Published : 17 Jan 2018 08:52 AM
Last Updated : 17 Jan 2018 08:52 AM
பிப்ரவரி 21-ம் தேதி ராமநாதபுரத்தில் கட்சி பெயர் அறிவித்து அரசியல் சுற்றுப்பயணத்தை தொடங்கவிருப்பதாக கமல் அறிவித்திருக்கிறார்.
அவ்வப்போது ட்விட்டர் தளத்தில் தனது கருத்துக்களைத் தெரிவித்து வந்தாலும், முழுமையான அரசியல் நகர்வு குறித்து கமல் எதையும் இதுவரை தெரிவிக்காமல் இருந்தார். சமீபத்தில் நடைபெற்ற விகடன் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டார் கமல். அப்போது தனது அரசியல் நிலைப்பாடு குறித்து "நான் களத்தில் இறங்கவில்லை என்ற சின்ன குற்றச்சாட்டு இருந்தது. ஜனவரி 26-ம் தேதி முதல் மக்களை சந்திக்கும் என்னுடைய பயணம் தொடங்கும்" என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தனது அரசியல் சுற்றுப்பயணத்தில் மாற்றம் செய்திருக்கிறார் கமல். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
என்னை வளர்த்தெடுத்த என் சமூகத்துக்கு நிறைய நன்றி சொல்லியிருக்கிறேன். சொல்லில் சொன்ன நன்றியைத் தாண்டிய கடமைகள் நிறைய இருக்கின்றன. அக்கடமைகளின் துவக்கமாக எம் மக்களை நேரில் சந்திக்கும் பயணத்தை நான் பிறந்த ராமநாதபுரத்திலிருந்து வருகிற பிப்ரவரி 21-ம் தேதி துவக்க இருக்கிறேன். ஆரம்பக்கட்டச் சுற்றுப்பயணத்தில் மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட மக்களைச் சந்திக்க திட்டமிட்டுள்ளேன். இது நீண்ட நாட்களாகத் திட்டமிட்டிருந்த பயணம். மக்களுடனான இந்தச் சந்திப்பு, புரட்சி முழக்கமோ, கவர்ச்சிக் கழகமோ அல்ல. என் புரிதல். எனக்கான கல்வி.
இதை மக்களோடு மக்களாக நிண்று, தேசிய ஒருமைப்பாட்டுக்கு உதாரணமாக இருக்கும் ராமநாதபுரம் மண்ணின்ல் பிப்ரவரி 21-ம் தேதி என் கட்சியின் பெயரை அறிவித்து என் அரசியல் பயணத்தைத் துவக்க இருக்க்கிறேன். இது என் நாடு, இதை நான் காப்பாற்ற வேண்டும் என்கிற எண்ணம் எனக்கு மாத்திரம் இருந்தால் போதாது. இங்கு தலைவன் என்பவன் வழிநடத்த மாத்திரமன்று, பின்பற்றவே தலைவன் இருக்க வேண்டும். பின் தொடர்வதற்கே ஒரு தலைமைப் பொறுப்பு இருக்க வேண்டும். நாமெல்லாம் சேர்ந்து இந்தத் தேரை இழுக்கிறோம் என்ற எண்ணம் வேண்டும். அதுவே ஜனநாயகம். அந்த நாயகர்களைச் சந்திக்கத் தான் நான் சென்று கொண்டிருக்கிறேன்.
இது ஆட்சியைப் பிடிப்பதற்கான திட்டமா? என்று கேட்பார்கள். ஆட்சியை ஒரு தனி ஆள் பிடிக்க முடியுமா? யாரின் ஆட்சி, யாரின் அரசு, குடியின் அரசு. அப்படியென்றால் முதலில் அவர்களை உயர்த்த வேண்டும். அதற்கான கடமைகளை நினைவுபடுத்த வேண்டும். அதைநோக்கிய பயணம்தான் இது. உங்களின் ஆதரவோடு இந்தப் பயணத்தைத் தொடங்குகிறேன். கரம் கோர்த்திடுங்கள். களத்தில் சந்திப்போம்.
இவ்வாறு கமல் தெரிவித்திருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT