ஏ.க்கள் நிவாரண நிதி
காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் சார்பில் அக்கட்சியின் சட்டப்பேரவைதலைவர் கு.செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிவிப்பில், ‘‘மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ தமிழக காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் தங்கள் ஒருமாத ஊதியத்தை சிறு பங்களிப்பாக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு அளிக்கிறோம்’’ என தெரிவித்துள்ளார்.
‘மிக்ஜாம்’ புயல் நிவாரணத்துக்காக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு, ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தங்கள் ஒரு நாள் ஊதியத்தை வழங்குவதாக நேற்று முன்தினம் அறிவித்துள்ளனர். அதேபோல் தலைமைச்செயலக சங்கம், தமிழ்நாடு அரசு பொது நூலகத் துறை பணியாளர்கள் கழகம் சார்பிலும் ஒரு நாள் ஊதியம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT