Published : 09 Dec 2023 06:34 AM
Last Updated : 09 Dec 2023 06:34 AM
சென்னை: சிபிசிஎல் நிறுவனத்தில் இருந்து கொசஸ்தலை ஆற்றில் வெளியேறிய எண்ணெய் கசிவு தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்காக பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. ‘மிக்ஜாம்’ புயலால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மணலி புதுநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், ஆற்று வெள்ளத்தில் பெட்ரோலிய எண்ணெய்க் கழிவு மிதந்து வருகிறது. இது அப்பகுதியில் உள்ள மீனவர்களின் படகுகளில் கரிய பிசின் போன்று ஒட்டிக் கொண்டது. மேலும்,குடியிருப்புகளின் சுவர்களில் கரிய எண்ணெய் படிவும் ஏற்பட்டது.
இது தொடர்பாக அப்பகுதி மீனவர்கள் கூறியதாவது: எண்ணூர் பகுதியில் உள்ள காட்டுக்குப்பம், நெட்டுகுப்பம், தாழங்குப்பம், எண்ணூர் குப்பம், முகத்துவார குப்பம், எர்ணாவூர் ஆகிய பகுதிகளில் உள்ள மீனவ குடியிருப்புகளில் தேங்கும் வெள்ள நீரிலும் கொசஸ்தலை ஆற்றில் செல்லும் நீரிலும் எண்ணெய் படலம்உள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்காக வெள்ளத்தில் செல்வோர்உடலிலும், உடையிலும் ஒட்டிக்கொண்டு, துவைத்தாலும் கறை விடுவதில்லை. அப்பகுதியில் பெட்ரோலிய நாற்றம் வீசுகிறது. பலருக்கு குமட்டல், வாந்தி, தலைச்சுற்றல் ஏற்பட்டு வருகிறது.
எண்ணூர் முகத்துவாரப் பகுதி, மீன்கள் இனப்பெருக்கத்துக்கு முக்கியமான பகுதி. இப்பகுதியில் எண்ணெய் படலம் ஏற்படுவது, கடல் மீன் வளத்தையே பாதிக்கும். இங்குதான் அதிக அளவில் இறால் இனப்பெருக்கம் நடக்கிறது.அதன் உற்பத்தியும் பாதிக்க வாய்ப்புள்ளது. ஆற்றில் எண்ணெய் திறந்துவிட்ட நிறுவனத்தின் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி இதுபோன்று நடைபெறாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதனிடையே, மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் எண்ணூர்மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்டனர். அதன்பின் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ``சிபிசிஎல் நிறுவனத்தின் தெற்கு வாயில் அருகே உள்ள மழைநீர் வெளியேறும் பகுதியின் அருகில் எண்ணெய் தடயங்கள் இருப்பது ஆய்வில் தெரியவந்தது. ஆனால், அந்த நிறுவனத்தின் தென் பகுதியில் இருந்து வெளியேறும் மழைநீரில் எண்ணெய் இல்லை. மிதக்கும் எண்ணெய்யை அகற்றுமாறு சிபிசிஎல் நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொருக்குப்பேட்டை பகுதியில் உள்ள பக்கிங்ஹாம் கால்வாயிலும் எண்ணெய்படிவு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது'' என கூறப்பட்டுள்ளது.
சிபிசிஎல் விளக்கம்: இது தொடர்பாக சிபிசிஎல் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ``சிபிசிஎல் நிறுவனம் எண்ணெய்யை வெளியேற்றியதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வருகின்றன. சிபிசிஎல் மணலி சுத்திகரிப்பு ஆலையில் குழாய் கசிவு ஏற்படவில்லை. மிக்ஜாம் புயல் காரணமாக இடைவிடாத மழைபெய்தது. இதனால் சுத்திகரிப்பு நிலையத்துக்குள் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டது. மணலியின் பிற தொழிற்சாலைகளும் மோசமாக பாதிக்கப்பட்டன. சுத்திகரிப்பு நிலையத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோதிலும், சிபிசிஎல் குழு, சுத்திகரிப்பு நிலையத்தின் பாதுகாப்பான செயல்பாட்டை உறுதி செய்து,தமிழகத்துக்கு எரிபொருட்கள் வழங்குவதை உறுதி செய்தது.தற்போது நீர்வரத்து குறைந்துள்ளது. எண்ணெய் கசிவு தொடர்பாக விசாரித்து வருகிறோம்'' என தெரிவித்துள்ளது. இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு தாமாக முன்வந்து வழக்காக பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT