Published : 09 Dec 2023 08:26 AM
Last Updated : 09 Dec 2023 08:26 AM

செங்கல்பட்டு, வாணியம்பாடி, ஆம்பூரில் லேசான நில அதிர்வு

செங்கல்பட்டு/ வேலூர்: செங்கல்பட்டு, வேலூர், வாணியம்பாடி, ஆம்பூர் பகுதிகளில் நேற்று காலை லேசான நில அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

மிக்ஜாம் புயல், கனமழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. வெள்ள நீரை வடியச் செய்தல் மற்றும் நிவாரண பணிகளை மாவட்ட நிர்வாகம் தீவிரமாக மேற்கொண்டு வரும் நிலையில், செங்கல்பட்டு பகுதியில் நேற்று காலை 7.39 மணி அளவில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 3.2 புள்ளிகள் பதிவானதாகவும், பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் இது மையம் கொண்டிருந்ததாகவும் தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்தது. எனினும், இத்தகைய அதிர்வு எதையும் இப்பகுதி மக்கள் உணரவில்லை. ஊடகங்களில் இதுபற்றிய செய்தி வெளியானதால் மக்கள் சற்று அச்சமடைந்தனர்.

வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களின் சில பகுதிகளிலும் இதே நேரத்தில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் கூறியபோது, “வேலூர் மாவட்டத்தில் அணைக்கட்டு, ஒடுக்கத்தூர், பள்ளிகொண்டா சுற்றுவட்டார பகுதிகள், திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூர், வாணியம்பாடி மற்றும் மலையை ஒட்டிய பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது. கர்நாடகாவிலும் சில இடங்களில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. எனினும், பாதிப்பு எதுவும் இல்லை. பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்” என்றார்.

வாணியம்பாடி, ஆம்பூர் பகுதிகளில் 2 முறை லேசான நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்து தெருக்களில் குவிந்தனர். வாணியம்பாடி அடுத்த அம்பூர்பேட்டை பகுதியில் ஒருசில வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் மக்கள் பதற்றம் அடைந்து வெளியேறினர்.

இதுகுறித்து வாணியம்பாடி வட்டாட்சியர் மோகன் கூறும்போது, “வாணியம்பாடி, ஆம்பூர் ஆகியவை நிலநடுக்க அபாயம் இல்லாத பகுதிகள் என்று கடந்த 2021-ல் இங்கு ஆய்வு மேற்கொண்ட புவியியல் வல்லுநர்கள் தெரிவித்தனர். எனவே, இது செங்கல்பட்டில் ஏற்பட்ட நில அதிர்வின் தாக்கமாக இருக்கலாம். வீடுகளில் விரிசல் ஏற்பட்டது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும்” என்றார்.

அதிகாரிகள் விளக்கம்: இதுகுறித்து நில அதிர்வு தொடர்பான தேசிய மைய அதிகாரிகள் கூறும்போது, ‘‘அதிகனமழைக்கு பிறகு நிலத்துக்கு அடியில் மழைநீர் செல்லும்போது, சில நேரங்களில் லேசான நில அதிர்வு ஏற்படும். செங்கல்பட்டில் ஏற்பட்ட நில அதிர்வுக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். இதுகுறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை’’ என்றனர்.

குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் நேற்று காலை 9 மணிக்கு 3.9 ரிக்டர் அளவில், 19 கி.மீ. ஆழத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. கர்நாடக மாநிலம் விஜயபுராவில் காலை 6.52 மணிக்கு 3.1 ரிக்டர் அளவில் 10 கி.மீ. ஆழத்தில் லேசான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. மேகாலயா மாநிலம் கிழக்கு காசி மலை பகுதியிலும் காலை 8.46 மணிக்கு 3.8 ரிக்டர் அளவில் 14 கிமீ ஆழத்தில் நில அதிர்வு பதிவானது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x